இரட்டை இலை சின்னம் விவகாரம் தொடர்பாக தேர்தல் ஆணையத்தில் ஓ.பன்னீர்செல்வம் பதில் மனு தாக்கல் செய்துள்ளார். உரிமையியல் வழக்கின் தீர்ப்பு வரும் வரை எடப்பாடி பழனிசாமியின் கட்சி அதிகாரங்களை திரும்பப் பெறவேண்டும் என ஓபிஎஸ் கேட்டுக்கொண்டுள்ளார். இதற்கிடையே ‘கட்சியின் உள் விவகாரங்களில் தேர்தல் ஆணையம் தலையிட முடியாது’ என தேர்தல் ஆணையத்தில் எடப்பாடி பழனிச்சாமி பதில் மனு தாக்கல் செய்துள்ளார்.

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூரை சேர்ந்த ராம்குமார் ஆதித்தன் என்பவர் இந்திய தேர்தல் ஆணையத்தில் மனு அளித்திருந்தார். அதிமுக அடிப்படை உறுப்பினர் என்ற முறையில் அவர் அந்த கோரிக்கை மனுவை வழங்கி உள்ளார். அதில், “அதிமுக பொதுக்குழுவில் கொண்டு வரப்பட்ட கட்சி திருத்த விதிகளை ஏற்றுக்கொள்ளகூடாது. இது கட்சி விதிகளுக்கு அப்பாற்ப்பட்டு உள்ளதால் இதனை அங்கீகரிக்க கூடாது. ஏனென்றால் திருத்த விதிகள் என்பது எடப்பாடி பழனிச்சாமி மட்டுமே பொதுச்செயலாளராக போட்டியிடும் வகையில் உள்ளது. மேலும் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா இறந்த பிறகு அதிமுக விதிகளில் கொண்டு வரப்பட்ட திருத்தங்களை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் சிவில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

மேலும் ஜூலை 11 பொதுக்குழு செல்லும் என உச்சநீதிமன்றம் கூறினாலும் பாதிக்கப்பட்டவர்கள் சிவில் வழக்கு தாக்கல் செய்யலாம் என கூறியுள்ளது. எனவே இந்த விவகாரத்தில் நீதிமன்றத்தில் தீர்வு காணும் வரை ஜூலை 11ல் திருத்த விதிகளுக்கு அங்கீகாரம் வழங்கக்கூடாது” என அந்த கோரிக்கை மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது எடப்பாடி பழனிச்சாமிக்கு பிரச்சனையை ஏற்படுத்துமா, இல்லையா என்பதை நாம் பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும். இந்த விவகாரம் தொடர்பாகதான் தற்போது விசாரணை நடந்து வருகிறது.

இதற்கிடையே, ஓபிஎஸ், தேர்தல் ஆணையத்தில் தாக்கல் செய்துள்ள பதில் மனுவில், ‘‘ஒருமுறை முதன்மை உறுப்பினர்கள் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்ட கட்சி தலைமை 5 ஆண்டுகள் செயல்பாட்டில் இருக்கும், அதனை பொதுக்குழுவின் ஒரு சிறப்பு தீர்மானம் மூலம் கலைத்து விடவோ அல்லது செல்லாது என்று முடக்கி விடவோ முடியாது.

தற்போது உள்ள கட்சியின் நிர்வாகம் என்பது சட்டவிரோதமானது, அவ்வாறு செயல்படும் கட்சி தலைமைக்கு இரட்டை இலை சின்னத்தை பயன்படுத்த அதிகாரம் கிடையாது, எனவே தற்போதைய அ.தி.மு.க கட்சி மற்றும் இரட்டை இலை சின்னத்தை எடப்பாடி பழனிசாமி பயன்படுத்த தடை விதிக்க வேண்டும், அந்த அதிகாரத்தை தேர்தல் ஆணையம் திரும்பப்பெற வேண்டும்’’ எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதிமுகவில் இரட்டை தலைமை சர்ச்சை ஏற்பட்டு, ஓ.பன்னீர்செல்வம் எடப்பாடி பழனிசாமியால் நீக்கப்பட்ட நிலையில் இருவரும் கட்சிக்கு உரிமை கொண்டாடினர். இதனால் அதிமுகவின் இரட்டை இலை சின்னமும் ஆட்டம் கண்டது. இரட்டை இலை சின்னத்தை பெற இரு தரப்பினருமே தீவிரமாக காய் நகர்த்தினர். அதன்பிறகு எடப்பாடி பழனிசாமி தலைமையின் கீழ் அதிமுக செயல்படத் தொடங்கியது. இதனால் இரட்டை இலையும் அவர் வசம் சென்றது.

