2026 தி.மு.க….

2026 ம் ஆண்டு மீண்டும் ஆட்சியைப் பிடித்துவிட வேண்டும் என அதற்காக தீவிரமாக களத்தில் இறங்கியிருக்கிறது தி.மு.க. தலைமை! அதுவும் 200 தொகுதிகளுக்கு மேல் டார்கெட் செய்திருக்கிறது….

2026 அ.தி.மு.க….

2026ல் அ.தி.மு.க. ஆட்சியைப் பிடித்தே ஆகவேண்டும். இல்லாவிட்டால் கட்சியும், பதவியும் நம்மைவிட்டுப் போய்விடும் என புரிந்து செயலாற்றி வருகிறார் எடப்பாடி பழனிசாமி… அ.தி.மு.க. ஆட்சியைப் பிடிக்காவிட்டால், அடுத்த ஐந்து வருடத்தில் கட்சியே காணால் போய்விடும் என்பதுதான் உண்மை!

தி.மு.க.வைப் பொறுத்தளவில் தேர்வாக்குறுதிகளில் முழுமையாக நிறைவேற்றாவிட்டாலும், மகளிர் உரிமைத் தொகையை முழுமையாக கொடுத்துவிட்டாலே வெற்றி உறுதி… அதுவும் 200 தொகுதிகளுக்கு மேல் வெற்றி பெற கூட்டணிக் கணக்கு… தேர்தல் வியூகங்களை வகுக்கத் தொடங்கிவிட்டது. துணை முதல்வர் உதயநிதி தலைமையில் ஒரு டீம் தற்போதே இறங்கி களத்தில் வேலை செய்ய ஆரம்பித்திருக்கிறது.

அ.தி.மு.க.வைப் பொறுத்தளவில் எடப்பாடி பழனிசாமியும், மீண்டும் ஆட்சியைப் பிடித்துவிட வேண்டும். பத்து ஆண்டுகளாக ஆளுங்கட்சியாக இருந்தும், வலிமையான எதிர்க்கட்சியாக வந்திருக்கிறோம். 3 சதவீத வாக்குகள் வித்தியாசத்தில்தான் தி.மு.க. வெற்றி பெற்றது. எனவே, வருகிற 2026ல் அ.தி.மு.க. ஆட்சி அமைந்துவிடும் என்ற அசைக்க முடியாத நம்பிக்கையில் இருக்கிறார்.

இந்த நிலையில்தான், கோவை அதிமுக தலைமை அலுவலகத்தில் கோவை புறநகர் தெற்கு, மாநகர், புறநகர் வடக்கு மாவட்டங்கள் சார்பில் செயல் வீரர்கள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் முன்னாள் அமைச்சர் எஸ்.பி வேலுமணி மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

எஸ்.பி.வேலுமணி செயல் வீரர் கூட்டத்தில் பேசியதாவது: ‘‘தமிழ்நாடு முழுவதும் திமுக ஆட்சியை அகற்ற, அதிமுக ஆட்சியை பிடிக்க அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி 234 தொகுதி சுற்றுப் பயணம் கோவையில் இருந்து தொடங்க உள்ளார். வரும் பிப்ரவரி 9ம் தேதி கோவையில் சுற்றுப் பயணத்தை துவங்குகிறார். வரும் பிப்ரவரி 9ம் தேதி அன்னூரில் நடக்கும் விவசாயிகள் மாநாட்டில் கலந்து கொண்டு சுற்றுப் பயணத்தை துவக்குகிறார்.

அதிமுகவிற்கு கோவை மாவட்டம் ராசியான மாவட்டம். அதனால் தான் எடப்பாடியார் கோவையில் சுற்று பயணத்தை துவங்குகிறார். திமுக ஆட்சியில் அவமானப்படுகிறோம். இன்று 2 கோடி உறுப்பினர்களாக எடப்பாடியார் உயர்த்தியுள்ளார். நாடாளுமன்ற தேர்தலில் பிரதமர் மோடியா, ராகுல் காந்தியா என பார்த்து தான் ஓட்டு போட்டனர். இரட்டை இலை அதிமுகவின் பிரம்மாஸ்தரம் என நடிகர் ரஜினி கூறினார். இரட்டை இலை இருக்கும். அதிமுகவை யாரும் ஏதும் செய்ய முடியாது.

நாடாளுமன்ற தேர்தலில் போது எடப்பாடியார் சர்வே எடுத்தார். சிலரது பதவிகள் மாறினால் ஏற்றுக்கொள்ள வேண்டும். அம்மா இருக்கும் போது எனது பதவியையே எடுத்து விட்டு வெறும் உறுப்பினராக மாற்றினார்கள். இக்கட்சி இராணுவம் மாதிரி தான். அம்மா இருந்த போது எப்படி இருந்தீர்களோ அதே போல இருக்க வேண்டும். அதிமுக விட பெரிய கட்சி தமிழகத்தில் இல்லை’’ என்றார்.

எடப்பாடியின் சுற்றுப்பயணம் குறித்து அவருக்கு நெருக்கமான வட்டாரத்தில் சிலரிடம் பேசினோம். ‘‘சார், 2026 அ.தி.மு.க. ஆட்சியை பிடித்தே ஆகவேண்டும் என எடப்பாடி பழனிசாமி அதற்கான வியூகங்களை வகுத்துவருகிறார். அதன் ஒரு பகுதிதான் இந்த சுற்றுப் பயணம்.

இந்த சுற்றுப் பயணத்தின் போதே, அந்தத் தொகுதிக்கான வேட்பாளர்களையும் எடப்பாடி பழனிசாமி முடிவு செய்துவிடுவார். காரணம், கடந்த காலங்களில் அம்மா (ஜெயலலிதா) இருக்கும்போது தேர்தல் தேதி அறிவித்தவுடன் வேட்பாளர் பட்டியலை வெளியிட்டுவிடுவார். கூட்டணி பேச்சு வார்த்தை முடிவதற்குள்ளாகவே வேட்பாளர் பட்டியல் வெளியாகும்.

எனவே, ஜெயலலிதா ஃபார்முலாவை எடப்பாடி பழனிசாமியும் கையில் எடுக்கிறார். அதே சமயம் வலுவான கூட்டணி அமைப்பதற்காக ரகசிய பேச்சுவார்த்தைகளும் தற்போதே ஆரம்பித்திருக்கிறது. எனவே, கடந்த நாடாளுமன்றத் தேர்தல் மாதிரி இருக்காது… சட்டமன்றத் தேர்தல் அ.தி.மு.க. பாசிட்டிவாக இருக்கும். அதற்கான வேலைகளில் இப்போதே இறங்கியிருக்கிறார் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி’’ என்றனர்.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal