ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தல் அடுத்தாண்டு பிப்ரவரியில் நடக்க வாய்ப்பிருக்கிறது. இங்கு தி.மு.க. போட்டியிட விரும்புவதாகவும், இதனால், அதிருப்தியடைந்த காங்கிரஸ் தலைமைக்கு கடிதத்தின் மூலம் அழுத்தம் கொடுக்க இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியிருக்கிறது.
ஈரோடு கிழக்குத் தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏவாக இருந்த ஈவிகேஎஸ் இளங்கோவன் சமீபத்தில் மறைந்தார். இதற்கு முன்பும் இவரது மகன் மறைந்ததைத் தொடர்ந்து இளங்கோவனுக்கு வாய்ப்பு கொடுக்கப்பட்டது. அதுவும் முதல்வர் மு.க.ஸ்டாலின் காங்கிரஸ் தலைமையிடம் பேசி இளங்கோவனை போட்டியிட வைத்தார். இந்த நிலையில்தான், இடைத் தேர்தலில் நேரடியாக ஆளுங்கட்சியான திமுகவே களம் காண முடிவு எடுத்திருப்பதாக தகவல் வெளியாகியிருக்கிறது.
கடந்த 22ம் தேதி சென்னை அறிவாலயத்தில் நடைபெற்ற திமுக செயற்குழு கூட்டத்திலும் ஈரோடு நிர்வாகிகள் திமுக போட்டியிட வேண்டும் என்பதைதான் வலியுறுத்தியுள்ளனர். 2021 தேர்தலில் ஈவிகேஎஸ் இளங்கோவன் மகன் திருமகன் ஈவேரா போட்டியிட்டு வெற்றி பெற்ற நிலையில், அவர் மாரடைப்பு ஏற்பட்டு கடந்த ஆண்டு ஜனவரி 4ஆம் தேதி காலமானார். அதன்பிறகு நடைபெற்ற இடைத் தேர்தலில் அவரது தந்தையும் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவருமான ஈவிகேஎஸ் இளங்கோவன் போட்டியிட்டு வெற்றி பெற்றார் .ஆனால், அவரும் துரதிருஷ்டவசமாக சமீபத்தில் காலமானார்.
இந்நிலையில், ஈரோடு கிழக்குத் தொகுதி காலியானதாக அறிவித்து இடைத் தேர்தலை நடத்தும்படி தமிழக சட்டப்பேரவை செயலகம் தேர்தல் ஆணையத்திற்கு கடிதம் எழுதியிருக்கும் நிலையில், விரைவில் அந்த தொகுதிக்கு தேர்தல் அறிவிக்கப்படவிருக்கிறது. இந்த முறை ஈரோடு கிழக்குத் தொகுதியில் திமுகவே போட்டியிட முடிவு செய்துள்ளதாகவும் இது தொடர்பாக ராகுல்காந்தியிடம் திமுக தலைமை சார்பில் விரைவில் பேச்சுவார்த்தை நடத்தவிருப்பதாக தகவல்கள் வெளியாகியிருக்கிறது.
சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் ஒன்றரை ஆண்டுகளே இருக்கும் நிலையில், நடைபெறவுள்ள ஈரோடு கிழக்குத் தொகுதியில் திமுகவே நேரடியாக வேட்பாளரை நிறுத்தி மீண்டும் வெற்றி பெற்று காட்டினால், அது வரவிருக்கும் 2026 தேர்தலுக்கு பக்க பலமாக இருக்கும் என்றும் 5 வருடத்திற்குள் ஒரே தொகுதியில் நடைபெறும் மூன்றாவது இடைத் தேர்தல் என்பதால் இதில் வெற்றி பெற்று காட்டினால், திமுக ஆட்சியின் மீது மக்கள் நம்பிக்கை வைத்திருப்பது உறுதி செய்யப்பட்டுவிட்டதாக தெரியவரும் என்பதாலும் இந்த ஈரோடு கிழக்குத் தொகுதியில் இந்த முறை திமுகவே போட்டியிடவுள்ளதாக தெரிகிறது.
திமுக இந்த முடிவு குறித்து விரைவில் திமுக மக்களவை குழுத் தலைவரும் திமுகவின் பொருளாளருமான டி.ஆர்.பாலு காங்கிரஸ் கட்சியின் ராகுல்காந்தி மற்றும் அக்கட்சித் தலைவர் மல்லிகார்ஜூனா கார்க்கேவிடம் பேச்சுவார்த்தை நடத்த இருக்கிறாராம்.
இந்நிலையில், ஈரோடு கிழக்குத் தொகுதியில் எம்.எல்.ஏ சீட் வாங்கிப் போட்டிப்போட இப்போதே அந்த மாவட்டத்தில் போட்டா போட்டி தொடங்கியுள்ளது. மாவட்ட அமைச்சர் முத்துச்சாமியிடமும் அமைச்சர் செந்தில்பாலாஜியிடமும் பலர் தங்களுக்கு சீட் பெற்றுத் தருமாறு வலியுறுத்தத் தொடங்கியுள்ளனர். ஒருவேளை இந்த முறை ஈரோடு கிழக்கில் திமுக போட்டியிட்டால், அமைச்சர் முத்துசாமி கைக்காட்டும் வேட்பாளரை திமுக அறிவிக்கப்போகிறதா அல்லது கொங்கு மண்டலத்தை தனது கட்டுக்குள் வைக்க பணியாற்றி வரும் அமைச்சர் செந்தில்பாலாஜி சொல்லும் வேட்பாளரை முதல்வர் அறிவிக்கப்போகிறாரா என்ற பெரும் எதிர்பார்ப்பும் கூடவே எழுந்துள்ளது. காரணம் தற்போது போட்டியிடும் வேட்பாளருக்கு மீண்டும் 2026ல் போட்டியிட வாய்ப்பு கிடைக்கும் என்கிறார்கள்.
ஆனால், ஈரோடு கிழக்குத் தொகுதியை திமுக போட்டியிட விட்டுக்கொடுத்தால், அது காங்கிரஸ் கட்சிக்கு பலவீனமாக போய்விடும் என்றும் வரும் 2026 சட்டமன்ற தேர்தலில் கூடுதல் சீட் கேட்டு வாங்கி போட்டியிடுவதில் சிரமங்கள் இருக்கும் என்றும் காங்கிரஸ் கட்சியின் நிர்வாகிகள் கருதுகின்றன. எனவே, இந்த முறையும் காங்கிரஸ் போட்டியிடுவதை உறுதி செய்ய வேண்டும் என்று அகில இந்திய தலைமைக்கு காங்கிரஸ் நிர்வாகிகள் கடிதம் எழுத தயாராகிவருகிறார்களாம். மேலும், ப.சிதம்பரம் மூலம் காங்கிரஸ் தலைமைக்கு ஆழுத்தம் கொடுக்கவும் ஆயத்தமாகி வருகிறார்களாம்.