அமெரிக்காவில் இந்தியர்கள் கைவிலங்கிட்டு அழைத்து வரப்பட்டது தொடர்பாக விகடன் இணையதளத்தில் கார்ட்டூர் இடம்பெற்றிருந்தது. அதே போல், கடந்த சனிக்கிழமை வெளியான ஜூனியர் விகடன் இதழில் ‘சரண்டர் ஆகுங்கள் அல்லது…’ என எடப்பாடிக்கு டெல்லி கொடுக்கும் நெருக்கடியை ‘கவர் ஸ்டோரி’யாக வெளியானது. இந்த நிலையில்தான் விகடன் இணையதளம் முடக்கப்பட்டதன் பின்னணியில் பா.ஜ.க. இருக்குமோ என தமிழகத்தில் சந்தேகத்தை கிளப்பியிருக்கிறார்கள் அரசியல் கட்சித் தலைவர்கள்

இது தொடர்பாக முதல்வர் மு.க.ஸ்டாலின் தமது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது: ‘‘இதழியலில் நூறாண்டு காலமாக இயங்கி வரும் விகடன் இணையத்தளம் முடக்கப்பட்டிருப்பதற்குக் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன். கருத்துகளுக்காக ஊடகங்கள் முடக்கப்படுவது ஜனநாயகத்துக்கு அழகல்ல! பா.ஜ.க.,வின் பாசிசத் தன்மைக்கு இது எடுத்துக்காட்டு ஆகும். முடக்கப்பட்ட இணையத்தளத்துக்கு உடனடி அனுமதி வழங்கக் கேட்டுக் கொள்கிறேன்’’ என்றார்.

இந்த சர்ச்சை தொடர்பாக விகடன் குழுமம் கூறியுள்ளதாவது: ‘‘நூற்றாண்டு காலமாக விகடன் கருத்து சுதந்திரத்துக்கு ஆதரவாக தொடர்ந்து செயல்பட்டு வருகிறது. எப்போதும் கருத்து சுதந்திரத்தை முன்வைத்தே இயங்குகிறோம், இயங்குவோம்.. ஒரு வேளை இந்த அட்டைப்படம் காரணமாக மத்திய அரசால் இணையதளம் முடக்கப்பட்டிருந்தால், அதனையும் சட்டப்படி எதிர்கொள்வோம் என்பதை தெரிவித்துகொள்கிறோம்’’ என தெரிவித்திருக்கிறது.

தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன் எம்.எல்.ஏ., ‘‘அமெரிக்கா அமெரிக்கர்களுக்கே’’, ‘‘அமெரிக்காவை மீண்டும் சிறந்ததாக்குவோம்’’ உள்ளிட்ட முழக்கங்களை முன்வைத்து இரண்டாவது முறையாக ஆட்சியைப் பிடித்துள்ள டிரம்ப், அமெரிக்காவில் ‘சட்டவிரோதமாக’ குடியேறியவர்களை வெளியேற்றி வருகிறார். இதனால், அமெரிக்காவில் குடியேறியுள்ள பிற நாடுகளைச் சேர்ந்த லட்சக்கணக்கான மக்கள் மிகவும் இழிவான முறையில் வெளியேற்றப்பட்டு வருகிறார்கள். குறிப்பாக, அமெரிக்காவில் இருந்து நாடு கடத்தப்பட்ட இந்தியர்கள் கைவிலங்கிட்டு அழைத்து வரப்பட்டது தொடர்பாக, பிரதமர் மோடி பேசாமல் இருந்ததை சுட்டிக்காட்டி கடந்த 10-ஆம் தேதி, விகடன் பிளஸ் இணைய இதழில் சித்திரம் வெளியிடப்பட்டிருந்தது.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, விகடன் நிறுவனத்தின் மீது தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை மத்திய அரசிடம் புகார் அளித்திருந்தார். இந்நிலையில், மத்திய அரசின் சட்ட அமலாக்கத்துறையால் விகடன் இணையதளம் திட்டமிட்டு முடக்கப்பட்டிருப்பது, கருத்துரிமைக்கு எதிரானது. ஒன்றிய அரசின் இத்தகையை இழிவான செயல் கடும் கண்டனத்துக்குரியது’’ என்று கூறியிருக்கிறார்.

சென்னை பத்திரிகையாளர் மன்றம் சார்பில் வெளிட்டுள்ள அறிக்கையில், ‘‘அமெரிக்காவில் இருந்து இந்தியர்கள் கைவிலங்கிட்டு அழைத்து வரப்பட்ட விவகாரத்தில், மத்திய அரசை விமர்சித்து விகடன் கார்ட்டூன் வெளியிட்டது. இதற்கு பாஜகவினர் எதிர்ப்பு தெரிவித்திருந்தனர். இந்நிலையில் விகடன் இணையதளம் திடீரென்று முடக்கப்பட்டுள்ளது. ஆகவே, மத்திய அரசு இணையதளத்தை முடக்கியிருக்கலாம் என விகடன் நிறுவனம் சந்தேகம் தெரிவித்துள்ளது.

கருத்து சுதந்திரத்தை ஒடுக்கும் இந்நடவடிக்கையை சென்னை பத்திரிகையாளர் மன்றம் வன்மையாக கண்டிக்கிறது. கருத்து சுதந்திரத்தை பாதுகாக்க விகடன் நிறுவனத்துடன் உடன் நிற்கும் என்று உறுதியளிக்கிறது’’ என அதில் கூறப்பட்டுள்ளது.

தி.மு.க. துணைப் பொதுச் செயலாளரும், தூத்துக்குடி எம்.பி.யுமான கனிமொழி, ‘‘ஊடகங்களை முடக்குவதும், ஜனநாயகத்தின் குரல்வளையை நெறிப்பதும் ஒன்று. இதழியல் துறையில் நூற்றாண்டு கானும் விகடன் நிறுவனத்தின் இணையதளம் முடக்கப்பட்டிருப்பது கருத்துரிமைக்கு ஏற்பட்டிருக்கும் அச்சுறுத்தல். மத்திய அரசு உடனடியாக முடக்கப்பட்ட இணையதளம் செயல்பட அனுமதிக்க வேண்டும். ஊடக சுதந்திரம் காக்க ஒருமித்த குரல் கொடுப்போம்’’ என கூறியிருக்கிறார்.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal