முன்னாள் அமைச்சர் பூங்கோதை ஆலடி அருணா தனது வலைதளப் பக்கத்தில் ‘ஆறாத புண்!’ என்ற தலைப்பில் தனது தந்தையை நினவுகூர்ந்த பதிவு படிப்போரின் கண்களை குளமாக்கியது.

‘ஆறாத புண்!’ என்ற தலைப்பில், 20 வருடங்கள் , 240 மாதங்கள், 7300 நாட்கள், 1,75,200 மணித்துளிகள், பல கோடி வினாடிகள் , நொடிப்பொழுதுகள்…

இரத்த வெள்ளத்தில் நின் மண்ணிலே
வீழ்ந்து மறைந்த காலம்….
கயவர்களால்! கொடியவர்களால்!
யார்? ஏன்? எதற்காக ?
வினாக்களுக்கு இன்னும் விடை இல்லை…

கருணையே பெயரில்கொண்ட
நம் தலைவன்
அரணாக காத்தார்
நின் அவல மரணத்தின்
தாக்குதலை எதிர்கொள்ள…

வெற்றி தால்வி, மகிழ்ச்சி, நெகிழ்ச்சி
சிரிப்பு, அழுகை, கோபதாபங்கள்
மங்கள நாதங்கள், மரண ஒலங்கள்
காலமும் காலனும்
வாழ்க்கையின் முரண்பாடங்களை உணர்த்திட்டன…

மீண்டும் ஒரு மரண அடி
7.8.2018 நம் குலசாமியை இழந்த போது
பெண் சிசு கருகலைப்பு
கருவறையில் மட்டுமே முடிவதில்லை அப்பா…
உணர்த்திட்டன நம் குடும்ப உறவுகள்
கறுப்பு ஆடுகள் மத்தியில் பலியாடாக,
நல்லவேளை கழுத்து தப்பியது..!

பூங்கோதை ஆலடி அருணாவாக
கடமை, கண்ணியம் , கட்டுப்பாடோடு
தனயனாக , தலைவனாக , பாதுகாவலராக வழிகாட்டியாக
மக்களின் முதல்வரின் விழியசைவில்
இனி என் பணி ,
நம் கழகப்பணி மட்டுமே
உனது பஞ்சு போன்ற கைகள்
மீண்டும் பற்றிடும் நாள் வரை..!

உன் நினைவுகளோடு, பூங்கோதை ஆலடி அருணா..!’’ என பதிவிட்டிருக்கிறார்.

அரசியல் களத்தில் சூழ்ச்சிகள்… துரோகங்கள்… என தன்மீதான பலமுனை தாக்குதல் நடத்தப்பட்ட போதும், மக்களுக்கான நலத்திட்ட உதவிகளை செய்து அரசியல் பயணத்தை பூங்கோதை ஆலடி அருணா தொடர்ந்துகொண்டுதான் இருக்கிறார்..!

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal