தமிழகத்தில் நாளுக்கு நாள் கள்ளக்காதல் அதிகரித்து, அதன் மூலம் கொலைகளும் நடந்து வருவதுதான் அதிர்ச்சியளிக்கிறது. சேலத்தில் ஒரு பெண்ணுடன் 2 ஆண்கள் ரகசியமாக ‘உறவு’ வைத்த விவகாரத்தில் ஒருவர் படுகொலை செய்யப்பட்டிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

சேலத்தை அடுத்த வீராணம் வீமனூர் காட்டுவளவை சேர்ந்தவர் குமரவேல். 29 வயதாகிறது. இவர் டெம்போ டிரைவராக உள்ளார். கடந்த 6 வருடங்களுககு முன்பு, தன்னுடைய தனது உறவுக்கார பெண்ணை காதலித்து திருமணம் செய்துள்ளார். ஆனால், சில மாதங்களிலேயே இவர்களுக்குள் கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதனால், இவரைவிட்டு, மனைவி பிரிந்து சென்றுவிட்டார்.

இதையடுத்து, அதே பகுதியில் வசித்து வரும் ஒரு பெண்ணுடன், குமரவேலுக்கு நட்பு ஏற்பட்டது. இந்த நட்பு காதலாக மலர்ந்து, இருவரும் நெருங்கி பழகினார்கள்.. பல இடங்களுக்கு சுற்றித்திரிந்து உல்லாசமாகவும் இருந்திருக்கிறார்கள். ஆனால், அந்த பெண்ணுக்கு, பிரகாஷ் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. 38 வயதான பிரகாஷ், வீராணம் துளசிமணியனூரை சேர்ந்தவர் ஆவார். பெண்ணுடன் நெருங்கி பழகிய நிலையில், அவரும் அடிக்கடி அந்த பெண்ணின் வீட்டிற்கு வந்து சென்றுள்ளார். இந்த விஷயம் குமரவேலுவுக்கு தெரிந்து பிரகாஷை கண்டித்திருக்கிறார். ஒருகட்டத்தில் இருவருமே மோதிக் கொண்டார்கள்.

சம்பந்தப்பட்ட பெண்ணை வைத்து, இருவருக்கும் இடையில் பலமுறை தகராறு வந்திருக்கிறது. அந்தவகையில், நேற்று முன்தினம், இரவு 9 மணியளவில் குமரவேல், துளசிமணியனூர் அய்யனாரப்பன்கோயில் அருகே மது அருந்தி கொண்டிருந்ததாக கூறப்படுகிறது. அப்போது பிரகாஷ், தன்னுடைய நண்பர்கள் மாணிக்கம், கனகராஜ் ஆகியோரை அழைத்து வந்து, தன்னுடைய காதலியுடனான தொடர்பை கைவிடும்படி கூறி தகராறு செய்துள்ளார்..

பிறகு அந்த கும்பல், திடீரென குமரவேலை சரமாரியாக தாக்கி, அவரை கீழே தள்ளி, கத்தியால் அவரது கழுத்தை அறுத்து படுகொலை செய்துவிட்டு தப்பினார்கள். இரவு நேரத்தில் நடந்த இந்த கொலையால், அந்த பகுதியே அதிர்ந்துபோய்விட்டது.. ஆனால், உடனடியாக இதுகுறித்து வீராணம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதையடுத்து, உடனடியாக வழக்கு பதிந்து பிரகாஷ், மாணிக்கம், கனகராஜ் ஆகிய 3 பேரையும், இரவோடு இரவாக மடக்கி பிடித்து கைது செய்துவிட்டனர்.

இதில் கைதாகியிருக்கும் பிரகாஷ், மிகப்பெரிய ரவுடி என்கிறார்கள். அடிதடி, வழிப்பறி, கஞ்சா வழக்குகள் இன்னமும் இவர் மீது நிலுவையில் உள்ளது. ரவுடி லிஸ்ட்டில் இருக்கும் பிரகாஷ், ஒருமுறை குண்டர் தடுப்பு சட்டத்திலும் கைதாகியிருக்கிறார். தற்போது கொலை வழக்கிலும் கைதாகி உள்ளார். ஒரு பெண்ணுடன் 2 பேர் தகாத உறவு வைத்துக்கொண்டதுடன், இந்த மோதல் கொலை வரை சென்றுள்ள சம்பவம் சேலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal