‘மன்னராட்சியை ஒழிப்போம்… பிறப்பால் ஒருவர் முதலமைச்சர் ஆகக்கூடாது’ என ஆவேசமாக பேசிய ஆதவ் அர்ஜுனா வி.சி.க.வில் இருந்து விலகி அல்லது விலக்கப்பட்டால் த.வெ.க.வில் தடம் பதிக்க வாய்ப்பிருப்பதாக தகவல்கள் வெளியாகியிருக்கிறது.

‘எல்லோருக்கும் பொதுவானவர் அம்பேத்கர்’ எனும் நூலை விகடர் பிரசுரம் மூலமாக உருவாக்கிய வாய்ஸ் ஆப் காமன்ஸ் நிறுவனரும், வி.சி.க.வின் துணைப் பொதுச் செயலாளருமான ஆதவ் அர்ஜுனா பேசும்போது,

“பிறப்பால் அனைவரும் சமம் என்ற கருத்தியலை அம்பேத்கர் உருவாக்கியதை போல, பிறப்பால் இனி ஒருவர் முதலமைச்சராக கூடாது. இனி தமிழகத்தை ஆள வேண்டும் என்றால் ஒரு கருத்தியல் தலைவர்தான் ஆளவேண்டும்.

காலச் சூழல் காரணமாக திருமாவளவன் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்கவில்லை. ஆனால், அவரது மனசாட்சி இங்குதான் உள்ளது. ஒரு பட்டியலினத்தவர் முதல்வராக வரவேண்டும் எனும்போது அதற்காக முதல் குரலாக ஒலித்த குரல் விஜய்யின் குரல். ஆட்சியிலும் பங்கு, அதிகாரத்திலும் பங்கு என்பதை உரக்க சொல்வோம். 2 ஆயிரம் கோடி ரூபாய் தொழிலை விட்டுவிட்டு வந்துள்ளார் விஜய். ஆனால், இங்கே சிலர் சினிமாவில் ஒரு நிறுவனத்தை வைத்துக்கொண்டு ஆதிக்கம் செலுத்துகின்றனர்.

ஒரே நிறுவனத்தால் எப்படி மொத்த திரையுலகையும் கட்டுப்பாட்டில் வைத்திருக்க முடிகிறது. தமிழகத்தின் ஊழலையும், மதவாதத்தையும் விஜய் எடுத்து பேச வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன். வேங்கை வயல் பிரச்சினை இன்றைக்கு வரை தீர்க்க முடியாததற்கு காரணம் என்ன? ஒரு கான்ஸ்டபிள் நினைத்தால் கூட குற்றவாளியை பிடித்துவிடலாம். சாதிதான் இதற்கு முட்டுக்கட்டையாக நிற்கிறது.

ஆட்சி, அதிகாரத்தில் பங்கு கேட்டால் தப்பு என்கிறார்கள். தமிழகத்தில் கூட்டணி ஆட்சியை உருவாக்க வேண்டும். அதில் பட்டியலின மக்கள் பங்கேற்க வேண்டும். இங்கே மன்னராட்சிதான் நிலவுகிறது. கேள்வி கேட்டால் உடனே சங்கி என்கிறார்கள். தமிழகத்தில் மன்னராட்சிக்கு இடமில்லை. 2026-ல் மன்னராட்சி முழுமையாக ஒழிக்கப்படும். விஜய் வேங்கைவயல் கிராமத்துக்கு சென்று அந்த மக்களுடன் உரையாட வேண்டும். மக்கள் தமிழகத்தில் புதிய அரசியலை உருவாக்க முடிவெடுத்துவிட்டனர்” என்றார்.

தமிழ் சினிமா ஒரே நிறுவனத்தின் கட்டுப்பாட்டில் இருக்கிறது என உதயநிதியின் ரெட் ஜெயின்ட் நிறுவனத்தைத்தான் கூறியிருக்கிறார் ஆதவ் அர்ஜுனா! அதே சமயம் பிறப்பால் ஒருவர் முதலமைச்சராக வரக்கூடாது என உதயநிதியை மனதில் வைத்துதான் ஆதவ் அர்ஜுனா பேசியிருக்கிறார்.

விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் கூட்டணிக் கட்சியின் நலன் கருதி புத்தக வெளியீட்டு விழாவையே புறக்கணித்த நிலையில், தி.மு.க. ஆட்சியை 2026ல் அகற்றியே தீருவேன் என வி.சி.க.வின் துணைப் பொதுச் செயலாளராக இருந்து கொண்டு ஆதவ் அர்ஜுனா பேசியிருப்பதுதான் தி.மு.க. & வி.சி.க. கூட்டணியில் விரிசலை உண்டு பண்ணியிருக்கிறது.

இது தொடர்பாக திருமாவளவன் கூறுகையில் ‘‘மன்னராட்சி எப்போதே ஒழிக்கப்பட்டுள்ளது. மேடை பேச்சுகளில் இது போன்ற கருத்துகள், விமர்சனங்கள் வருவது இயல்புதான். இதை பொருட்படுத்த தேவையில்லை. தமிழ்நாட்டில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு இயங்குகிறது.

திமுக தலைமையிலான கூட்டணியில் விடுதலை சிறுத்தைகள் அங்கம் வகிக்கிறது. இந்த நிலையில் தி.மு.க. கூட்டணியில் குழப்பம் ஏற்படுத்தும் வகையில் கருத்து தெரிவித்து வருகிறார் என்பது உண்மை. அவரிடம் விளக்கம் கேட்போம். உரிய விளக்கம் கிடைக்கும் என்று பார்ப்போம். அதன்பிறகு கட்சி முன்னணி தோழர்களுடன் கலந்து பேசி முடி எடுப்போம்’’ என்று கூறியிருக்கிறார்.

ஆதவ் அர்ஜுனாவின் பேச்சு மற்றும் திருமாவளவனின் ரியாக்ஷன் குறித்து தமிழக அரசியல் பார்வையாளர்கள் சிலரிடம் பேசினோம்.

‘‘சார், முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆட்சிக் கட்டிலில் அமரவே முடியாது… அவருக்கு கட்டம் சரியல்லை என்று எல்லோரும் சொல்லி வந்த நிலையில், அந்தக் கட்டத்தை சரி செய்து மு.க.ஸ்டாலினை முதல்வர் நாற்காலியில் அமர வைத்ததில் ஆதவ் அர்ஜுனாவின் பங்கும் இருக்கிறது. அதாவது, தி.மு.க.விற்கு தேர்தல் வியூகம் வகுத்துக் கொடுத்தவர்கள் ஆதவ் அர்ஜுனா முக்கிய பங்காற்றினார்.

இந்த நிலையில்தான் தி.மு.க.விற்கு வியூகம் வகுத்த நிறுவனத்தில் இருந்து வெளியேறி (வெளியேற்றப்பட்டு) ‘வாய் ஆஃப் காமன்ஸ்’ என்ற நிறுவனத்தை ஆரம்பித்து வி.சி.க.வில் இணைந்தவுடன் துணைப் பொதுச் செயலாளர் பதவியை பெற்றார் ஆதவ் அர்ஜுனா. வி.சி.க.வில் துணைப் பொதுச்செயலாளர் ஆன பிறகு ‘வெல்லும் சனநாயகம்’ மற்றும் ‘மது ஒழிப்பு மாநாடு’ என்ற இரண்டு பிரம்மாண்ட மாநாட்டை நடத்தினார் ஆதவ் அர்ஜுனா!

அத்தோடு நில்லாமல் வி.சி.க. தலைவர் திருமாவளவன் ஏன் தமிழகத்தின் முதல்வர் ஆகக்கூடாது என கேள்வி எழுப்பினார். இப்படி வி.சி.க.வில் இருப்பவர்கள் பதவி நலனுக்காக தி.மு.க.விற்கு ஆதவாக பேசிக்கொண்டிருக்கு போது, கட்சி நலனுக்காகவும், கட்சியை வளர்ச்சிப் பாதைக்கு அழைத்துச் செல்லும் பணியிலும் ஈடுபட்டார் ஆதவ் அர்ஜுனா.

இந்த நிலையில்தான் அம்பேத்கர் புத்தக வெளியீட்டு விழாவில் தி.மு.க.வை நேரடியாக கடுமையாக ‘அட்டாக்’ செய்தார். இந்த நிலையில்தான் திருமாவளவன் ஆதவ் அர்ஜுனா மீது நடவடிக்கை எடுப்பாரா? என்ற கேள்வி எழுந்திருக்கிறது. அப்படி நடவடிக்கை எடுத்தால் இழப்பு திருமாவுக்கும், வி.சி.கவுக்கும்தான்!

காரணம், தமிழகத்தல் தினந்தோறும் வி.சி.க.வை ‘லைம் லைட்’டில் வைத்திருப்பவர் ஆதவ் அர்ஜுனா. அவரது வியூகங்களை பயன்படுத்திக்கொண்டால் வி.சி.க. தமிழகத்தில் சாதிக் கட்சி என்ற அடையாளத்தைத் தாண்டி ‘எல்லோருக்குமான கட்சி’ என்ற நிலைக்கு வரும். அதே சமயம், நடவடிக்கை எடுத்தால், ஆதவ் அர்ஜுனாவை த.வெ.க. பயன்படுத்திக்கொள்ளவும் தயாராக இருக்கிறது. அதற்காக விஜய் காத்திருப்பதாகவும் தகவல்கள் வருகிறது’’ என்றனர்.

என்ன நடக்கப் போகிறது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்..!

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal