கடந்த ஆண்டு மிகப் பிரம்மாண்மாக முதல் அரசியல் மாநாட்டை நடத்தி முடித்தார் விஜய். ஆளும்கட்சி, எதிர்க்கட்சியே மாநாட்டிற்கு வந்த இளைஞர்கள் கூட்டத்தைப் பார்த்து வாயடைத்துப்போனார்கள். இந்த நிலையில்தான் புஸ்ஸி ஆனந்தின் செயல்பாடுகளால் த.வெ.க. ‘புஸ்வானம்’ ஆகும் நிலைக்கு தள்ளப்பட்டிருக்கிறது.
தமிழ் திரையுலகின் நம்பர் ஒன் நடிகராக இருந்து தற்போது அரசியல்வாதி அவதாரம் எடுத்திருக்கிறார் விஜய். கட்சியின் பெயரை அறிவித்தது தொடங்கி உறுப்பினர் சேர்க்கை, ஆலோசனை, மாநில மாநாடு, புத்தக வெளியீட்டு விழா என மிகவும் பிசியாகவே இருக்கிறார்.
விஜய் அரசியலுக்கு வரப்போகிறார் என்ற தகவல் வெளியானதிலிருந்து அனைத்து அரசியல் கட்சித் தலைவர்களும் அவரைப் பற்றி தான் பேசி வருகின்றனர். நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ விஜய் குறித்து பதிலளிக்க வேண்டிய கட்டாயம் அவர்களுக்கு ஏற்பட்டு இருக்கிறது.
கட்சியின் முதல் மாநில மாநாட்டில் பாஜகவைக் கொள்கை எதிரியாகவும், திமுகவை நேரடி எதிரியாகவும் விஜய் குறிப்பிட்டார். மேலும் கூட்டணிக்கு தயார் ஆட்சி அதிகாரத்தில் பங்கு என விஜய் வெளிப்படையாக அறிவித்தார். இந்த நிலையில் வரும் சட்டமன்றத் தேர்தலில் அதிமுகவுடன் விஜய் கூட்டணி அமைக்கலாம் என கூறப்படுகிறது.
தற்போதைக்கு கட்சியை வலுப்படுத்த வேண்டிய அவசியம் என விஜய் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதற்காக ஆயிரக்கணக்கான இளைஞர்களுக்கு கட்சியில் பதவி அளிக்கப்பட இருக்கிறது. தமிழகத்தில் அமைப்பு ரீதியாக நூற்றுக்கும் மேற்பட்ட மாவட்ட செயலாளர்களை நியமனம் செய்ய விஜய் திட்டமிட்டு இருக்கிறார். தமிழகத்தில் 234 தொகுதிகள் இருக்கும் நிலையில் இரண்டு தொகுதிக்கு ஒரு மாவட்ட செயலாளர் என்ற அடிப்படையில் மாவட்ட செயலாளர் நியமனம் நடைபெற இருக்கிறது.
மேலும் மாவட்ட தலைவர், மாவட்ட செயலாளர், மாவட்டத் துணைச் செயலாளர் என தனது ரசிகர் மன்றத்தில் இருந்தவர்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட இருக்கிறது. மேலும் துணைத் தலைவர், துணைச் செயலாளர் பதவிகளில் பெண்களுக்கும் இளைஞர்களுக்கும் அதிகளவு வாய்ப்பு தர திட்டமிடப்பட்டிருக்கிறது. அது மட்டும் அல்லாமல் 28 சார்பு அணிகளும் விஜய் கட்சியில் உருவாக்கப்பட இருக்கிறது. மகளிர் அணி, தொண்டரணி, இளைஞர் அணி, மருத்துவர் அணி, பொறியாளர் அணி, இலக்கிய அணி உள்ளிட்ட 28 அணிகளுக்கும் தலைவர், செயலாளர், அமைப்பாளர்கள் உள்ளிட்ட பொறுப்புகள் வழங்கப்பட இருக்கிறது.
இதுவரை ஏற்கனவே விஜய் ரசிகர் மன்றம், விஜய் மக்கள் இயக்கத்தில் இருந்த மாவட்ட தலைவர்கள், ஒன்றிய தலைவர்களே தற்போது கட்சியின் மாவட்ட செயலாளராகவும், மாவட்ட தலைவர்களாகவும் தங்களை கருதிக் கொண்டு பணியாற்றி வருகின்றனர். இந்த நிலையில் பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆன்ந்தின் சில நடவடிக்கைகள் ‘பழைய’ நிர்வாகிகளை கடும் கோபமடைய செய்திருக்கிறது.
குறிப்பாக நேற்று நடைபெற்ற மாவட்ட மாவட்ட நிர்வாகிகள் கூட்டத்தில் கட்சியின் தலைவரான விஜய் கலந்து கொள்ளவில்லை. படப்பிடிப்பில் கலந்து கொண்டிருப்பதால் அவர் கூட்டத்தில் பங்கேற்காத நிலையில் பொதுச் செயலாளர் ஆனந்த் தலைமையில் கூட்டம் நடைபெற்றது. அடுத்ததாக மாவட்ட தலைவர்கள், மாவட்ட செயலாளர்கள், நிர்வாகிகள் நியமனம் நடைபெற இருக்கும் நிலையில் அது தொடர்பாக கூட்டம் நடைபெற்றதாக கூறப்படுகிறது.
நிர்வாகிகள் பட்டியல் வெளியானவுடன் கட்சியில் சலசலப்பு ஏற்படக் கூடாது என்பதற்காக நிர்வாகிகளை அழைத்து ஆனந்த் ஆலோசனை நடத்தியதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் இன்று நடைபெற்ற கூட்டத்திற்கு புஸ்ஸி ஆனந்தின் ஆதரவாளர்களுக்கு மட்டுமே அழைப்பு விடுக்கப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது ரசிகர் மன்றம் விஜய் மக்கள் இயக்கத்தில் நன்றாக செயல்பட்டவர்களுக்கு முக்கிய பதவிகள் வழங்க வேண்டும் என எங்கள் தலைவர் ஏற்கனவே கூறியிருக்கிறார்.
அதன் அடிப்படையில் தான் நாங்கள் அப்போது நடந்த கட்சியின் மாநாட்டுக்கு செலவு செய்து தொண்டர்களை அழைத்து சென்றோம். ஆனால் ஆனந்தின் நடவடிக்கைகள் ஏராளமான நிர்வாகிகளை அதிருப்தியில் ஆழ்த்தி இருக்கிறது. அவரது ஆதரவாளர்களே அதிக பதவிகளுக்கு நியமனம் செய்யப்படவுள்ளனர். இதுகுறித்து தலைமைக்கு தெரிவிக்கலாம் என்று நினைத்தாலும் பொதுச் செயலாளரை மீறி விஜயை சந்தித்து பேச முடியவில்லை. ஏதாவது நிகழ்ச்சியில் தலைவரை சந்தித்து பேச முயற்சித்தாலும் அவர் விடுவதில்லை. புஸ்ஸி ஆனந்தால் த.வெ.க. புஸ்வானமாகிவிடும் என்கின்றனர் நிர்வாகிகள்.
‘தந்தை சொல் மிக்க மந்திரமில்லை’ என்பது யாருக்கு பொருந்துமோ, பொருந்தாதோ விஜய்க்கு நன்றாக பொருந்தும் என்கிறார்கள் விபரமறிந்தவர்கள்..!