த.வெ.க. தலைவர் விஜய்யை பிரசாந்த் கிஷோர் சந்தித்தது பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், வருகிற ஜூலை மாதம் ராஜ்ய சபா எம்.பி.யாகும் கமல்ஹாசனை அமைச்சர் சேகர் பாபு சந்தித்து பேசியிருக்கிறார்.

சினிமாவில் இருந்து அரசியலுக்குள் நுழைந்தவர் கமல் ஹாசன். மக்கள் நீதி மய்யம் என்ற கட்சியை தொடங்கினார். அரசியலில் ஜொலித்து ஆட்சியை பிடித்து விடலாம் என்று கமல் ஹாசன் நினைத்து கட்சியை தொடங்கினார். ஆனால் அவருக்கு மக்களிடம் ஆதரவு கிடைக்கவில்லை.

கமல்ஹாசன் கூட 2021 சட்டசபை தேர்தலில் கோவை தெற்கு தொகுதியில் போட்டியிட்டு தோல்வியடைந்தார். இதையடுத்து கடந்த ஆண்டு நடந்த நாடாளுமன்ற தேர்தலின்போது கமல்ஹாசன் திமுக கூட்டணியில் இணைந்தார். திமுக கூட்டணியில் கமல்ஹாசனுக்கு போட்டியிட வாய்ப்பு வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அவருக்கு வாய்ப்பு கொடுக்கப்படவில்லை. மாறாக திமுக சார்பில் கமல்ஹாசன் கட்சிக்கு ஒரு ராஜ்யசபா சீட் வழங்குவதாக அறிவிக்கப்பட்டது. அதன்படி இந்த ஆண்டு மக்கள் நீதி மய்யத்துக்கு ராஜ்யசபா சீட்டை திமுக வழங்கும். இதற்கிடையே தான் 3 மாதம் வெளிநாட்டில் இருந்த கமல்ஹாசன் இப்போது சென்னை திரும்பி உள்ளார். அவர் சென்னை வந்தவுடன் இந்து அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, நடிகர் கமல்ஹாசனை திடீரென்று சந்தித்துள்ளார்.

இந்த சந்திப்பின் பின்னணி குறித்த முக்கிய தகவல்கள் வெளியாகி உள்ளன. அதாவது முதல்வர் ஸ்டாலின் உத்தரவுப்படி அமைச்சர் சேகர்பாபு, கமல்ஹாசனை சந்தித்துள்ளார். அப்போது இருவரும் தற்போதைய அரசியல் நிலவரம் பற்றி பேசியுள்ளனர். குறிப்பாக மக்கள் நீதி மய்யத்துக்கு வழங்கப்பட வேண்டிய ராஜ்யசபா எம்பி பதவி பற்றி விவாதிக்கப்பட்டுள்ளது.

அதாவது தமிழகத்தில் இருந்து தற்போது ராஜ்யசபா எம்பிக்களாக உள்ள மதிமுகவின் வைகோ, திமுகவின் அப்துல்லா, வில்சன், சண்முகம், அதிமுகவின் சந்திரசேகரன், பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் ஆகியோரின் பதவிக்காலம் விரைவில் முடிவுக்கு வர உள்ளது. இதன்மூலம் தமிழகத்தில் 6 ராஜ்யசபா எம்பிக்கள் மீண்டும் தேர்வு செய்யப்பட உள்ளனர். இதற்கான தேர்தல் என்பது ஜுலை மாதம் நடைபெற வாய்ப்புள்ளது.

இந்த சமயத்தில் மக்கள் நீதி மய்யத்துக்கு ஒரு ராஜ்யசபா சீட்டை திமுக தலைமை வழங்க உள்ளது. தவிர, சட்டமன்றத் தேர்தல் பிரச்சாரம் தொடர்பாகவும் அமைச்சர் சேகர் பாபு, கமல்ஹாசன் ஆகியோர் விவாதித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியிருக்கிறது. இதன்மூலம் விரைவில் நடிகர் கமல்ஹாசன் திமுக எம்எல்ஏக்கள் உதவியுடன் ராஜ்யசபா எம்பியாக உள்ளார் என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal