சென்னை பனையூரில் உள்ள தமிழக வெற்றிக் கழக அலுவலகத்தில் நடந்த விழாவில், ஆதவ் அர்ஜூனா, நிர்மல் குமார் ஆகியோர் கட்சியில் இணைந்தனர். ஆதவ் அர்ஜூனாவுக்கு தேர்தல் பிரிவு பொதுச்செயலாளர் பதவி வழங்கப்பட்டுள்ளது. நிர்மல் குமாருக்கு துணை பொதுச்செயலாளர் பதவி வழங்கப்பட்டு உள்ளது.
நடிகர் விஜய்யின் த.வெ.க., தொடங்கி ஓராண்டை எட்ட உள்ளது. கட்சியில் காலியாக உள்ள பதவிகளுக்கு நிர்வாகிகளை நிரப்புவதில் விஜய் அதிக கவனம் செலுத்தி வருகிறார். சில தினங்களுக்கு முன், விஜய்யை அவரது பனையூர் அலுவலகத்தில் லாட்டரி மார்ட்டின் மருமகனும், வி.சி.க., முன்னாள் நிர்வாகியுமான ஆதவ் அர்ஜூனா சந்தித்து பேசினார்.
இந்த சந்திப்பின் மூலம் அவர் தவெகவில் இணைய இருப்பதாக பேச்சுக்கள் வந்த வண்ணம் இருந்தன. இந்நிலையில், இன்று (ஜனவரி31) சென்னை பனையூரில் உள்ள தமிழக வெற்றிக் கழக அலுவலகத்தில் நடந்த விழாவில், ஆதவ் அர்ஜூனா இணைந்தார். அதேபோல், அ.தி.மு.க., ஐ.டி., பிரிவு இணைச் செயலாளர் நிர்மல் குமாரும் விஜய் முன்னிலையில் த.வெ.க.,வில் இணைந்தார். ஆதவ் அர்ஜூனாவுக்கு தேர்தல் பிரிவு பொதுச்செயலாளர் பதவி வழங்கப்பட்டு உள்ளது. நிர்மல் குமாருக்கு துணை பொதுச்செயலாளர் பதவி வழங்கப்பட்டு உள்ளது.
முன்னதாக ஆட்சியில் சம பங்கு என விஜய் பேசியதை விசிகவின் துணைப் பொதுச் செயலாளராக இருந்த போது ஆதவ் அர்ஜூனா வரவேற்றார். தொடர்ந்து கட்சித்தலைமையின் எண்ணத்துக்கு மாறாக அவர் பேசிய கருத்துக்கள் சர்சையை கிளப்பியது. தி.மு.க., மற்றும் விசிக இடையே மோதல் சூழல் உருவானதை தொடர்ந்து ஆதவ் அர்ஜூனா கட்சியில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டார். தொடர்ந்து அவர் அக்கட்சியில் இருந்தும் விலகினார் என்பது குறிப்பிடத்தக்கது.
பொதுவாக ஒரு அரசியல் கட்சியில் இணைந்த பிறகு, கட்சிக்காக எந்தவித பிரதிபலனும் எதிர்பார்க்காமல் வேலை செய்பவர்களுக்குத்தான் பதவி கிடைக்கும். ஆனால், வி.சி.க.வில் தனது பண பலம் மற்றும் ‘வியூக’ பலம் மூலம் துணைப் பொதுச் செயலாளர் பதவியை பெற்றார் ஆதவ் அர்ஜுனா! திருமாவின் பேச்சை மீறி செயல்பட்டதால் அக்கட்சியில் இருந்து நீக்கப்பட்டார் ஆதவ் அர்ஜுனா! அதன் பிறகு த.வெ.க.வில் இணைந்த ஆதவ் அர்ஜுனாவுக்கு முக்கிய பதவி வழங்கப்பட்டிருக்கிறது.
அதே போல் 7 வருடத்தில் 5 முறை கட்சித் தாவல் நடத்திய நிர்மல் குமாருக்கு த.வெ.க.வில் முக்கிய பதவி வழங்கப்பட்டிருப்பதால், தி.மு.க., அ.தி.மு.க., நா.த.க. போன்ற கட்சிகளில் ஓரங்கட்டப்பட்டவர்கள் மற்றும் ஒதுங்கியிருப்பவர்கள் த.வெ.க.வில் இணைய இருக்கிறார்கள். காரணம், கட்சிப் பதவியை விஜய் வாரி வழங்கி வருகிறார் என்கிறார்கள்!