தமிழகத்தில் ஊழலுக்கு எதிராக ‘தமிழக வெற்றிக் கழகம்’ என்ற அரசியல் கட்சியை ஆரம்பித்திருக்கிறார் நடிகர் விஜய்!
மத்தியில் ஆளும் பா.ஜ.க.வும், மாநிலத்தில் ஆளும் தி.மு.க.வையும் எதிர்த்து அரசியல் செய்யத் தொடங்கியிருக்கிறார். சமீபத்தில்தான் மாவட்டப் பொறுப்பாளர்களை நியமித்து வருகிறார். விரைவில் இந்த நியமனங்கள் முடிவுக்கு வரும் என்கிறார்கள்.
இந்த நிலையில்தான், விசிகவில் இருந்து வெளியேறிய ஆதவ் அர்ஜுனா, அதிமுகவில் இருந்து வெளியேறிய சிடிஆர் நிர்மல் குமார், பிரபல யூட்யூபரும் பேச்சாளருமான ராஜ்மோகன் ஆகியோருக்கு கட்சியில் சேர்ந்த சில நிமிடங்களிலேயே தமிழக வெற்றிக் கழகத்தில் மாநில பதவி வழங்கப்பட்டிருக்கிறது.
கட்சியில் இணைந்த சில நிமிடங்களிலேயே பதவி வழங்கப்பட்டிருப்பதுதான் கட்சிக்குள்ளும், கட்சிக்கு வெளியேயும் சில விமர்சனங்களை ஏற்படுத்தியிருக்கிறது. இது அரசியலில் தவிர்க்க முடியாத ஒன்றுதான். காரணம், தி.மு.க., அ.தி.மு.க.விலும் மாற்றுக் கட்சியிலிருந்து வந்தவர்களுக்கு பதவி கொடுப்பது வழக்கம்தான்.
ஆனால், த.வெ.க.வில் சில முக்கியமான முடிவுகளை விஜய் எடுத்திருப்பதாக தகவல்கள் வெளியாகியிருக்கிறது. அதாவது, மற்ற கட்சிகளில் அமைச்சர்கள் மற்றும் முக்கிய பொறுப்புகளை வகித்து விட்டு, அங்கிருந்து விலகியிருக்கும் அல்லது விலக்கப்பட்டிருக்கும் முக்கிய நபர்களை உடனடியாக த.வெ.க.வில் இணைக்க வேண்டாம் என்று சொல்லியிருக்கிறாராம்.
காரணம், ஊழலுக்கு எதிராகவும், ஊழலை எதிர்த்தும் பேசிவருகிறோம். அப்படியிருக்கும் போது திராவிடக் கட்சிகளில் பதவி வகித்தவர்கள் மீது கண்டிப்பாக ஊழல் குற்றச்சாட்டுகள் இருக்கும். அவர்களை கட்சியில் இணைத்து பதவி கொடுத்தால் கடும் விமர்சனம் எழும் என்பதால் இந்த முடிவை எடுத்திருக்கிறாராம் விஜய்!
இதனால், தி.மு.க. மற்றும் அ.தி.மு.க.வில் இருந்து த.வெ.க.வில் இணைய காத்திருக்கும் ‘மாஜி’க்கள் கடும் ஏமாற்றத்தில் இருக்கிறார்களாம்! நேற்று இணைந்த இருவர் மீதும் அரசியல் ரீதியாகவும், ஊழல் ரீதியான குற்றச்சாட்டுகள் இல்லாததால் இணைந்த சில நிமிடங்களில் பதவியை கொடுத்திருக்கிறார் விஜய். இப்போது காரணம் புரிகிறதா என்கிறார்கள் விஜய்க்கு நெருக்கமானவர்கள்!