தமிழக நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சரும் திமுக முதன்மை செயலாளருமான கே.என். நேரு காய்ச்சல் பாதிப்பு காரணமாக சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
திமுகவின் முதன்மை செயலாளரும், தமிழக நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சருமாக இருப்பவர் கே.என். நேரு. பருவமழை தீவிரம் அடைந்துள்ளதால், மழை தொடர்பான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை கண்காணித்து வந்த அமைச்சர் கே.என். நேருவுக்கு உடல் சோர்வு ஏற்பட்டு காய்ச்சலுக்கான அறிகுறிகள் ஏற்பட்டதாக சொல்லப்படுகிறது.
இதையடுத்து, சென்னையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனைக்கு கே.என்.நேரு சென்றார். அவருக்கு காய்ச்சல் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும், அதற்கான சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. சிகிச்சை முடிந்து விரைவில் தனது வழக்கமான பணிகளுக்கு அமைச்சர் கே.என். நேரு திரும்புவார் என்றும் மருத்துவமனை வட்டாரங்கள் கூறுகின்றன.
எனினும், மருத்துவமனை தரப்பில் அதிகாரப்பூர்வ தகவல் எதுவும் வெளியாகவில்லை. அமைச்சர் கே.என். நேரு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு இருக்கும் இதே மருத்துவமனையில் தான், ரிசர்வ் வங்கி கவர்னர் சக்திகாந்த தாஸ் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். நெஞ்சு வலி காரணமாக சக்தி காந்த தாஸ் அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுளார். அப்பல்லோ மருத்துவமனையில் அடுத்தடுத்து இரு முக்கிய பிரமுகர்கள் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதால் மருத்துவமனை வளாகம் இன்று காலை முதலே பரபரப்பாக காணப்பட்டது.