வரும் நவம்பர் 23ம் தேதி வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
தமிழகத்தில் கடந்த சில வாரங்களாக காவிரி டெல்டா உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இடைவிடாது மழை கொட்டியது. நெல்லை, கன்னியாகுமரி, கோவை, திருப்பூர் உள்ளிட்ட மாவட்டங்களிலும் பரவலாக மழை பதிவானது.
இந்நிலையில் நவ.23ம் தேதி வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகிறது என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது, இது குறித்து வெளியிடப்பட்டு உள்ள அறிக்கையில் கூறப்பட்டு உள்ளதாவது;
தமிழகத்தில் இன்று (நவ.19) 10 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது. மயிலாடுதுறை, நாகை, புதுக்கோட்டை, திருவாரூர், கன்னியாகுமரி, ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களிலும் இன்று கனமழைக்கு வாய்ப்பு இருக்கிறது.
சென்னையில் இன்றும், நாளையும் (நவ.20) ஓரிரு இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது. நவ. 21ம் தேதி தெற்கு அந்தமான் கடல், அதனை ஒட்டிய பகுதிகளில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி உருவாகிறது.
பின்னர் நவ.23ம் தேதி புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாக உள்ளது. தாழ்வுப்பகுதி தாழ்வு மண்டலமாக வலுப்பெறும் வாய்ப்புகள் அதிகம். காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாக உள்ளதால் நாகை மீனவர்கள் கடலுக்குச் மீன்பிடிக்க செல்ல வேண்டாம். இவ்வாறு சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.