திண்டுக்கல்லைச் சேர்ந்த சூர்யமூர்த்தி என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்த மனுவில், அதிமுகவின் உள்கட்சி விவகாரம் தொடர்பாக தாக்கல் செய்துள்ள சிவில் வழக்குகள் முடிவுக்கு வரும் வரை அதிமுகவுக்கு இரட்டை இலை சின்னத்தை ஒதுக்கக் கூடாது என தேர்தல் ஆணையத்துக்கு கடந்த பிப்ரவரி மாதம் மனு அளித்தும் இதுவரை எந்த பதிலும் இல்லை. எனவே, இது தொடர்பாக உரிய உத்தரவு பிறப்பிக்க தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட வேண்டும் எனக் கோரி இருந்தார்.

இந்நிலையில், இரட்டை இலை சின்னம் விவகாரத்தில் முன்னாள் முதலமைச்சர்கள் எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம், சூரியமூர்த்தி ஆகியோருக்கு இந்திய தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியது. தங்கள் தரப்பு வாதங்களை எழுத்துப்பூர்வமாக தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிடப்பட்டது. கடந்த 23 ஆம் தேதி டெல்லியில் உள்ள தேர்தல் ஆணைய அலுவலகத்தில் எடப்பாடி, ஓபிஎஸ் தரப்பினர் நேரில் ஆஜராகி பதில் அளித்தனர்.

இந்நிலையில் மீண்டும் தேர்தல் ஆணையத்தில் எழுத்துப்பூர்வமாக பதில் மனுவை தாக்கல் செய்துள்ளார் ஓ.பன்னீர்செல்வம். உரிமையியல் வழக்கின் தீர்ப்பு வரும் வரை எடப்பாடி பழனிசாமியின் கட்சி அதிகாரங்களை திரும்பப்பெற வேண்டும். தன்னை கட்சியை விட்டு நீக்கிய எடப்பாடியின் நடவடிக்கை அதிமுகவின் அடிப்படை விதிக்கு எதிரானது. தேர்தல் ஆணையத்தில் உள்ள ஆவணத்தின் அடிப்படையில் அதிமுகவின் இரட்டை இலை சின்னம் தனக்கே சொந்தம் எனக் குறிப்பிட்டுள்ளார் ஓபிஎஸ்.

இந்த நிலையில்தான், ‘‘இரட்டை இலை சின்னம் தொடர்பான வழக்கில் கட்சியின் உள் விவகாரங்களில் தேர்தல் ஆணையம் தலையிட முடியாது’’என தேர்தல் ஆணையத்தில் எடப்பாடி பழனிச்சாமி பதில் மனு தாக்கல் செய்துள்ளார். அதில், ‘‘ சின்னம் தொடர்பாக வழக்கு தொடர்ந்த ராம்குமார் ஆதித்தன் என்பவருக்கும் அதிமுகவுக்கும் சம்பந்தம் கிடையாது. கட்சியின் உள் விவகாரங்களில் தேர்தல் ஆணையம் தலையிட முடியாது. பொதுக்குழுவை எதிர்த்து நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கிலும் தீர்மானங்களை சென்னை உயர்நீதிமன்றம் அங்கீகரித்துள்ளது’’ என எடப்பாடி பழனிசாமி பதில் அளித்துள்ளார்.
ஓ.பன்னீர்செல்வம் இன்னமுமா நம்பிக்கொண்டிருக்கிறார்? என்கிறார்கள் அரசியல் பார்வையாளர்கள்!

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal