பிரதமர் மோடி தொடங்கி மக்களின் பல்சுக்கு ஏற்றார்போல் தேர்தல் வியூகம் அமைத்து கொடுத்து வெற்றி பெற வைத்த பிரசாந்த் கிஷோர், விஜயை சந்தித்து பேசிய நிலையில் தவெகவின் சிறப்பு ஆலோசகராக செயல்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

பெரும் ரசிகர் படையை கொண்ட விஜயின் அரசியல் வருகை, 2026 ஆம் ஆண்டு சட்டப்பேரவை தேர்தலில் தாக்கத்தை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதற்கு ஏற்றார் போல் கட்சியின் உட்கட்டமைப்பை தவெக வலுப்படுத்தி வருகிறது. வெற்றி வியூகங்களை வகுப்பதில் முனைப்பு காட்டும் அக்கட்சி தலைவர் விஜய், அன்புமணி, சீமான் உள்ளிட்டோருக்காக பணியாற்றிய ஜான் ஆரோக்கியசாமியை தவெக தேர்தல் வியூக வகுப்பாளராக நியமித்துள்ளார்.

விசிகவில் இருந்து விலகிய ஆதவ் அர்ஜுனா அண்மையில் தவெகவில் இணைந்த போது, அச்சமயமே அவருக்கு தேர்தல் பிரிவு பொதுச் செயலாளராக பதவி வழங்கப்பட்டது. கூடவே ஜான் ஆரோக்கியசாமியுடன் இணைந்து தேர்தல் வியூக வகுப்பாளராக பணியாற்றுவார் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. அதே போல், தற்போது தவெகவுக்காக பிரசாந்த் கிஷோரை மீண்டும் களம் இறக்கி உள்ளார் என்பதுதான் அரசியல் வட்டாரத்தில் ஹாட் டாபிக் ஆக மாறி உள்ளது. சென்னை நீலங்கரையில் உள்ள விஜயின் வீட்டிற்கு வந்த பிரசாந்த் கிஷோர், அவருடன் சுமார் இரண்டரை மணி நேரம் ஆலோசனை நடத்தினார். அதன்பிறகு ஆதவ் அர்ஜுனா வீட்டிற்கு சென்று ஒரு மணி நேரம் ஆலோசனை நடத்தியிருக்கிறார் பிரசாந்த் கிஷோர்.

இந்த ஆலோசனையின் போது விஜய்யிடம் பேசிய பிரசாந்த் கிஷோர், ‘‘தமிழ்நாட்டு மக்களுக்கு உங்கள் மீது ஒரு ஈர்ப்பு இருக்கிறது. நீங்கள் கட்சியை சரியான பாதையில் வழி நடத்திச் சென்றால், அடுத்த (2026க்குப் பிறகு….) சட்டமன்றத் தேர்தலில் முதல்வர் நாற்காலியில் நீங்கள் அமரலாம்..!

ஆனாலும், 2026 சட்டமன்றத் தேர்தலும் உங்களுக்கு முக்கியத்துவம் வாய்ந்தது. உங்கள் கட்சியை எப்படியெல்லாம் முடக்க முடியும் என ஆளும் கட்சி கணக்குப் போட்டுக் காத்திருக்கும். அதுவும் 2026 சட்டமன்றத் தேர்தலில் தமிழகத்தில் உள்ள சில அரசியல் கட்சிகளை உங்களுடன் கூட்டணி வைக்கவிடாமல் தடுக்கும் வேலையையும் மறைமுகமாக செய்யும்! (2016ல் அமைந்த மக்கள் நலக் கூட்டணி போல் உங்கள் கட்சித் தலைமையில் ஒரு கூட்டணி அமைந்தால் அது ஆளும் கட்சிக்கு சாதகமாகிவிடும்)

2026 சட்டமன்றத் தேர்தல் குறித்த தற்போதைக்கு நீங்கள் எதுவும் பேச வேண்டாம்… குறிப்பாக அ.தி.மு.க.வுடனான கூட்டணி குறித்து நீங்கள் எதுவுவே இப்போதைக்கு பேசவேண்டாம்… உங்களை வைத்தே (த.வெ.க. கட்சி) மீண்டும் தி.மு.க. ஆட்சியமைக்க முயலும்… அதற்கும் நீங்கள் இடம் கொடுத்துவிடக்கூடாது…’’ என்பது உள்பட ஏராளமான யோசனைகளை வழங்கியிருக்கிறார் பிரசாந்த் கிஷோர்!

சமீபத்தில் கூட விஜய்க்கு நெருக்கமாக இருந்த ‘மூத்த’ பத்திரிகையாளர் ஒருவர் ஆளும் தரப்பிற்கு சாதகமாக விஜய் தன்னுடன் பகிர்ந்த தகவல்களையும், அ.தி.மு.க.வுடனான கூட்டணி குறித்த விவரங்களையும் மீடியாக்களில் பகிர்ந்து த.வெ.க.வை டேமேஜ் செய்யும் பணியில் இறங்கியிருக்கிறார். இந்தப் பின்னணியிலும் ஆளும் தரப்புதான் இருக்கிறது என்கிறார்கள்.

எனவே, 2026 தேர்தல் குறித்தும்… பத்திரிகையாளர்கள் சந்திப்பு குறித்தும் விஜய் தள்ளிப் போடுவது நல்லது என்கிறார்கள், விஜய்க்கு விசுவாசமானவர்கள்!

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal