ஆளும் தி.மு.க.வில் அதிரடி மாற்றங்களை அரங்கேற்றி வருகிறார் முதல்வர் மு.க.ஸ்டாலின். ஆனால், எடப்பாடி பழனிசாமியால் அ.தி.மு.க.வில் மா.செ. மாற்றம் என்ற ஒரு ஒன்றியச் செயலாளரைக் கூட மாற்ற முடியவில்லை என்று குமுறுகின்றனர் ரத்தத்தின் ரத்தங்கள்.

காரணம், எடப்பாடி பழனிசாமியையே திருச்சி புறநகரைச் சேர்ந்த ஒரு நிர்வாக அச்சில் ஏற்ற முடியாத வார்த்தைகளால் பேசிய ஆடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. அவரைக்கூட கண்டிக்க முடியவில்லை எடப்பாடி பழனிசாமியால்!

தமிழகம் முழுவதிலும் குமுறல்கள் இருந்தாலும், மாலைக்கோட்டை மாவட்டமான திருச்சி அ.தி.மு.க.வில்தான் குமுறல் சத்தம் அதிகளவில் கேட்கிறது.

இது தொடர்பாக மலைக்கோட்டை மாநகரில் உள்ள மூத்த ரத்தத்தின் ரத்தங்கள் நம்மிடம், ‘‘சார், மலைக்கோட்டை மாநகரான திருச்சி அ.தி.மு.க.வில் ஏராளமானவர்கள் கட்சிக்கு காலம் காலமாக உழைத்து வந்த நிலையில் கட்சி மாறி, கட்சி வந்தவருக்கு மாநகர் மா.செ. பதவியை வழங்கினார் எடப்பாடி பழனிசாமி. இந்த பதவி வழங்கியதன் பின்னணியில், எடப்பாடியாருக்கு ‘நிழலாக’ வலம் வருபவர் இருப்பதாகச் சொல்கிறார்கள். அவர் மூலம் ‘காய்’ நகர்த்திதான் மாநகர் மா.செ. பதவியை அவர் வாங்கினாராம்.

இந்த நிலையில்தான் கடந்த சில மாதங்களுக்கு முன்பு மாநகரில் உள்ள பகுதி செயலாளர்கள் பலர் மா.செ.வுக்கு எதிராக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியை அவரது சேலம் இல்லத்தில் சந்தித்து கடிதம் கொடுத்தனர் ஆனால், எந்த நடவடிக்கையும் இல்லாததால், மாநகர் பகுதியில் உள்ள பகுதி செயலாளர்கள் சோர்வடைந்துள்ளனர். இந்த நிலையில்தான் தற்போது மாநகர் முழுவதும் ‘போஸ்டர்’ அடித்து தங்களது குமுறல்களை வெளிப்படுத்தியுள்ளனர் ரத்தத்தின் ரத்தங்கள்’’ என்றவர்கள்,

அந்தப் போஸ்டரையும் நமக்கு அனுப்பி வைத்தார்கள். அந்தப் போஸ்டரில், ‘‘அ.தி.மு.க. கட்சியில் பதவி வேண்டுமா?’’ என்ற தலைப்பில், ‘‘தேவையான தகுதிகள் 1, பணம், விட்டுப்போன உறவுகள், மாமனார் உறவுகள், 2, சாதி மாற்றம், பெயர் மாற்றம் செய்து பதவி வழங்குவது போல் வழங்கப்படும். 3, கட்சிப் பொதுக்கூட்டம், போராட்டம், கொடியேற்று விழா மற்றும் கட்சி நிகழ்ச்சிகள் நடத்தியோ, கலந்தோ இருக்கக்கூடாது. 4, மாற்றுக் கட்சிகளின் இரண்டாம் கட்டத் தலைவர்களோடு நல்ல தொடர்பில் இருக்கவேண்டும்.

மாண்புமிகு புரட்சித் தமிழர் பொதுச் செயலாளர் டாக்டர் எடப்பாடியார் அவர்களை ஜெ.சீனிவாசன் ஆகிய நான் கேவலமாக திட்டியது போல் மிக கேவலமாக திட்டுவோருக்கு முன்னுரிமை அளிக்கப்படும்!

அனுகவும் ஜெ.சீனிவாசன். திருச்சி மாநகர் மாவட்டச் செயலாளர், அ.தி.மு.க.!

சோதனைகளை வெளிகாட்ட துடிக்கும் கழகத்தின் நிர்வாகிகள் மற்றும் உண்மை தொண்டர்கள், திருச்சி மாநகர் மாவட்டம், அ.இ.அ.தி.மு.க.!’’ என அந்தப் போஸ்டரில் வாசகம் இருக்கிறது.

இந்தப் போஸ்டர் இடம் பெற்றுள்ள வாசகம் உண்மைதானா? என வேறு சில நடுநிலையான ரத்தத்தின் ரத்தங்களிடம் கேட்டபோது, ‘‘சார், சமீபத்தில் நாம் தமிழர் கட்சியிலிருந்து வந்த லோகநாதனுக்கு இளைஞர், இளம்பெண்கள் பாசறை மா.செ. பதவி, தனது மைத்துனர் வாசுதேவனுக்கு பகுதி செயலாளர் பதவி, இன்னொரு உறவினர் ரோஜருக்கு பகுதி செயலாளர் பதவி என உறவினர்களுக்கு பதவி கொடுத்து வருகிறார் மா.செ.!

மறைந்த முதல்வர் ஜெயலலிதா இருக்கும் போது, திருச்சியில் அடையாளம் தெரியாமல் இருந்த வெல்லமண்டி நடராஜனை அமைச்சராக்கி அடையாளம் காட்டியவர்! அதே போல் திருச்சியில் 10, 15 வருடங்களுக்கு மேலாக இருக்கும் இளைஞர்களுக்கு இளைஞர், இளம்பெண்கள் பாசறையில் பதவி கொடுத்தால் என்ன? ஆனால், இதையெல்லாம் எடப்பாடி பழனிசாமி வேடிக்கை பார்த்துக் கொண்டு இருந்தால், திருச்சி மாவட்டத்தில் உள்ள அனைத்துத் தொகுதிகளும் மீண்டும் தி.மு.க. வசம் சென்றுவிடும் என்பதை எடப்பாடி பழனிசாமியும், அவரது நிழலும் நினைவுகூர்ந்தால் போதும்’’ என்று பொங்கினார்கள்!

எம்.ஜி.ஆரால் உருவாக்கப்பட்ட அ.தி.மு.க. ஜெயலலிதாவால் எஃகு கோட்டையாக மாறிய அ.தி.மு.க., இன்றைக்கு இப்படிப் போகிறதே என்று புலம்புகின்றனர், எம்.ஜி.ஆர்., ஜெ.காலத்து அ.தி.மு.க. மூத்த நிர்வாகிகள்!

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal