பாஜகவில் இருந்து அதிமுகவுக்கு சென்ற சிடிஆர் நிர்மல் குமார் நடிகர் விஜயின் தமிழக வெற்றிக்கழகத்தில் இணைந்திருக்கிறார். கிட்டத் தட்ட 7 ஆண்டுகளில் 5 கட்சிக்கு மாறியிருப்பதால், இவர் மீது கடுமையான விமர்சனங்களும் எழுகிறது.
தமிழக பாஜகவில் அண்ணாமலை தலைவராக பொறுப்பேற்ற போது கட்சியில் இணைந்தவர்களின் முக்கியமானவர் சிடிஆர் நிர்மல் குமார். ஐ.டி விங் தலைவராக செயல்பட்டு வந்த அவர் பாஜக குறித்த எதிர்க்கட்சிகள் விமர்சனங்களுக்கு சுட்ட சூட பதில் கொடுத்து வந்தார்.
குறிப்பாக அப்போது எதிர் கட்சியாக இருந்த திமுகவை கடுமையாக விமர்சித்து வந்த அவர் திடீரென கட்சியில் இருந்து விலகுவதாக அறிவித்தது பரபரப்பை ஏற்படுத்தியது, கடந்த 2023 ஆம் ஆண்டு மார்ச் மாதம் பாஜகவில் இருந்து விலகிய அவர் அதிமுகவில் இணைந்தார். ” கட்சிக்காக முடிந்தவரை உழைத்தேன். ஆனால் ஒன்றரை ஆண்டுகளாகவே பல நூறு முறை கட்சியில் இருந்து விலகுவது குறித்து சிந்தித்து முடிவெடுத்துவதாக தெரிவித்து இருந்தார்.
மேலும் அண்ணாமலை மீதும் கடுமையான விமர்சனங்களை முன் வைத்திருந்தார் சிடிஆர் நிர்மல் குமார். கட்சி தொண்டர்களை தலைவராக இருக்கும் அண்ணாமலை வேவு பார்க்கிறார், தொண்டர்களை மதிப்பதில்லை, திமுக அமைச்சருடன் திரை மறைவில் பேரம் பேசுகிறார், அமைச்சர்களை விட ஊழல் செய்கிறார் என பரபரப்பு குற்றச்சாட்டுகளை முன்வைத்தார்.
தொடர்ந்து அதிமுக பொது செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி முன்னிலையில் அதிமுகவில் இணைந்தார் சிடிஆர். பொதுவாக கட்சி தாவல் என்றாலே சிடிஆர் நிர்மல் குமார் ட்விட்டர் பக்கத்தின் கவர் போட்டோவை மாற்றம் செய்வது வழக்கம். பாஜகவில் இருந்த போது அண்ணாமலை, எல் முருகன், எச் ராஜா ஆகியோருடன் கைகளை உயர்த்தியபடி இருக்கும் போட்டோவை வைத்திருந்த அவர் உடனடியாக அதனை நீக்கினார்.
தொடர்ந்து அதிமுகவில் இணைந்த பிறகு ‘எடப்பாடியார் ஃபார் எவர்’ என ஆங்கிலத்தில் அவர் போட்டோவை வைத்திருந்தார். இந்த நிலையில் இன்று அவரது பக்கத்தில் கவர் போட்டோ மாற்றப்பட்டது. இதனால் அவர் கட்சி தாவுவது உறுதி எனக் கூறப்பட்ட நிலையில் திடீரென விஜயை சந்தித்து தமிழக வெற்றிக்கழகத்தில் இணைந்திருக்கிறார். அவருக்கு கட்சியில் முக்கிய பொறுப்பு வழங்கப்பட இருப்பதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் கடந்த 7 ஆண்டுகளில் 5 முறை கட்சி தாவி இருக்கிறார் சிடிஆர் நிர்மல் குமார். கடந்த 2017 ஆம் ஆண்டு அதிமுகவில் இணைந்த அவர் 2018 ஆம் ஆண்டு டிடிவி தினகரன் தலைமையிலான அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தில் இணைந்தார். தொடர்ந்து 2019 ஆம் ஆண்டு பாஜகவில் இணைந்த அவர் 2023 மார்ச் மாதம் பாஜகவில் இருந்து விலகி மீண்டும் அதிமுகவில் சேர்ந்தார்.
கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகள் கழித்து அதிமுகவில் இருந்து விலகி இருக்கும் அவர் தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே நடு முதலைக்குளத்தை சேர்ந்த சிடிஆர் நிர்மல் குமார், ஐடி பிரிவிலும், தரவுகளை சேகரிப்பதிலும் நிபுணத்துவம் பெற்றவர்.
‘நிபுணத்துவம்’ பெற்றாலும் ஒரே கட்சியின் வளர்ச்சிக்காக தானே பாடுபட வேண்டும், அடிக்கடி கட்சி மாறினால் எந்தக் கட்சிக்கு உண்மையாக இருப்பார் என்ற விமர்சனங்களும் எழுகிறது.