வங்கக்கடலில் மையம் கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் 10 கி.மீ வேகத்தில் நகர்ந்து வருகிறது என வானிலை மையம் தெரிவித்துள்ளது.
தென்கிழக்கு வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடைந்துள்ளது. காற்றழுத்த தாழ்வு மண்டலம் 10 கி.மீ வேகத்தில் நகர்ந்து வருகிறது. நாகப்பட்டினத்தில் இருந்து தென்கிழக்கு திசையில் சுமார் 630 கி.மீ தொலைவில் தாழ்வு மண்டலம் அமைந்துள்ளது. காற்றழுத்த தாழ்வு மண்டலம் டெல்டாவை நோக்கி நகர்ந்து வருகிறது.
சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், விழுப்புரம், புதுச்சேரி, கடலூர், காரைக்காலில் கனமழை பெய்து வருகிறது.காற்றழுத்த தாழ்வு மண்டலத்தின் நகர்வு காரணமாக, தமிழகத்தின் கடலோர மாவட்டங்களில், அடுத்த நான்கு நாட்களுக்கு கனமழை பெய்யும். காற்றழுத்த தாழ்வு மண்டலம் வலுவடைந்து வருவதால், அடுத்த ஐந்து நாட்களுக்கு மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
தற்போது உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம், ஆச்சரியத்தை ஏற்படுத்துவதாக உள்ளது. தற்போது இலங்கை அருகே நிலை கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம், 1912, 1925ம் ஆண்டும் இதே இடத்தில் உருவாகியுள்ளது. அதே மாதத்தில் அதே இடத்தில் புயல் சின்னம் உருவாகி அதே வழித்தடத்தில் பயணிப்பது வானிலை ஆய்வாளர்கள் மத்தியில் ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது.