கீர்த்தி சுரேஷ் திருமணத்தில் விஜய் மற்றும் த்ரிஷா ஒன்றாக தனி விமானத்தில் சென்றது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. விமான நிலையத்தில் எடுக்கப்பட்ட விஜய்யின் வீடியோ வெளியானது குறித்து பாஜக தலைவர் அண்ணாமலை விமர்சித்துள்ளார்.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையான கீர்த்தி சுரேஷ் தனது 15 ஆண்டுகால காதலர் ஆண்டனி தட்டில் என்பவரை டிசம்பர் 12ம் தேதி திருமணம் செய்து கொண்டார். இவர்களது திருமணம் கோவாவில் நடைபெற்றது. இந்த திருமண நிகழ்ச்சியில் நெருங்கிய உறவினர்கள் மற்றும் நண்பர்கள் மட்டுமே பங்கேற்றனர். அதேபோல் திரையுலகைச் சேர்ந்த சிலர் மட்டுமே திருமணத்தில் கலந்து கொண்டனர். குறிப்பாக தவெக தலைவர் விஜய் மற்றும் த்ரிஷா ஆகியோர் தனி விமானத்தில் ஒன்றாக சென்று கீர்த்தி சுரேஷ் திருமண நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ளனர். இது தொடர்பான வீடியோ மற்றும் புகைப்படம் வைரலாகி சலசலப்பை ஏற்படுத்தி வருகிறது.

இந்நிலையில் விமான நிலையத்தில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களுக்கு பேட்டியளிக்கையில்: ‘‘தமிழக வெற்றிக் கழகம் தலைவர் விஜய் கோவாவிற்கு சென்றபோது அவரது தனிப்பட்ட புகைப்படம் எப்படி விமான நிலையத்தில் இருந்து வெளியே வந்தது. இதுதான் திமுக காட்டக்கூடிய அரசியல் நாகரீகம். யார் அந்த புகைப்படத்தை எடுத்து வெளியிட்டார்களோ அவர் மீது நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமென விமான போக்குவரத்து துறை அமைச்சருக்கு கடிதம் எழுதியுள்ளேன்.

வருகிறவர்கள், போகிறவர்களை போட்டோ எடுப்பது தான் மாநில உளவுத்துறையின் வேலையா. போட்டோ எடுத்து அதை திமுக ஐடி விங்குக்கு கொடுக்கும் வேலையை தான் செய்கிறார்களா. ஒரு மனிதரின் தனிப்பட்ட வாழ்க்கையில் தலையிட யாருக்கும் உரிமை இல்லை. யார் போட்டோ எடுத்து, யாருக்கு அனுப்பினார்கள் என ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்றார்.

பாஜக இத்தனை ஆண்டுகளில் ஒரு போதும் அம்பேத்கருக்கு எதிராக செயல்பட்டதில்லை. அல் உமா என்பது ஒரு தடை செய்யப்பட்ட இயக்கம். பாஷா ஊர்வலத்துக்கு காவல்துறை அனுமதி வழங்கியுள்ளது. பொறுப்பில் இருக்க கூடிய அரசியல்வாதிகள் பொறுப்போடு நடந்து கொள்ள வேண்டும். சீமான் பாஷா ஊர்வலத்தில் கலந்து கொண்டிருக்கிறார். எங்கே அரசியல் செய்ய வேண்டும் என சிந்திக்க வேண்டும். உதயநிதி இந்தி தெரியாது போடா என்று கூறியவர். அவருக்கு அமித் ஷா பேசியதில் என்ன புரிந்தது. காங்கிரஸ் அம்பேத்கருக்கு மிகப்பெரிய துரோகம் செய்துள்ளது. அதைத்தான் அமித் ஷா அம்பலப்படுத்தினார் என அண்ணாமலை கூறியுள்ளார்.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal