கடந்த சில மாதங்களுக்கு முன்பாக எடப்பாடி பழனிசாமியை சந்தித்த சீனியர்கள், ‘அனைவரும் ஒன்றிணைவோம்’ என எடப்பாடியிடம் வலியுறுத்தியதாகவும், ஆனால், எடப்பாடி பழனிசாமி ஒத்துக்கொள்ளவில்லை என சீனியர் பத்திரிகையாளர்கள் டி.வி. விவாதங்களில் பேசினார்கள்.
‘இணைப்பு’ விவகாரம் விஸ்வரூபம் எடுத்த நிலையில், ‘அப்படி யாரும் என்னிடம் வலியுறுத்தவில்லை’ என எடப்பாடி பழனிசாமி பலநாட்கள் கழித்து இதற்கு பதில் அளித்தார். ஆனால், ‘நாங்களை எடப்பாடியிடம் இணைப்பை வலியுறுத்தவில்லை’ என அந்த சீனியர்கள் இதுநாள் வரை வாய்திறக்க வில்லை.
இந்த நிலையில்தான் அ.தி.மு.க.வில் மிகவும் சீனியரான செங்கோட்டையன் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக தனது அதிருப்தியை ‘புறக்கணிப்பு’ என்ற கோபத்துடன் வெளிப்படுத்தியிருக்கிறார். எடப்பாடி பழனிசாமிக்கு இடது, வலதாக இருக்கும் எஸ்.பி.வேலுமணியும் அ.தி.மு.க. ஒன்றுபட வேண்டும் என்பதை விரும்புகிறார். ஆனால், கே.பி.முனுசாமி மட்டும்தான் சசிகலா, டி.டி.வி.யை மீண்டும் இணைக்க எடப்பாடியிடம் எதிர்ப்பு தெரிவித்து வருகிறாராம்.
அ-.தி.மு.க.வின்¢ மிக மூத்த சீனியரான செங்கோட்டையன் முதன் முறையாக எடப்பாடி பழனிசாமி மீதான அதிருப்தியை வெளிப்படுத்தியிருப்பது பற்றி அ.தி.மு.க.வில் உள்ள சீனியர்களிடம் சிலரிடம் பேசினோம்.
‘‘சார், கடந்த சில மாதங்களாக அமைதியாக இருந்த அதிமுகவில் மீண்டும் புயல் வீச தொடங்கியுள்ளது எடப்பாடி பழனிச்சாமி கலந்துகொண்ட விழாவில் ஜெயலலிதா எம்ஜிஆர் படங்கள் இடம் பெறவில்லை என அந்த நிகழ்ச்சியை புறக்கணித்துள்ளார் முன்னாள் அமைச்சரும் கட்சியின் மிக மூத்த சீனியருமான செங்கோட்டையன்.
அவிநாசி & அத்திக்கடவு திட்டம் தொடர்பாக எடப்பாடி பழனிச்சாமிக்கு கோவையில் நடைபெற்ற பாராட்டு விழாவிற்கு அழைப்பு விடுக்கப்பட்டு இருந்தும் அதில் செங்கோட்டையன் கலந்து கொள்ளவில்ல. இதனால் பரபரப்பு ஏற்பட்ட நிலையில் இது தொடர்பாக விளக்கம் அளித்த அவர் விழா குழுவினரிடம் மேடையில், ‘‘எம்ஜிஆர், ஜெயலலிதா படங்களை வைக்க வேண்டும் என கூறியும் அவர்கள் படங்கள் இல்லை எனவும், அவிநாசி அத்திக்கடவு திட்டத்திற்காக நிதி உதவி வழங்கியதோடு ,அதற்கு அடித்தளமாக இருந்த ஜெயலலிதாவின் படம் வைக்கப்படவில்லை. அதனால் கலந்து கொள்ளவில்லை’’ என விளக்கமும் அளித்திருந்தார்.
இந்த நிலையில் செங்கோட்டையனின் பேச்சு புகைப்படங்கள் வைக்கப்படவில்லை என்பதற்கான அல்ல, எடப்பாடி பழனிச்சாமி மீதான கோபத்தின் வெளிப்பாடு தான் அது என்கின்றனர். குறிப்பாக சேலம் நெடுஞ்சாலை நகரில் எடப்பாடி பழனிச்சாமியின் வீட்டில் நடந்த விவாதம் தான் இவ்வளவு பிரச்சனைக்கு காரணம். மக்களவைத் தேர்தலில் அதிமுக படுதோல்வியை சந்தித்த நிலையில் கடந்த ஜூலை மாதத்தில் சேலம் நெடுஞ்சாலை நகரில் எடப்பாடி பழனிச்சாமியை முன்னாள் அமைச்சர்களான செங்கோட்டையன், வேலுமணி, தங்கமணி, கேபி அன்பழகன், சிவி சண்முகம், நத்தம் விஸ்வநாதன் ஆகியோர் சந்தித்து பேசினர்.
ஏற்கனவே சட்டமன்றத் தேர்தல் தொடங்கி மக்களவைத் தேர்தல் வரை பல தேர்தல்களை அதிமுக படுதோல்வியை அதிமுக சந்தித்திருக்கிறது. கட்சியிலிருந்து ஓபிஎஸ், டிடிவி தினகரன், சசிகலா ஆகியோர் வெளியேற்றப்பட்டதால் அதிமுக பலவீனமாக காட்சியளிக்கிறது. இதை வைத்து எதிர்க்கட்சியினரும் அதிமுகவை பலவீனமாக இருப்பதாக விமர்சித்து வருகின்றனர். அதற்கு இடம் கொடுக்கக் கூடாது. மேலும் சசிகலா, ஓபிஎஸ்-ஐ மீண்டும் கட்சிக்குள் வந்தால் தொண்டர்கள் பலமும் நிர்வாகிகள் பலமும் மேலும் அதிகரிக்கும்.
எனவே அவர்களை மீண்டும் கட்சியில் சேர்க்க வேண்டும் என வலியுறுத்தினார்களாம். ஆனால் எடப்பாடி பழனிச்சாமியோ அதற்கு சம்மதிக்கவில்லை. ஆனால் அந்தக் கூட்டத்தில் கலந்து கொண்ட செங்கோட்டையன், நத்தம் விஸ்வநாதன், சிவி சண்முகமும் ஆகியோர் சசிகலா, ஓபிஎஸ்ஐ மீண்டும் கட்சியில் சேர்க்க வேண்டும் என உறுதியாக பேசினார்கள்.
ஏற்கனவே கொங்கு மண்டலத்தைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி பாஜகவுடன் கூட்டணி வைக்க வேண்டும் என வலியுறுத்தி வரும் நிலையில் அப்போது சசிகலா மீண்டும் கட்சிக்குள் வரவேண்டும் என செங்கோட்டையனும், சிவி சண்முகமும் வலியுறுத்தி பேசியது எடப்பாடி பழனிச்சாமியை ரசிக்க வைக்கவில்லை.
இதன் காரணமாக தனக்கு எதிராக சதி நடப்பதாக உணர்ந்த அவர் செங்கோட்டையன், சிவி சண்முகம், கேபி அன்பழகன் ஆகியோரை ஓரங்கட்ட தனது ஆதரவு முன்னாள் அமைச்சர்களுக்கு உத்தரவிட்டதாக சொல்கிறார்கள். இதையடுத்தே எடப்பாடி ஆதரவு சீனியர்கள் செங்கோட்டையன் உள்ளிட்ட சீனியர்களை ஓரம் கட்டி இருக்கின்றனர். கட்சி அலுவலகத்தில் நடக்கும் கூட்டங்களில் கூட அவர்களை உரிய முக்கியத்துவம் அளிக்காமல் புறக்கணித்திருக்கிறார்கள்.
இதன் காரணமாகவே நீண்ட நாட்களாக அதிருப்தியில் இருந்த செங்கோட்டையன் தற்போது ஜெயலலிதாவின் புகைப்படத்தை காரணமாக சொல்லி பிரச்சினையை கிளப்பி இருக்கிறார். மேலும் ஏற்கனவே அதிருப்தியில் இருக்கும் கோகுல இந்திரா உள்ளிட்ட சிலரும் அடுத்தடுத்து பேசுவார்கள்.
காரணம், நேற்று கட்சி ஆரம்பித்த நடிகர், தனக்கு எத்தனை சதவீதம் வாக்குகள் இருக்கிறது என்பதை அறியாமலேயே, ‘த.வெ.க. தலைமையை ஏற்கும் கட்சிகளுடன் கூட்டணி’ என அடித்துப் பேசுகிறார். ஆனால், 50 ஆண்டுகாலம் ஆட்சிப் புரிந்த அ.தி.மு.க.விற்கு தற்போது தலைமை வகிக்கும் எடப்பாடியால் அப்படி பேச முடியவில்லை. காரணம், எடப்பாடி பழனிசாமியின் பிடிவாதத்தால் அ.தி.மு.க. இன்றைக்கு பலவீனமாக இருக்கிறது.
அதே நிலை நீடித்தால், அ.தி.மு.க. என்ற மாபெரும் இயக்கம் எடப்பாடி பழனிசாமியின் கையிலிருந்து விலகிவிடும். அல்லது தொண்டர்களால் விலக்கப்பட்டுவிடும் என்பதுதான் உண்மை. அதனால்தான், தனக்கு எதிராக செயல்படும் சீனியர்களை அ.தி.மு.க.வில் இருந்து ஓரங்ககட்டி வருகிறார் எடப்பாடி பழனிசாமி. இதற்கொல்லாம் இன்னும் ஓரிரு மாதங்களில் விடிவு பிறக்கம்’’ என்றனர்!
ஏதோ, ‘அம்மாவின் ஆட்சி மீண்டும் மலருமா?’ என காத்திருக்கும் தொண்டர்களின் கனவு நிறைவேறினால் சரி..!