டங்ஸ்டன் திட்டத்தை மத்திய அரசு முழுமையாக ரத்து செய்த நிலையில் அரிட்டாப்பட்டிக்கு சென்ற முதல்வருக்கு வெற்றி விழா நடத்தப்பட்டு, அங்குள்ள குழந்தைக்கு முதல்வர் ஸ்டாலின் ‘வெற்றி’ என பெயர் சூட்டி வந்திருக்கிறார்.

இந்த நிலையில்தான் மத்திய இணையமைச்சர் முருகன் , ‘‘பா.ஜ.க,வின் முழு முயற்சியால், டங்ஸ்டன் சுரங்க திட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளது. ஆனால், முதல்வர் ஸ்டாலின் மேலூர் பகுதிக்கு சென்று, தனக்குத்தானே பாராட்டு விழா நடத்தி, நாடகத்தை அரங்கேற்றியுள்ளார். அதற்காக அவருக்கு சிறந்த பரிசு தரலாம். டங்ஸ்டன் சுரங்கம் தங்களால் தான் நிறுத்தப்பட்டுள்ளதாக போலியான பிம்பத்தை மக்களிடம் ஏற்படுத்தி வருகின்றனர்.

பொதுசிவில் சட்டம் உத்தரகாண்ட் மாநிலத்தில் அமல்படுத்தப்பட்டுள்ளது. ஒவ்வொரு மாநிலங்களிலும் படிப்படியாக கொண்டுவரப்படும்.

மக்களின் தலையில் மின்கட்டணம், சொத்து வரி என சுமையை சுமத்தி உள்ளது தி.மு.க., அரசு. மக்கள் சரியான நேரத்தை எதிர்பார்த்துக்கொண்டு உள்ளனர். 2026ம் ஆண்டு சட்டசபை தேர்தலில் மிக பெரிய தோல்வியை தி.மு.க., சந்திக்கும்.

கவர்னர் மீது தமிழக அரசுக்கு மிகப்பெரிய காழ்புணர்ச்சி இருக்கிறது. கவர்னர் எது கூறினாலும், நாங்கள் கேட்கமாட்டோம் என்ற மனநிலையில் தான் தி.மு.க.,உள்ளது. தி.மு.க., அரசும், அமைச்சர்களும் கவர்னர் மீது தனிப்பட்ட தாக்குதலையும், வன்மத்தையும் கொண்டுள்ளனர். கவர்னர் பல்வேறு நல்ல விஷயங்களை செயல்படுத்த நினைகிறார். ஆனால், அரசு அதைக் கேட்க விரும்பவில்லை’’ இவ்வாறு அவர் கூறினார்.

தமிழகத்தில் தற்போது டங்ஸ்டன் திட்டம் ரத்தானதற்கு யார் காரணம்? என மக்கள் குழம்பிப் போயுள்ளனர்.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal