நாம் தமிழர் கட்சித் தலைவர் சீமானுக்கு ஆதரவாக பா.ஜ.க. தலைவர் வரிந்து கட்டிக்கொண்டு ஆதரவு கொடுப்பதுதான் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

தந்தை பெரியாரையும் திராவிடத்தையும் ஒழிக்காமல் விடமாட்டேன் என சபதம் எடுத்துள்ளார் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர். தந்தை பெரியார் பேசாததை எல்லாம் பேசியதாகவும் அவதூறு பரப்பி வருகிறார் சீமான். இதனால் தமிழ்நாடு முழுவதும் பல்வேறு காவல் நிலையங்களில் சீமானுக்கு எதிராக 70-க்கும் மேற்பட்ட வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. சீமான் மீது நடவடிக்கை எடுக்கவும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சீமானை கைது செய்தே ஆக வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டால், தமிழக அரசால் சீமான் கைது செய்யப்படுவது உறுதி எனவும் கூறப்படுகிறது.

சீமானின் இந்த விஷமத்தனமான பேச்சுக்கு பல்வேறு அரசியல் கட்சிகளின் தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். பெரியாரிய இயக்கங்கள், தமிழ்த் தேசிய இயக்கங்கள் போராட்டங்களை நடத்தி வருகின்றன. இதில் சீமானின் கார் மீதும் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. தற்போது சீமானுக்கு ஆதரவாக பாஜக தலைவர்கள் அடுத்தடுத்து ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.

தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை, ‘‘பாஜக எப்போதும் தந்தை பெரியாரை கடந்த ஒன்று. நிகழ்கால தமிழகத்துக்கும் பெரியாருக்கும் தொடர்பே இல்லை. அதையும் தாண்டியதாக தமிழ்நாடு இருக்கிறது. என்றைக்கோ பெரியார் என்கிற பிம்பத்தை கட்டமைத்து அதனை வைத்து இன்றும் அரசியல் செய்கின்றனர். ஒரு பலூன் எவ்வளவு ஊதினாலும் உடையத்தான் போகிறது. திமுகவின் முரசொலியில் பெரியார் குறித்து அருவருப்பான கார்ட்டூன் போட்டவர்கள்தான், சீமான் சொல்கிற கருத்து சரிதான்; உண்மைதான். பாஜக தமிழ்நாட்டில் ஆட்சிக்கு வரும் போது இந்து அறநிலையத்துறை இங்கு இருக்காது; கோவிலுக்கு வெளியே ஆபாசமாக எழுதி வைத்திருக்கும் அனைத்தும் அகற்றப்படும்’’ என்றார்.

தமிழக பாஜக மூத்த தலைவர் தமிழிசை சவுந்தரராஜன்: ‘‘சகோதரர் சீமான் இன்று எங்கள் வழியில் வந்துள்ளார். இத்தனை காலமாக நாங்கள் எந்தக் கருத்தியலை சொல்லிக் கொண்டிருந்தோமோஅதனையே சீமான் இன்று சொல்ல தொடங்கி இருக்கிறார். எங்கள் கருத்தியலுக்கு சீமானின் பேச்சு பலம் தருகிறது. பாஜகவின் கருத்தியலுக்கு வெற்றி’’ என்று கூறியிருக்கிறார்.

தமிழக பாஜக மூத்த தலைவர் எச்.ராஜா: ‘‘சீமானின் பல்வேறு கருத்துகளில் எனக்கு முரண்பாடு உண்டுதான். ஆனால் சீமான் தற்போது பேசிய (பெரியார் குறித்து) கருத்துக்காக அவர் கார் மீது கல் வீசி எறிவது எல்லாம் காலித்தனம். தேசத்துரோகம். அனைவரையும் கைது செய்ய வேண்டும்’’ என ஆதரவாக குரல் கொடுத்திருக்கிறார்.

ஏற்கனவே, பி.ஜே.பி.யின் ‘பி’ டீம்தான் சீமான் என குற்றச்சாட்டி வருவதும் குறிப்பிடத்தக்கது..!

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal