ராசிபுரம் அருகே காரில் கடத்தப்பட்ட கல்லூரி மாணவி 12 மணி நேரத்தில் பத்திரமாக மீட்கப்பட்ட நிலையில், 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அடுத்த சிங்களாந்தபுரத்தைச் சேர்ந்த தமிழ்ச்செல்வன் என்பவரது மகள் விஜயஸ்ரீ (20). இவர் ஏ.கே. சமுத்திரம் பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் இளங்கலை 3-ம் ஆண்டு படித்து வருகிறார். கல்லூரி பேருந்தில் சென்று வரும் இவர், நேற்று மாலை கல்லூரிக்குச் சென்று விட்டு தனது வீட்டிற்கு திரும்பியுள்ளார். அப்போது சிங்களாந்தபுரம் பேருந்து நிறுத்தத்தில் இறங்கிய விஜயஸ்ரீயை அங்கு காரில் காத்திருந்த 3 பேர் கொண்ட கும்பல் கடத்திச் சென்றனர்.
இதனை தொடர்ந்து மாணவியின் தந்தை அளித்த புகாரின் பேரில் பேளுக்குறிச்சி காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து மாணவியை எதற்காக கடத்தினார்கள், யார் கடத்தினார்கள் என்பது குறித்து விசாரணை மேற்கொண்டனர்.
அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா காட்சிகளைக் கொண்டு கடத்திய நபர்களை தேடினர். இதைத் தொடர்ந்து செல்போன் சிக்னல்களை கொண்டு தொடர்ந்து காவல்துறையினர் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.
இந்நிலையில், மாணவியை கடத்திய கும்பலை காருடன் ஓசூரில் மடக்கிப் பிடித்தனர். தொடர்ந்து நடத்திய விசாரணையில், சிங்களாந்தபுரம் பகுதியைச் சேர்ந்த மாணவியை கடத்திய தமிழ்ச்செல்வன், கார்த்திக், தமிழ் பாண்டியன் ஆகிய 3 பேரையும் காவல் துறையினர் கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். கடத்தப்பட்ட மாணவியை 12 மணி நேரத்தில் மீட்ட காவலர்களுக்கு நாமக்கல் எஸ்பி பாராட்டினார்.