‘வாரிசு’ திரைப்படத்தின் மூலம் தமிழில் தயாரிப்பாளராக அவதாரம் எடுத்த ‘தில்’ ராஜு வருமான வரித்துறை அதிகாரிகள் வளைத்திருப்பதுதான் தெலுங்கு திரையுலகத்தை தாண்டி தமிழ்த் திரையுலகிலும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கிறது.
தெலுங்கு திரையுலகில் முன்னணி தயாரிப்பாளராக வலம் வருபவர் தில் ராஜு. இவர் ஆரம்பத்தில் விநியோகஸ்தராக இருந்தார். பின்னர் படிப்படியாக தயாரிப்பாளராக அவதாரம் எடுத்த இவர் முதன்முதலில் தயாரித்த படம் தில். அப்படத்திற்கு முன்னர் வரை ராஜுவாக அறியப்பட்ட இவர் அப்படத்தை தயாரித்ததன் மூலம் தில் ராஜுவாக மாறினார். சுமார் 20 ஆண்டுகளில் தெலுங்கு திரையுலகின் முடிசூடா மன்னனாக வலம் வருகிறார் தில் ராஜு.
இன்று ஆந்திரா மற்றும் தெலுங்கானாவில் உள்ள பெரும்பாலான திரையரங்குகள் இவரது கட்டுப்பாட்டில் தான் உள்ளன. இவர் தமிழில் விஜய் நடித்த வாரிசு படம் மூலம் தயாரிப்பாளராக அறிமுகமானார். அதைத் தொடர்ந்து இந்த ஆண்டு பொங்கல் பண்டிகைக்கு தில் ராஜு தயாரிப்பில் கேம் சேஞ்சர் மற்றும் சங்கராந்திக்கு வஸ்துன்னம் ஆகிய இரண்டு படங்கள் திரைக்கு வந்தன. இதில் கேம் சேஞ்சர் படத்தில் ராம் சரணும், சங்கராந்திக்கு வஸ்துன்னம் படத்தில் வெங்கடேஷும் நாயகனாக நடித்திருந்தனர்.
இதில் கேம் சேஞ்சர் படத்தை சுமார் 450 கோடி பட்ஜெட்டில் பிரம்மாண்டமாக தயாரித்து இருந்தார் தில் ராஜு. இப்படத்தை ஷங்கர் இயக்கி இருந்தார். ஆனால் இப்படம் பாக்ஸ் ஆபிஸில் படுதோல்வியை சந்தித்துள்ளது. இப்படம் போட்ட பட்ஜெட்டில் பாதி கூட வசூலிக்கவில்லை. ஆனால் தில் ராஜுவை, மற்றொரு படமான சங்கராந்திக்கு வஸ்துன்னம் காப்பாற்றிவிட்டது. அப்படம் வெறும் 30 கோடி பட்ஜெட்டில் தான் எடுக்கப்பட்டது. ஆனால் அதன் வசூல் தற்போது 120 கோடியை தாண்டி சென்றுகொண்டிருக்கிறது.
இந்நிலையில், தயாரிப்பாளர் தில் ராஜுவுக்கு சொந்தமான இடங்களில் இன்று காலை முதல் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். பஞ்சாரா ஹில்ஸ், ஜூப்ளி ஹில்ஸ், கோண்டாப்பூர், கச்சிபௌலி உள்பட 8 இடங்களில் உள்ள தில் ராஜுவின் வீடு, உறவினர்கள் வீடு, அலுவலகம் ஆகியவற்றில் 55 அதிகாரிகள் அடங்கிய குழு ஐடி ரெய்டு நடத்தி வருகிறது. கேம் சேஞ்சர் மற்றும் சங்கராந்திக்கு வஸ்துன்னம் ஆகிய படங்களின் வசூல் அடிப்படையில் இந்த திடீர் ரெய்டு நடத்தப்பட்டு வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இச்சம்பவம் தெலுங்கு திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.