பரந்தூரில் விமான நிலையம் அமைப்பதில் ‘அவர்களுக்கு ஏதோ லாபம்’ இருக்கிறது என விஜய் கிளப்பிவிட்ட சந்தேகம்தான் ஆளுங்கட்சி தலைமையையும், அமைச்சர்களையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியிருக்கிறது.

பரந்தூரில் புதிய சர்வதேச விமான நிலையம் அமைக்கப்படவுள்ளது மத்திய மாநில அரசுகள் தெரிவித்துள்ளது. மேலும் புதிய சர்வதேச விமான நிலைய அமைக்க பரந்தூர் மற்றும் அதனைச் சுற்றியுள்ள சுமார் 12 கிராமங்களில் சுமார் 5ஆயிரம் ஏக்கர் விளை நிலங்கள் கையகப்படுத்தப்படவுள்ளது.

குறிப்பாக பரந்தூர், ஏகனாபுரம் , அக்கமாபுரம், மேலேரி, வளத்தூர், தண்டலம் , நாகப்பட்டு, நெல்வாய், மகா தேவி மங்கலம், உள்ளிட்ட 12 கிராமங்களில் உள்ள குடியிருப்பு பகுதிகளையும் நீர்நிலை பகுதிகளையும் கையகப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. இதற்காக நிலங்களை கையக்கப்படுத்தும் பணிக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்நிலையில், 910 நாட்களுக்கு மேலாக விமான நிலையத்தை அமைக்க எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இந்நிலையில், பரந்தூர் விமான நிலையத்திற்கு எதிராக போராடிவரும் மக்களை சந்திக்கிறார் என அறிவிக்கப்பட்டதோடு அதற்கான ஏற்பாடுகளை தமிழக வெற்றிக் கழகத்தினர் செய்து வந்த நிலையில், இன்று பல்வேறு கட்டுப்பாடுகளுக்கிடையே விஜய் மக்களை சந்தித்துள்ளார். தொடர்ந்து கேரவனில் வந்த அவருக்கு பூங்கொத்து கொடுத்து, பச்சைத் துண்டு, தமிழக வெற்றிக் கழகத்தின் துண்டை கொடுத்து வரவேற்பளித்தனர்.

தொடர்ந்து அந்த வாகனத்தில் நின்றபடியே அப்பகுதி மக்கள், தொண்டர்களிடையே பேசினார் விஜய். அப்போது பேசிய அவர், ‘‘ராகுல் என்ற பேசிய வீடியோ என்னை ஏதோ செய்தது. அதற்காக தான் இங்கு வந்தேன். கள அரசியல் பயணம் உங்களின் ஆசீர்வாதத்துடன் இங்கிருந்து தொடங்குகிறது.

பரந்தூரில் விமான நிலையத்தை அமைத்து, சென்னையை வெள்ளத்தில் மூழ்கடிக்கும் திட்டத்தை நான் எதிர்க்கிறேன். விமான நிலையம் வரக்கூடாது என நான் சொல்லவில்லை. இந்த இடத்தில் வரக்கூடாது என்றே சொல்கிறேன். வளர்ச்சிக்கு எதிரானவன் நான் அல்ல. சென்னை மழை வெள்ளத்தில் தத்தளிப்பதே, இங்குள்ள நீர் நிலைகள் அழிக்கப்பட்டதால்தான் என சமீபத்திய ஆய்வு சொல்கிறது. டங்க்ஸ்டன் சுரங்கத்துக்கு எதிராக தமிழக அரசு கொண்டுவந்த தீர்மானத்தை நான் மனப்பூர்வமாக வரவேற்கிறேன். ஆனால், அதே நிலைப்பாட்டை தானே பரந்தூர் பிரச்சினையிலும் எடுத்திருக்க வேண்டும்.

அரிட்டாபட்டி மக்கள் எப்படியோ, அப்படி தானே பரந்தூர் மக்களும். அப்படி தானே அரசாங்கம் யோசிக்க வேண்டும். ஆனால் அரசு அப்படி செய்யவில்லை. ஏன் செய்யவில்லை. ஏனென்றால், விமான நிலையத்தையும் தாண்டி இந்த திட்டத்தில் அவர்களுக்கு ஏதோ ஒரு லாபம் இருக்கிறது. அது மக்கள் தெளிவாக புரிந்து வைத்துள்ளார்கள். ஆட்சியாளர்களுக்கு ஒரு சில கேள்விகள்.. நீங்கள் எதிர்க்கட்சியாக இருக்கும்போது 8 வழிச்சாலையை எதிர்த்தீர்கள். அதே நிலைப்பாட்டை தானே இங்கே எடுத்திருக்க வேண்டும். எதிர்க்கட்சியாக இருக்கும்போது விவசாயிகளுக்கு ஆதரவு, ஆளுங்கட்சியாக இருக்கும் போது விவசாயிகளுக்கு எதிர்ப்பா.. எனக்கு புரியவில்லையே.

இனிமேலும் உங்கள் நாடகத்தை பார்த்து மக்கள் சும்மா இருக்கமாட்டார்கள். நீங்கள் உங்களின் வசதிக்காக அவர்களோடு நிற்பதும், நிற்காமல் இருப்பதும் நாடகம் ஆடுவதும், நாடகம் ஆடாமல் இருப்பதையும் நிறுத்த வேண்டும். நம்புகிற மாதிரி நாடகம் ஆடுவதில் தான் நீங்கள் கில்லாடி ஆச்சே! விமான நிலையத்துக்காக ஆய்வு செய்த இடத்தை மறுஆய்வு செய்ய வேண்டும் என ஒன்றிய, மாநில அரசுக்கு வலியுறுத்துகிறேன்” என்றார். இவ்வாறு விஜய் பேச பேச அங்கு இருந்தவர்கள் உற்சாகமாக கைதட்டி ஆரவாரம் செய்தனர்.

த.வெ.க. தலைவர் விஜய் பேசி முடித்தவுடன் அமைச்சர்கள் ஒவ்வொருவராக விளக்கம் கொடுக்க ஆரம்பித்திருப்பதுதான் பல்வேறு கேள்விகளை எழுப்பியிருக்கிறது.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal