அண்ணா பல்கலை பாலியல் வன்கொடுமை வழக்கின் எப்.ஐ.ஆர்., நகல் ‘லீக்’ ஆன சம்பவத்தில், பத்திரிகையாளர்கள் 3 பேரின் மொபைல்போன்களை சிறப்புப் புலனாய்வுக் குழு போலீசார் பறிமுதல் செய்து விசாரணை நடத்தினர்.
சென்னை அண்ணா பல்கலை வளாகத்தில் அண்மையில் மாணவி ஒருவர் பாலியல் வன்கொடுமைக்கு ஆளான சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. தி.மு.க.,வை சேர்ந்த ஞானசேகரன் கைது செய்யப்பட்டுள்ள இந்த வழக்கின் எப்.ஐ.ஆர்., நகல் இணையத்தில் கசிந்தது. தொழில்நுட்பக் கோளாறு காரணமாக, எப்.ஐ.ஆர்., ‘பிளாக்’ செய்யப்படவில்லை என்று போலீஸ் கமிஷனர் அருண், பேட்டியில் தெரிவித்திருந்தார்.
இது பற்றி, போலீஸ் மீது பல்வேறு தரப்பிலும் விமர்சனங்கள், குற்றச்சாட்டுகள் எழுந்தன. ஐகோர்ட் நீதிபதிகளும் கேள்வி எழுப்பினர். சுப்ரீம் கோர்ட்டும் சரமாரியாக கேள்விகளை எழுப்பி இருந்தது. இந்நிலையில், எப்.ஐ.ஆர்., நகல் ‘லீக்’ ஆன சம்பவத்தில் பல்வேறு நபர்களிடம் சிறப்புப் புலனாய்வுக் குழு அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
அந்த வகையில், 3 பத்திரிகையாளர்களின் மொபைல் போன்களை சிறப்புப் புலனாய்வுக் குழுவினர் பறிமுதல் செய்துள்ளனர். இதற்கு சென்னை பத்திரிகையாளர்கள் மன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது.