சமீபத்தில் வெளியான ‘கோட்’ படத்தில் தனது மகளிடம் விஜய், ’நீ யாரோட ரசிகைமா?’ என கேட்பார். அதற்கு அவர், ‘தல’ என கூறுவார். அஜித் ரசிகர்களை மகிழ்விக்க விஜய் செய்த வியூகம் என அப்போதே பேசப்பட்டது.

இந்த நிலையில்தான், பெஞ்சல் புயல் கரையைக் கடந்துள்ள போதிலும், புதுச்சேரி, கடலூர், விழுப்புரம், கிருஷ்ணகிரி உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக விழுப்புரம், கிருஷ்ணகிரியில் பலத்த மழை பெய்தது.

இந்நிலையில், பெஞ்சல் புயலால் ஏற்பட்ட கனமழை காரணமாக சென்னைக்கு சமமாக விழுப்புரத்திலும் கடும் பாதிப்பு ஏற்பட்டது. சுமார் 48 மணி நேரம் இடைவிடாமல் கொட்டித் தீர்த்த கனமழை காரணமாக மாவட்டம் முழுவதும் வெள்ளைக் காடாக மாறியது. பல இடங்களில் மின்கம்பங்கள் மரங்கள் முறிந்து விழுந்தன. மின்சாரம் தடைபட்டதால் நகரப் பகுதிகளும் கிராமப் பகுதிகளும் இருளில் மூழ்கியது. தற்போது விழுப்புரம் பேருந்து நிலையம் உள்ளிட்ட பல பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. புயல் கரையை கடந்த பிறகும் மழை மற்றும் காற்றின் தாக்கம் குறையாமல் கன மழை கொட்டி தீர்த்து வருகிறது.

ரயில் பாலங்கள், தேசிய நெடுஞ்சாலைகளில் மழை வெள்ளத்தால் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் தமிழக வெற்றி கழக முதல் மாநில மாநாட்டை ஒட்டி நிறுவப்பட்ட கொடிக்கம்பத்தின் நிலை எப்படி இருக்கிறது என பார்ப்போம். கடந்த அக்டோபர் மாதம் 27ஆம் தேதி விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி வி-சாலை பகுதியில் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு நடைபெற்றது. இதில் விஜய் கலந்து கொண்டு கட்சியின் கொடியை ஏற்றி வைத்தார். மாநாட்டின் நினைவாக 100 அடி கொடிக்கம்பம் 120 சதுர அடி பீடத்துடன் அமைக்கப்பட்ட நிலையில் அந்த இடத்தை 5 ஆண்டுகளுக்கு குத்தகைக்கு விஜய் எடுத்துள்ளார்.

தற்போது தமிழக வெற்றி கழகத்தின் மாநாடு நிறைவு பெற்று இருக்கும் நிலையில், மாநாட்டின் நினைவாக நிரந்தரமாக சுமார் 100 அடி கொடிக்கம்பமும் பிரம்மாண்ட கொடியும் அங்கேயே உள்ளது. சுமார் எட்டு அடி ஆழத்திற்கு அஸ்திவாரம் தோண்டி, 120 சதுர அடி பரப்பரளவில் பீடம் அமைக்கப்படவுள்ளது. 100 அடி உயர கொடிக்கம்பத்தில் கொடியையும் நிரந்தரமாக பறக்க விடப்பட்டுள்ளது. புயல், மழை, நிலநடுக்கம் என அனைத்தையும் தாங்கும் வகையில் “விண்ட் வெலாசிட்டி” என்ற அமைப்புடன் இந்த கொடி கம்பம் அமைந்துள்ளது.

இந்நிலையில் அதனை சோதனை செய்வது போலவோ என்னவோ, விழுப்புரம் மாவட்டத்தில் பெஞ்சல் புயல் காரணமாக பலத்த காற்றுடன் மழை பெய்தது. குறிப்பாக 60 முதல் 80 கிலோ மீட்டர் வேகத்தில் பலத்த காற்று வீசியது. ஆனாலும் விஜய் கட்சி கொடிக் கம்பம் சிறு அசைவு கூட இன்றி கம்பீரமாக நின்றது. ஆனாலும் கொடி கட்டப்பட்டிருந்த கயிறு லேசாக கழன்று விடுவது போல் இருந்தது.

இதனையடுத்து கொடியும் கம்பத்தில் இருந்து விலகி அறுந்து விழுவது போல் பறந்தது. இந்நிலையில் விழுப்புரம் சென்னை தேசிய நெடுஞ்சாலையில் பயணித்த இருவர், மழை புயலையும் பொருட்படுத்தாது கொடிக் கம்பம் அருகே சென்று, லூசாக இருந்த கயிறை இறுக்கிக் கட்டினர். இதனையடுத்து தவெக கொடி மீண்டும் உறுதியாக கம்பீரமாக பறந்தது. தற்போது இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பகிரப்பட்டு வரும் நிலையில் அவர்கள் அஜித் ரசிகர்கள் என கூறப்படுகிறது.

இதனையடுத்து விஜய் ரசிகர்கள், அஜித் ரசிகர்களை பாராட்டியும் அவர்களுக்கு நன்றி தெரிவித்தும் வருகின்றனர். ஏற்கனவே அஜித்குமார் தனது ரேஸ் காரில் விஜய் கட்சி கொடி வண்ணம் மூலம் விஜய்க்கு ஆதரவு தெரிவித்துள்ளதாக சமூக ஊடகங்களில் விவாதம் எழுந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal