அண்ணா பல்கலைக் கழக மாணவி ஒருவர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட விவகாரம் தொடர்பாக அ.தி.முக. சார்பில் போராட்டம் நடந்தது. இந்தப் போராட்டத்தின் போது பேசிய முன்னாள் தென்சென்னை எம்.பி., ஜெ.ஜெயவர்தன், ‘தி.மு.க. குற்றவாளிகளின் கூடாரமாக இருக்கிறது’ என பகிரங்கமாக குற்றஞ்சாட்டினார்.

சென்னை கிண்டியில் அண்ணா பல்கலைக்கழகத்தில் பயின்று வரும் மாணவி ஒருவர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் வெளியாகி மாநிலம் முழுவதும் அதிர்வலையை ஏற்படுத்தி உள்ளது. முன்னதாக மாணவி கொடுத்த புகாரின் பேரில், கோட்டூர்புரம் அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் 4 சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்குபதிவுசெய்து குற்றவாளியை 3 தனிப்படைகள் அமைத்து வலைவீசி தேடி வந்தனர். இந்த நிலையில் இந்த கொடுஞ்செயலில் ஈடுபட்ட ஞானசேகரன் (37) என்பவரை தனிப்படை போலீசார்.

இதனிடையே மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட விவகாரத்தில் எப்.ஐ.ஆரில் மாணவி கூறிய புகார்கள் குறித்த தகவல்கள் வெளியாகி பரபரப்பு எற்படுத்தி இருந்தது. இதில் மாணவியின் பெயர், அவரது முகவரி உள்ளிட்ட அனைத்து விவரங்களும் இடம்பெற்றிருந்தது. பாதிக்கப்பட்ட பெண்ணின் தகவல்கள் மறைக்கப்படாமல் சமூக வலைதளங்களில் அப்படியே வெளியிடப்பட்டதற்கு சமூக ஆர்வலர்கள் மற்றும் எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்தன.

தமிழகத்தின் பிரதான எதிர்க்கட்சியான அ.தி.மு.க. சார்பில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தலைமையில் சென்னையில் ஆர்ப்பாட்டம் நடந்தது. இந்த ஆர்ப்பாட்டத்தில் கைது செய்யப்படுவதற்கு முன்பு பேசிய முன்னாள் தென் சென்னை எம்.பி., ஜெ.ஜெயவர்தன், ‘‘தமிழகத்தில் பெண்களுக்கு முற்றிலும் பாதுகாப்பு இல்லாத நிலை ஏற்பட்டிருக்கிறது. இன்னும் சொல்லப்போனால், அண்ணா பல்கலையில் பயிலும் மாணவர்கள் ‘நமக்கு பாதுகாப்பு இருக்கிறது’ என்ற நம்பிக்கையில் சொந்த வீடு போல சாப்பிடும் மெஸ்ஸிற்கு சென்று வருவார்கள். அப்படியிருக்கும் பட்சத்தில் மாணவி ஒருவருக்கு இப்படியொரு கொடுமை நடந்திருப்பது வெட்கக் கேடானது.

தவிர, கைது செய்யப்பட்டிருக்கும் குற்றவாளி, தி.மு.க.வில் சைதாப்பேட்டை கிழக்கு மாணவரணி துணை அமைப்பாளராக இருக்கிறார். அந்த நபரை காப்பாற்றும் விதமாக சி.சி.டி.வி. காமிரா செயல்படவில்லை என்று கூறுகிறார்கள். பாலியல் விவகாரத்தில் வழக்கு விசாரணை முறையாக, நேர்மையாக நடக்கிறதா என்ற சந்தேகம் எழுகிறது.

குற்றவாளிகள் தினமும் காவல் நிலையத்திற்கு சென்று கையெழுத்திடும் நிலையில், தி.மு.க.வைச் சேர்ந்துவிட்டால் அவர்கள் புனிதர்களாகிவிடுகிறார்கள். கைது செய்யப்பட்டவர் மீது 15 வழக்குகள் இருக்கிறது. இவர் காவல்துறையின் கண்காணிப்பில் இருக்கவேண்டியவர், இப்படி சுதந்திரமாக திரிந்து பாலியல் குற்றத்தில் ஈடுபட்டிருக்கிறார்.

இதனால்தான் ஒட்டுமொத்தமாக சட்டம் & ஒழுங்கு சீர்கெட்டு கிடக்கிறது. ஒட்டுமொத்தத்தில் குற்றவாளிகளின் கூடாரமாக இருக்கிறது திராவிட முன்னேற்றக் கழகம்!’’ என ஆவேசமாக பேசினார் ஜெ.ஜெயவர்தன்.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal