2026 தமிழகத்தில் நடைபெற உள்ள சட்டமன்றத் தேர்தலை எதிர்கொள்ளும் வகையில் தமிழக பாஜக மாநிலத் தலைவரை மாற்ற பா.ஜ.க. தலைமை திட்டமிட்டுள்ளது. புதிய தலைவராக வானதி சீனிவாசன், நயினார் நாகேந்திரன் உள்ளிட்ட இருவரில் ஒருவருக்கு வாய்ப்பு என தகவல் வெளியாகியுள்ளது.

தமிழக பா.ஜ.க.வுக்கு புதிய மாநிலத் தலைவர் மற்றும் தேசிய கவுன்சில் உறுப்பினர்களை தேர்வு செய்வதற்காக தேசிய தலைமை, மத்திய சுரங்கத்துறை அமைச்சர் கிஷன் ரெட்டியை நியமனம் செய்துள்ளது. கிஷன் ரெட்டி கடந்த நாடாளுமன்றத் தேர்தலின் போது தமிழக பொறுப்பாளராக இருந்தார். புதிய தலைவரை தேர்வு செய்வதற்கான தேர்தல் விரைவில் நடைபெற இருக்கிறது. ஏற்கனவே மண்டல தேர்தல்கள் நடைபெற்று முடிந்துள்ள நிலையில், இன்னும் சில நாட்களில் கிஷன் ரெட்டி தமிழகம் வர இருக்கிறார்.

தமிழகம் வரும் அவர், பா.ஜ.க. மூத்த தலைவர்கள் மற்றும் நிர்வாகிகளுடன் ஆலோசனை மேற்கொண்டு தமிழக பா.ஜ.க.வுக்கு புதிய தலைவரை தேர்வு செய்ய இருக்கிறார். தற்போதைய தலைவர் அண்ணாமலை கடந்த 2021 ஜூலை 8-ம் தேதியில் இருந்து மாநில தலைவராக தொடர்ந்து வருகிறார். அவரது பதவிக்காலம் நிறைவடைந்த நிலையில் அவர் மாற்றம் செய்யப்படலாம் என்ற தகவல் வெளியாகியிருக்கிறது.

2026-ல் நடைபெற உள்ள சட்டமன்றத் தேர்தலில் அ.தி.மு.க.வுடன் கூட்டணி அமைக்க பா.ஜ.க. தலைமை விரும்பி வரும் நிலையில் அ.தி.மு.க.வுக்கு இனக்கமாக செயல்படும் தலைமையை கொண்டு வர தேசிய தலைமை திட்டமிட்டு இருக்கிறது.

இதனால் பாஜக மாநிலத் தலைவராக தற்போதைய துணைத் தலைவரும், தமிழக பா.ஜ.க. சட்டமன்றக்குழு தலைவருமான நயினார் நாகேந்திரன் அல்லது தேசிய மகளிரணி தலைவரும் சட்டமன்ற உறுப்பினருமான வானதி சீனிவாசன் ஆகிய இருவரில் ஒருவர் நியமனம் செய்யப்படலாம் என தகவல் வெளியாகியிருக்கிறது. அண்ணாமலையை பொருத்தமட்டில் அ.தி.மு.க.வுடன் கூட்டணி அமைக்க விரும்பவில்லை. அவர், தலைவராக செயல்படும் பட்சத்தில் கூட்டணி அமைய வாய்ப்பு இல்லாத சூழல் இருப்பதால் மாநிலத் தலைவரை மாற்றும் முடிவெடுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

எல்.முருகன் மத்திய இணை அமைச்சராக நியமிக்கப்பட்ட போது, நயினார் நாகேந்திரன்தான் தலைவராக வருவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அண்ணாமலைக்கு பா.ஜ.க. தலைமை வாய்ப்பு வழங்கியது. தி.மு.க.வுக்கு எதிராக மாநிலத் தலைவர் அண்ணாமலை மேற்கொண்டு வரும் சாட்டையடி போராட்டம், திமுக ஆட்சி அகற்றப்படும் வரை செருப்பு அணிய மாட்டேன் என சபதம் உள்ளிட்டவைகளை கட்சி தலைமை ரசிக்கவில்லை எனவும் தமிழகத்தை பொறுத்தமட்டில் இது பிற்போக்குத்தனமான போராட்டமாக மாறியதாக அரசியல் விமர்சகர்கள் தெரிவித்துள்ளனர்.

காரணம், நயினார் அ.தி.மு.க.வில் இருந்து வந்தவர் சமீபத்தில் கூட எஸ்.பி.வேலுமணியுடனான சந்திப்பு அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது. அதே போல், கோவை தொகுதி எம்.எல்.ஏ., வானதி சீனி£வசனும் அ.தி.மு.க.வுக்கும், எஸ்.பி.வேலுமணிக்கும் நெருக்கமாக இருப்பவர். இவர்கள் இருவரில் ஒருவரை தலைவராக நியமித்தால் கூட்டணியில் சிக்கல் வராது. பா.ஜ.க. ஆட்சியில் கூட இடம் பிடிக்கலாம் என ‘மேலிடம்’ கணக்குப் போட்டு வருகிறதாம்.

இந்நிலையில், அண்ணாமலை விரைவில் மாற்றம் செய்யப்படலாம் என தகவல் வெளியாகி இருக்கிறது. அதே நேரத்தில் தமிழிசை சௌந்தரராஜன் ஒரு பக்கம் மாநில தலைவராக முயற்சி மேற்கொண்டு வரும் நிலையில் அவருக்கு வாய்ப்பு குறைவு எனவும் தகவல் வெளியாகியுள்ளது

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal