நடிகர் விஜயின் தமிழக வெற்றி கழகத்தில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து பல்வேறு அரசியல் கட்சிகளை சேர்ந்தவர்கள் இணைந்து வருகின்றனர். இந்த நிலையில் இயக்குனர் மாரி செல்வராஜின் சொந்த கிராமத்திலிருந்து 300 பேர் ஒரே நேரத்தில் விஜய் கட்சியில் இணைந்து இருப்பது பலரையும் கவனிக்க வைத்திருக்கிறது. இயக்குனர் மாரி செல்வராஜ் திமுக இளைஞரணி தலைவரும், துணை முதலமைச்சருமான உதயநிதி ஸ்டாலினுக்கு மிக நெருக்கமானவர் என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழ் சினிமா உலகில் உச்சத்தில் இருக்கும்போதே அரசியலுக்கு வருவதாக அறிவித்த விஜய் அதனை செய்தும் காட்டி இருக்கிறார். கடந்த பிப்ரவரி மாதம் தமிழக வெற்றி கழகம் எனும் கட்சியை ஆரம்பித்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் தனது கட்சியின் முதல் மாநில மாநாட்டை நடத்திக் காட்டினார். அன்றிலிருந்து விஜய் குறித்த பேச்சு தான் தமிழகத்தில் இருக்கிறது.

பல்வேறு அரசியல் கட்சிகளும் ஏதாவது ஒரு வகையில் விஜய் குறித்து பேசி வருகின்றன. இது ஒரு புறம் இருக்க கட்சி ஆரம்பித்த போது உறுப்பினர் சேர்க்கையையும் விஜய் துவக்கி வைத்தார். குறிப்பாக உறுப்பினர் சேர்க்கைக்கு என்று தனி இணையதளம், மொபைல் செயலி உள்ளிட்டவை அறிமுகப்படுத்தப்பட்டது. அது மட்டுமல்லாமல் உறுப்பினர் சேர்க்கை முகாம்களும் நடத்தப்பட்டது. இதை அடுத்து ஒரு சில வாரங்களிலேயே 50 லட்சத்திற்கும் மேற்பட்ட உறுப்பினர்கள் அந்த கட்சியில் சேர்ந்ததாக கூறப்படுகிறது.

தற்போது 90 லட்சம் உறுப்பினர்கள் அந்த கட்சியில் சேர்ந்திருப்பதாக கூறப்படும் நிலையில், அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் வரவில்லை. ஒரு கோடி உறுப்பினர்கள் இணைந்ததற்குப் பிறகு இது தொடர்பான அறிவிப்பை வெளியிட அக்கட்சித் தலைமை திட்டமிட்டு இருப்பதாக சொல்லப்படுகிறது. இந்த நிலையில் இயக்குனர் மாரி செல்வராஜின் சொந்த ஊரான தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் அருகே புளியங்குளத்தைச் சேர்ந்த கிராம மக்கள் ஒட்டுமொத்தமாக தமிழக வெற்றி கழகத்தில் இணைந்து இருக்கின்றனர்.

வாழை படத்தில் சிவணைந்தன் பாத்திரத்தில் நடித்திருந்த பொன்வேல் தான் அந்த கட்சியில் இணைந்ததாக கூறப்பட்டது. மேலும் அவரது குடும்பத்தினரும் கட்சியில் இணைந்த நிலையில், தனது முதல் ஓட்டு விஜய்க்கு தான் என அவர் கூறியிருந்தார். ஆனால் விசாரித்த போது தான் மாரி செல்வராஜின் ஒட்டுமொத்த கிராமமே விஜய் கட்சியில் இணைந்து இருக்கிறது என்பது தெரியவந்துள்ளது.

திமுக, அதிமுக, விடுதலை சிறுத்தைகள், நாம் தமிழர் உள்ளிட்ட பல்வேறு கட்சிகளைச் சேர்ந்த 300 பேர் கடந்த 28ஆம் தேதி தூத்துக்குடி மாவட்ட தவெக பொறுப்பாளரான அஜிதா ஆக்னல் முன்னிலையில் கட்சியில் இணைந்துள்ளனர். விஜய் மீதான ஈர்ப்பின் காரணமாக புளியங்குளத்து மக்கள் மொத்தமாக தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்ததாகவும், ஒட்டுமொத்த கிராமமாக கட்சியில் இணைய விரும்பியதாக கூறியதை அடுத்து நாங்களே நேரடியாக சென்று அவர்களை கட்சியில் இணைத்துக் கொண்டோம். தங்கள் கிராமத்துக்கு எந்த அடிப்படை வசதியும் இல்லை விஜய் ஆட்சிக்கு வந்தால் தங்களது எண்ணங்கள் நிறைவேறும் என்பதால் கட்சியில் இணைந்துள்ளதாக தவெகவினர் கூறியுள்ளனர்

இயக்குனர் மாரி செல்வராஜ் தனது சொந்த கதையை வாழை படமாக எடுத்திருந்தார். அதில் அவரது கிராம மக்களே அதிகமாக நடித்திருந்தனர். மேலும் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலினை வைத்து அவர் மாமன்னன் படத்தை எடுத்திருந்தார். அதுவே உதயநிதி ஸ்டாலினின் கடைசி படம். உதயநிதி ஸ்டாலினுக்கு மாரி செல்வராஜ் மிக நெருக்கமாக இருக்கும் நிலையில் தமிழக வெற்றிக் கழகத்தில் அவரது கிராமம் ஒட்டுமொத்தமாக இணைந்து இருப்பது குறிப்பிடத்தக்கது.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal