பரந்தூர் செல்ல நடிகர் விஜய் திட்டமிட்டுள்ள நிலையில், அதற்கான ஏற்பாடுகளை கட்சியின் பொதுச் செயலாளர் ஆனந்த் நேரில் சென்று ஆய்வு செய்துள்ளார்.

காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூரில் விமான நிலையம் அமைக்க 5100 ஏக்கர் நிலங்கள் கையகப்படுத்தப்படுகிறது. ஆனால் இந்த நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து, அப்பகுதி மக்கள் 3 ஆண்டுகளை கடந்து போராட்டம் நடத்தி வருகின்றனர்.
போராட்ட களத்தில் இருக்கும் மக்களை சந்தித்து அவர்களுக்கு ஆதரவு தெரிவிக்க நடிகரும், த.வெ.க., தலைவருமான விஜய் முடிவு செய்துள்ளார். அங்கு சென்று மக்களை சந்திக்கும் வகையில் அதற்கான அனுமதி கோரி தமிழக டி.ஜி.பி., காஞ்சிபுரம் எஸ்.பி., ஆகியோரிடம் உரிய முறையில் த.வெ.க., நிர்வாகிகள் மனு அளித்துள்ளனர். ஆனால், மனு மீது எவ்வித முடிவும் எடுக்கப்படவில்லை.
எப்படியும் அனுமதி கிடைத்துவிடும் என்ற நம்பிக்கையில் வரும் 19 (ஜன.) அல்லது 20(ஜன.) ஆகிய தேதிகளில் விஜய் அங்கு செல்லக்கூடும் என்று தெரிகிறது. அதே நேரத்தில் த.வெ.க., நிர்வாகிகள் போராட்டக் குழுவினரை நேரில் சென்று சநதித்து அவர்களின் நிலைப்பாட்டை அறிந்தனர். மேலும், அங்குள்ள நீர் நிலைகள், அதன் விவரங்கள் உள்ளிட்டவற்றை அவர்கள் சேகரித்தனர்.
இந் நிலையில், விமான நிலைய எதிர்ப்புக் குழுவினரை நடிகர் விஜய் சந்திக்கும் வகையில் ஏகனாபுரம் அம்பேத்கர் சிலை அருகே 5 ஏக்கர் பரப்பளவில் தேர்வு செய்யப்பட்டு உள்ள இடத்தை சமன்படுத்தும் பணியில் போராட்டக்குழுவினர் ஈடுபட்டு வருகின்றனர்.
தேர்வு செய்யப்பட்டு உள்ள இடத்தில் நடக்கும் ஏற்பாடுகளை கட்சியின் பொதுச் செயலாளர் ஆனந்த் நேரில் சென்று ஆய்வு செய்துள்ளார். இதையடுத்து, எப்படியும் நடிகர் விஜய் இங்கு வந்து மக்களை சந்தித்து விட்டுத்தான் செல்வார் என்று த.வெ.க.,நிர்வாகிகள் உறுதியாக கூறி வருகின்றனர்.