தமிழகத்தில் பா.ம.க.வைப் பொறுத்தளவில் ஆளுங்கட்சி கூட்டணியில்தான் எப்போதும் இருப்பார்கள். கடந்த பத்து வருடங்களாக அதற்கு வாய்ப்பி இல்லாமல் போய்விட்டது. இந்த நிலையில்தான், ‘‘வன்னியர்களுக்கு 15 சதவீத இட ஒதுக்கீடு தந்தால் தி.மு.க.விற்கு நிபந்தனையற்ற ஆதரவு’’ என்ற அன்புமணியின் பேச்சு தமிழக அரசியல் களத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
தமிழக வெற்றிக் கழகத்தைத் தொடங்கிய விஜய் தனது முதல் வியூகமாக தி.மு.க. கூட்டணியை உடைப்பதை கையில் எடுத்துள்ளதாக பேச்சுக்கள் அடிபட்டது. 2026ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் தமிழக வெற்றிக் கழகத்தின் பக்கம் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி இருக்க வேண்டும் என்று விரும்புகிறார். ஆட்சி அதிகாரத்தில் பங்கு என்ற அறிவிப்பு, அம்பேத்கர் புத்தக வெளியீட்டு விழாவில் திருமாவளவன் பற்றிய பேச்சு என்று விஜய் கூறியதே அதற்கு சான்றாகும்.
கடந்த சில ஆண்டுகளில் தமிழ்நாட்டின் மிகப்பெரிய கட்சியாக விசிக வளர்ந்துள்ளது. 25 தொகுதிகளை வரும் சட்டமன்ற தேர்தலில் தி.மு.க.விடம் கேட்போம் என்ற வன்னியரசின் பேட்டியும் வரும் சட்டமன்ற தேர்தலில் தி.மு.க. பக்கம் விசிக இருப்பதை கேள்விக்குறியாக்கியுள்ளது. ஏனென்றால், பிரம்மாண்ட கூட்டணி அமைத்துள்ள தி.மு.க. விசிகவிற்கு 25 தொகுதிகள் தருவது என்பது சாத்தியமற்றது.
தி.மு.க. கூட்டணியில் இருந்து விசிகி விலகினால் அந்த இடத்தை நிரப்பும் வகையில் மற்றொரு வலுவான கட்சியை தங்கள் பக்கம் இழுக்க தி.மு.க. திட்டம் வகுக்கும். தமிழ்நாட்டில் தி.மு.க., அ.தி.மு.க.விற்கு நிகரான மிகப்பெரிய கட்சியாக இருப்பது பா.ம.க. ஆகும். குறிப்பாக, வட தமிழகத்தில் மிகப்பெரிய வாக்கு வங்கியை வைத்துள்ள பா.ம.க. ஒவ்வொரு தேர்தலிலும் தாக்கத்தை ஏற்படுத்தி வருகின்றனர்.
ஆனால், கருணாநிதி தலைமையிலான தி.மு.க. ஆட்சியில் அங்கம் வகித்த பிறகு அடுத்த ஜெயலலிதா ஆட்சி முதல் தற்போதைய மு.க.ஸ்டாலின் ஆட்சி வரை கடந்த 13 ஆண்டுகளுக்கும் மேலாக எந்தவொரு அதிகாரத்திலும் இல்லாமல் பா.ம.க. உள்ளது.
இந்த சூழலில், வரும் சட்டமன்ற தேர்தலில் விசிக தி.மு.க. கூட்டணியில் இருந்து விலகினால், பா.ம.க. தி.மு.க. பக்கம் சாயும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. காஞ்சிபுரத்தில் நேற்று நடைபெற்ற பாமக போராட்டத்தில் வன்னியர்களுக்கு 15 சதவீத இட ஒதுக்கீடு தந்தால் தி.மு.க.விற்கு நிபந்தனையற்ற ஆதரவு தர பா.ம.க. தயார் என்று அன்புமணி ராமதாஸ் பேசியுள்ளார். அவரது பேச்சு அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.