தமிழகத்தில் தங்கத்தை வாங்கிவிடலாம்… ஆனால் ஆற்று மணலை வாங்க முடியாது. அந்தளவிற்கு மணல் தட்டுப்பாடு! இந்த நிலையில்தான் மண்ல் ஒப்பந்த விவகாரத்தில் எஸ்.ஆரா..? ராசப்பாவா..? என இருவருக்கும் இடையே கடும் போட்டி நிலவுகிறது!
தமிழகத்தில் மணல் விற்பனையை தமிழக அரசே செய்து வருகிறது. ஆனால், ஆற்றுப் படுகைகளில் அனுமதிக்கப்பட்ட குவாரிகளில் இருந்து மணல் அள்ளிக் கொடுக்கும் ஒப்பந்தத்தை புதுக்கோட்டை எஸ்.ராமச்சந்திரன், திண்டுக்கல் ரத்தினம் மற்றும் கரிகாலன் ஆகிய மூவரிடம் ஒப்படைத்தது திமுக அரசு. இவர்கள் ஏற்கனவே அதிமுக ஆட்சியின் போது தொழிலதிபர் சேகர் ரெட்டி தலைமையின் கீழ் பணிபுரிந்தவர்கள்.
மணல் தொழிலில் இருந்து சேகர் ரெட்டி விலகியப் பிறகு இந்த மூவர் அணி அதனை கெட்டியாகப் பிடித்துக் கொண்டது. அதிமுக ஆட்சியில் கோலோச்சிய இவர்கள், திமுக ஆட்சியிலும் கொடி கட்டிப்பறந்தனர். இந்த நிலையில், கடந்த நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக மற்றும் பாஜகவின் வெற்றிக்காக அந்த கட்சிகளுக்கு தேர்தல் நிதி வழங்கினர். 2026 சட்டமன்றத் தேர்தலிலும் அக்கட்சிகளுக்காக தேர்தல் செலவுகளை கவனித்துக்கொள்ள சம்மதித்துள்ளனர். இந்த சீக்ரெட் விவகாரம் உளவுத்துறை மூலம் அறிந்த திமுக தலைமை, அவர்கள் மீது செம காட்டம் கொண்டது. இதனால், இந்த மூவர் அணியிடமிருந்து மணல் பிஸ்னெஸ்சை வேறு நபர்களுக்கு மாற்றிக்கொடுக்க ஆட்சித் தலைமை முடிவு செய்தது. இதனை அடுத்து மணல் குவாரிகளை மூடியது அரசு.
மணல் விற்பனையும் தமிழகம் முழுவதும் நடக்கவில்லை. மணல் விற்பனை இல்லாததால், எம்.சாண்ட் விலை அதிகரித்தது; அதிகரித்தும் வருகிறது. முறையான மணல் விற்பனை இல்லாததால், கட்டுமான பணிகளும் தேக்கமடைந்து வருகின்றன.
இதற்கிடையே அமலாக்கத்துறை மனல் விவகாரத்தில் நுழைந்ததால், மணல் குவாரிகள் மூடப்பட்டன. இப்படிப்பட்ட சூழலில்தான், மணல் குவாரிகள் செயல்படாததால் தமிழக அரசும் பல்வேறு சிக்கல்களை எதிர்கொண்டு வருகிறது. இதனை முடிவுக்கு கொண்டு வர, மூவர் அணிக்கு பதிலாக, வேறு மூன்று பேருக்கு பிரித்து தர முடிவு செய்திருக்கிறது. அதன்படி, மயிலாடுதுறையை சேர்ந்த ராசப்பா, நாமக்கல்லை சேர்ந்த பொன்னர்-சங்கர், கரூர் கே.சி.பழனிச்சாமி ஆகிய மூவரிடம் மேலிடம் சார்பில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. இதில் ராசப்பாவுக்காக, தலைமைக்கு நெருக்கமான சீனியர் அமைச்சர் ஒருவரும், கே.சி.பி.க்காக மற்றொரு முக்கிய அமைச்சர் ஒருவரும் சிபாரிசு செய்துள்ளனர்.
இரட்டையர்களான பொன்னர் & -சங்கர், வேறு ரூட்டில் முயற்சித்து வருகிறார்கள். மாதந்தோறும் குறிப்பிட்ட தொகையை கொடுப்பதாக கோட் பண்ணியிருக்கிறார் ராசப்பா. மற்றவர்கள் இதை விட குறைவாக கோட் பண்ணியுள்ளனர். ராசப்பாவுக்கு முதல் வாய்ப்பைத் தந்த மேலிடம், கோட் பண்ணிய தொகையை குறிப்பிட்ட தேதியில் கட்டச்சொல்லி வலியுறுத்தியது. ஆனால், மொத்த தொகையையும் அவரால் ரெடி செய்ய முடியவில்லை. மணல் பிஸ்னெஸ்சில் உள்ள பலரிடமும் தொகையை சேகரிக்கத் தொடங்கினார்.
ஆனாலும் அவரால் புரட்டமுடியவில்லை. மேலும் இந்த பிஸ்னெஸில் ராஜப்பாவின் உண்மையான முகம் என்னவென்பதை தலைமைக்கு சீனியர் நிர்வாகிகள் பலர் தெரிவித்திருக்கிறார்கள். இதனால் ராசப்பா மீது தலைமைக்கு அப்-செட்! அதேசமயம், அவருக்காக சிபாரிசு செய்து வரும் அமைச்சர், தலைமையை சமாதானப்படுத்தியிருக்கிறார். இந்த நிலையில், மணல் காண்ட்ராக்ட்டை யாருக்கு கொடுப்பது? என்கிற உச்ச பச்ச டென்சனில் இருந்து வருகிறது ஆட்சித் தலைமை.
அதே சமயம் ‘மாப்பிள்ளை’யின் ஆடிட்டர் மூலமாக மீண்டும் மணல் குவாரிகளை தங்கள் வசப்படுத்த எஸ்.ஆர்.குரூப் காய்நகர்த்தல்கள் தொடங்கியிருக்கிறதாம்! ‘மாப்பிள்ளை’யின் ஆசி யாருக்கு கிடைக்கப்போகிறது? என மணல் வட்டாரங்கள் எதிர்பார்த்துக் காத்திருக்கிறது..!