கடந்த ஞாயிற்றுக்கிழமை நடந்த அ.தி.மு.க. பொதுக்குழு கூட்டத்தில் பேசிய கட்சியின் மூத்த நிர்வாகியும், முன்னாள் அமைச்சருமான கே.பி.முனுசாமி, ‘‘அ.தி.மு.க.வால் ஆதாயம் அடைந்தவர்கள் கஷ்டப்படுகிறவர்களுக்கு உதவுங்கள். கட்சியில் ‘அப்பழுக்கற்று’ உண்மையாக வேலைபாருங்கள்’’ என உருக்கமாக உண்மைத் தன்மையுடன் பேசினார்.

இந்த நிலையில்தான் எங்கள் மாவட்டத்தில் மாவட்டச் செயலாளர் கட்சி நிர்வாகிகளை ‘பைனான்ஸ் கம்பெனி’ போல் நடத்தி வருகிறார். ஏற்கனவே, நாடாளுமன்றத் தேர்தலில் மூன்றாவது இடத்திற்கு தள்ளப்பட்டடோம். இதே நிலை நீடித்தால் எடப்பாடியின் 2026 கனவு கானல் நீராகிவிடும்’ என உண்மையான ரத்தத்தின் ரத்தங்கள் குமுறுகின்றனர்.

இந்த குமுறல்கள் குறித்து நம்மிடம் பேசிய சில ரத்தத்தின் ரத்தங்கள், ‘‘சார், மதுரை மாநகர் மாவட்டச் செயலாளராக இருப்பவர் செல்லூர் ராஜு! இவர் செயல்பாடுகள், பேச்சுக்கள் அனைத்தும் காமெடியாக இருந்தாலும், உள்ளுக்குள் விஷமத்தனமாக இருக்கும். அந்தளவிற்கு மதுரை மாநகரில் உள்ளடி வேலைகளை பார்த்து வருகிறார்.

இவருக்கு கீழ் பணியாற்றும் பகுதி செயலாளர்களுக்கு சுமார் ஒரு கோடி வரை, ஒரு பைசா வட்டிக் பணம் கொடுத்து வருகிறார். இவரிடம் பணம் பெற்றவர்கள்தான் பகுதிச் செயலாளர்களாக நீடிக்க முடியும். அதே போல் பினாமி பெயரில் நிலத்தை வாங்கிப் போட்டு குவித்து வருகிறார். இதில் ஒரு பினாமி அவர் பெயரில் உள்ள நிலத்திற்கு மற்றொருவரிடம் அட்வான்ஸ் தொகை வாங்கி விடுகிறார். இந்தத் தகவல் தெரிந்தவுடன் பணத்தை கொடுத்து அந்த நிலத்தை மீட்டிருக்கின்றனர். அதே போல், தனது தி.மு.க. தொடர்பின் மூலம் பினாமிகளுக்கு பல்வேறு பணிகளையும் மறைமுகமாக எடுத்துக் கொடுக்கிறார்.

இவர் மீது பல்வேறு குற்றச்சாட்டுக்கள் போயும், இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை. இதற்கு வேறொரு காரணத்தையும் சொல்கிறார்கள். இவர் மீது நடவடிக்கை எடுத்தால், சசிகலாவுக்கு ஆதரவாக பேசுவார் என்கிறார்கள். ஏற்கனவே, சசிகலாவின் தீவிர விசுவாசிதான் செல்லூர் ராஜு என்றனர். இவர் பின்னால் அ.தி.மு.க.வின் உண்மையான விசுவாசிகள் கிடையாது. இவர் மீது நடவடிக்கை எடுத்தாலும் இவர் பின்னால் யாரும் போகமாட்டார்கள் என்பதுதான் தற்போதையநிலை!

வருகிற 2026 சட்டமன்றத் தேர்தலில் அ.தி.மு.க. தோல்வியுற்றால், அக்கட்சியே இருக்காது என்பதுதான் நிதர்சனமான உண்மை. இந்த நிலையில் கட்சிக்கு விரோதமாக செயல்படுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்காவிட்டால், மதுரை மாநகரில் அ.தி.மு.க. காணாமல் போய்விடும். காரணம் கட்சிக்காக உண்மையாக உழைப்பவர்களுக்கு கட்சியால் ஆதாயம் அடைந்தவர்கள் செலவு செய்யனும் என கே.பி.முனுசாமி கூறியிருந்தார். ஆனால், கட்சியால் ஆதாயம் அடையாதவர்கள்தான் கீழ்மட்ட நிர்வாகிகளுக்கு செலவு செய்கின்றனர்’’ என்று குமுறினர்.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal