விழுப்புரம் வடக்கு மாவட்டப் பொறுப்பாளராக இருந்த மருத்துவர் சேகரை அப்பதவியில் இருந்து நீக்கியிருப்பதுதான், விழுப்புரம் உடன் பிறப்புக்களை உற்சாகமிழக்க வைத்திருக்கிறது.
விழுப்புரம் மாவட்ட திமுக-வை மூன்றாக பிரித்திருக்கும் திமுக தலைமை, புதிதாக பிறந்திருக்கும் விழுப்புரம் மத்திய மாவட்ட திமுக-வுக்கு அதிமுக-விலிருந்து வந்த லட்சுமணனை பொறுப்பாளராக்கி இருக்கிறது. 2021-ல் விழுப்புரம் தொகுதியில் முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகத்தை தோற்கடித்தவர் இந்த லட்சுமணன்.
சுமார் 12 ஆண்டுகளுக்கு முன்பு நிர்வாக வசதிக்காக விழுப்புரம் மாவட்டத்தை வடக்கு, தெற்கு என இரண்டாகப் பிரித்தது திமுக. அப்போது வடக்கு மாவட்டச் செயலாளராக பொன்முடியும், தெற்கு மாவட்டச் செயலாளராக அங்கயற்கன்னியும் நியமிக்கபட்டனர். பொன்முடி துணைப் பொதுச்செயலாளர் ஆனதும் வடக்கு மாவட்டத்துக்கு மஸ்தானும், தெற்கு மாவட்டத்துக்கு புகழேந்தியும் செயலாளர்களாக நியமிக்கப்பட்டார்கள். மஸ்தான் மீது குற்றச்சாட்டுகள் அப்போதே ஏராளமாக குவிந்தது.
இந்த நிலையில்தான், அண்மையில் உடல்நலக் குறைவால் புகழேந்தி காலமானதால் பொன்முடியின் மகன் கவுதம சிகாமணி தெற்கு மாவட்ட பொறுப்பாளராகவும் மஸ்தானுக்கு பதில் டாக்டர் சேகர் வடக்கு மாவட்ட பொறுப்பாளராகவும் நியமிக்கப்பட்டனர். டாக்டர் சேகர் வகித்து வந்த மாவட்ட அவைத்தலைவர் பதவி மஸ்தானுக்கு வழங்கப்பட்டது.
தேர்தலை குறிவைத்து விழுப்புரம் மாவட்ட திமுக-வை மீண்டும் கலைத்துப் போட்டிருக்கும் திமுக தலைமை, புதிதாக விழுப்புரம் மத்திய மாவட்டம் என்று ஒன்றை உருவாக்கி அதற்கு அதிமுக வரவான லட்சுமணனை பொறுப்பாளராக்கி இருக்கிறது. கூடவே, முன்னாள் அமைச்சரான மஸ்தானை மீண்டும் விழுப்புரம் வடக்கு மாவட்ட பொறுப்பாளராகவும், கவுதம சிகாமணியை தெற்கு மாவட்ட பொறுப்பாளராகவும் அறிவித்திருக்கிறார்கள். ஆனால், வரும் சட்டமன்றத் தேர்தலில் இந்த மாவட்டச் செயலாளர் மாற்றமே, தி.மு.க.விற்கு எதிர்வினையை ஆற்றும் என்கிறார்கள் மூத்த உடன் பிறப்புக்கள்!
இது பற்றி விழுப்புரத்தில் உள்ள மூத்த உடன் பிறப்புக்களிடம் பேசினோம், ‘‘சார், ஏற்கனவே, விழுப்புரம் வடக்கு மாவட்டச் செயலாளராக இருந்தவர் டாக்டர் சேகர். செஞ்சி மஸ்தான் மற்றும் அவரது குடும்பத்தினர் மீது குற்றச்சாட்டுகள் தலைமைக்குப் போனதால், வடக்கு மாவட்டச் செயலாளராக டாக்டர் சேகர் நியமிக்கப்பட்டார். இவர் மாவட்டச் செயலாளர் ஆனதும், மாவட்டம் முழுவதும் சுற்றுப் பயணம் மேற்கொண்டு, கட்சியை வளர்ச்சிப்பாதையில் கொண்டு சென்றவர் டாக்டர் சேகர்.
1996 முதல் தி.மு.க.வில் 27 ஆண்டுகளுக்கும் மேலாக தி.மு.க.வில் இருந்து வருகிறார் டாக்டர் சேகர். தி.மு.க. இணைஞரணிச் செயலாளர், மருத்துவர் அணிச் செயலாளர், அவைத் தலைவர், மாவட்ட பொறுப்பாளர் என தி.மு.க.வில் படிப்படியாக உயர்ந்தவர்தான் டாக்டர் சேகர்! அடிப்படையில் எலும்பு முறிவு மருத்தவரான இவர், தி.மு.க. மருத்துவர் அணி இணைச் செயலாளராக இருக்கும் போது, கட்சியினருக்கும், பொதுமக்களுக்கு ஏராளமான உதவிகளை செய்திருக்கிறார்.
இந்த நிலையில்தான் இவரது பதவி சமீபத்தில் பறிக்கப்பட்டிருக்கிறது. விழுப்புரத்திற்கு முதல்வர் மற்றும் உதயநிதி ஸ்டாலின் வந்தபோது, பிரம்மாண்டமான வரவேற்பை கொடுத்து அசத்தியவரும் இந்த சேகர்தான். ஆனால், அ.தி.மு.க.வில் இருந்த வந்த லட்சுமணக்கு பதவி கொடுக்க வேண்டும் என்பதற்காக டாக்டர் சேகர் பலிகடா ஆக்கப்பட்டிருப்பது வருத்தமளிக்கிறது. இதே நிலை நீடித்தால், விழுப்புரம் மீண்டும் அ.தி.மு.க.வின் கோட்டையாகிவிடும்’’ என்றனர்.
‘‘தி.மு.க.வைப் பொறுத்தளவில் இதற்கு முன் ஒரு ஒரு பெண் மாவட்டச் செயலாளர் (அங்கயற்கன்னி) இருந்தார். ‘பெண் மாவட்டச் செயலாளர்’ என்ற பெருமை தி.மு.க. வைத்திருந்தது. ஆனால், இப்போது யாரும் இல்லை. ஆனால், பெண்களுக்கு இடஒதுக்கீட்டை அதிகளவில் பேசும் தி.மு.க. தலைமை இரண்டு, முன்று பெண் நிர்வாகிகளையாவது மா.செ.க்களாக நியமித்திருந்தால், அந்தந்த மாவட்டங்களில் நிகழும் கோஷ்டிப் பூசலுக்கு ஒரு முற்றுப்புள்ளி வைக்கலாம். ஆனால், தலைமை அதையும் கண்டுகொள்ளாமல் இருக்கிறது. எனவே, பெண்களுக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்’’ என தி.மு.க.வில் சில மூத்த நிர்வாகிகள் கிசுகிசுக்கின்றனர்.