அ.தி.மு.க.வை ஒருங்கிணைக்கும் முயற்சியில் இறங்கியிருக்கும் சசிகலாவிற்கு அன்யிய செலாவணி மோசடி வழக்கு தலைக்கு மேல் கத்தியாக தொங்கிக்கொண்டிருக்கிறது.
சசிகலாவுக்கு எதிரான அன்னிய செலாவணி மோசடி வழக்கு விசாரணையை விரைந்து முடிக்க, எழும்பூர் நீதிமன்றத்துக்கு, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ஜெ.ஜெ., டிவிக்கு, வெளிநாட்டில் இருந்து, உபகரணங்கள் வாங்கியதில் மோசடி செய்ததாக, அன்னிய செலாவணி ஒழுங்குமுறை சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. அமலாக்கத்துறை தொடர்ந்த இந்த வழக்கில், முதலாவதாக ஜெ.ஜெ., டிவி நிறுவனம்; இரண்டாவதாக, ‘டிவி’ நிர்வாக இயக்குநர் பாஸ்கரன்; மூன்றாவதாக, ‘டிவி’ நிறுவன தலைவர் மற்றும் இயக்குநர் சசிகலா என குறிப்பிடப்பட்டிருந்தனர்.
இந்த வழக்கு, எழும்பூர் பொருளாதார குற்ற வியல் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. வழக்கு விசாரணை பட்டியலில், குற்றம் சாட்டப்பட்டவர்கள் வரிசையில், தனது பெயரை முதலாவதாக சேர்த்திருப்பதை எதிர்த்தும், சில கேள்விகளுக்கு பதில் அளிக்கும்படி, எழும்பூர் நீதிமன்றம் அனுப்பியதை எதிர்த்தும், உயர் நீதிமன்றத்தில், சசிகலா மனுக்கள் தாக்கல் செய்தார்.
இம்மனுக்கள், நீதிபதிகள் எஸ்.எம்.சுப்ரமணியம், எம்.ஜோதிராமன் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. அமலாக்கத்துறை சார்பில் ஆஜரான சிறப்பு வழக்கறிஞர் ரஜினிஷ் பதியில் ஆஜராகி, ‘‘அன்னிய செலாவணி ஒழுங்குமுறை சட்டத்தின்படி, வழக்கு விசாரணை பட்டியலில் உள்ள தவறால், விசாரணைக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது. இந்த தவறை, விசாரணை நீதிமன்றமே சரிசெய்ய முடியும்’’ என்றார்.
சசிகலா தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் பி.குமார், ‘‘ எழும்பூர் நீதிமன்றத்தில் உள்ள, இந்த வழக்கின் விசாரணை பட்டியலை மாற்றவேண்டும்’’ என கோரினார். இருதரப்பு வாதங்களுக்கு பின், சசிகலாவின் மனுக்களை தள்ளுபடி செய்து, நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
சென்னை எழும்பூரில் உள்ள பொருளாதார குற்ற வழக்குகளை விசாரிக்கும் நீதிமன்றத்தில், நிலுவையில் உள்ள இந்த வழக்கை விரைந்து விசாரிக்கவும், தேவையின்றி தள்ளி வைக்க கோராமல், குற்றம் சாட்டப்பட்டவர்கள் தரப்பில் விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு வழங்கவும், நீதிபதிகள் உத்தரவிட்டனர்.