தி.மு.க. இளைஞரணிச் செயலாளர் உதயநிதி ஸ்டாலின், துணை முதலமைச்சரான பிறகு முதன் முறையாக தூத்துக்குடிக்கு இரண்டு நாள் பயணமாக வருகை தந்தார். தூத்துக்குடிக்கு வருகை தந்த உதயநிதிக்கு இளைஞரணி துணைச் செயலாளர் எஸ்.ஜோயல் தலைமையில் இளைஞரணியினர் பிரம்மாண்ட வரவேற்பு கொடுத்து அசத்தினார்கள்.
தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தூத்துக்குடியில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக, சென்னையில் இருந்து விமானம் மூலம் மதுரை வந்து, அங்கிருந்து கார் மூலம் நேற்று இரவு தூத்துக்குடி மாவட்டத்துக்கு வந்தார்.
அவரை வடக்கு மாவட்ட செயலாளரும், சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை அமைச்சர் பெ.கீதாஜீவன், தெற்கு மாவட்ட செயலாளரும், மீன்வளம், மீனவர் நலன் மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சருமான அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன், தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி, எம்எல்ஏக்கள் ஜீ.வி. மார்க்கண்டேயன், எம்.சி.சண்முகையா உள்ளிட்டோர் வரவேற்றனர்.
இந்த நிலையில்தான் தூத்துக்குடி சென்றுள்ள உதயநிதி ஸ்டாலின் தனது எக்ஸ் தள பக்கத்தில், ‘‘3 ஆண்டுகளுக்கு முன்பு நம்
@dmk_youthwing
மூலம் உதவி பெற்ற மாற்றுத்திறனாளி உடன்பிறப்பு ஒருவர் இன்று பலருக்கு உதவும் ஏணியாய் உயர்ந்திருக்கிறார்.
2021 சட்டமன்றத் தேர்தலில் வென்று சேப்பாக்கம்- திருவல்லிக்கேணி தொகுதியில் இருந்த நம்மை தூத்துக்குடியிலிருந்து மூன்று சக்கர மோட்டார் சைக்கிளில் வந்திருந்தார் தம்பி ஜஸ்டின்.
‘நான் வாழ்வில் முன்னேற துணை நில்லுங்கள் அண்ணா’ என்று உரிமையுடன் கரங்களைப் பற்றினார். சிறுதொழில் தொடங்கிட ஏதுவாக கழக இளைஞரணி சார்பில் அவருக்கு தூத்துக்குடி மாவட்ட அரசு பொது மருத்துவமனை அருகில் தேனீர் மற்றும் ஜுஸ் கடை ஒன்றை அமைத்துத் தந்தோம். அதற்கு நம்முடைய பெயரையும் அவர் சூட்டினார்.
இந்த 3 ஆண்டுகளில், தன்னம்பிக்கையோடும் திறமையுடனும் தன்னுடைய கடையை வெற்றிகரமாக நடத்தி வருகிறார். தான் ஈட்டும் வருவாயில் ஒரு பகுதியை தன்னால் இயன்ற அளவுக்கு சமூக நலனுக்கும் செலவிடுகிறார்.
அந்த வகையில், தம்பி ஜஸ்டினின் ஏற்பாட்டில் சென்றாண்டு 3 தையல் மெஷின்கள் மற்றும் இரு மூன்று சக்கர வாகனங்களை பயனாளிகளுக்கு வழங்கினோம்.
இதைத்தொடர்ந்து இன்றைக்கு மேலும், 5 தையல் மெஷின் மாற்றுத்திறனாளிகள் இருவருக்கு மூன்று சக்கர வண்டிகளை தம்பி ஜஸ்டினின் அவர்களுடைய ஏற்பாட்டில் இன்று வழங்கினோம்.
‘வாழ்க்கையில் உயர்ந்திட உதவுகள்’ என்ற அவர், இன்று பிறர் உயர பறக்க சிறகுகள் தந்து கொண்டிருப்பதை நேரில் காணும் போதும் மகிழ்ச்சியாகவும் – பெருமையாகவும் இருக்கிறது.
வாழ்த்துகள் ஜஸ்டின்! உங்கள் பணிகள் தொடரட்டும்!’’ என பதிவிட்டிருக்கிறார்.
தூத்துக்குடி விமான நிலையத்தில் துணை முதல்வருக்கு மலர்கொத்து கொடுத்து வரவேற்ற இளைஞரணி துணைச் செயலாளர் எஸ்.ஜோயல், மிகச் சிறப்பான வரவேற்புகளை ஏற்பாடு செய்திருந்தார். இந்த நிகழ்ச்சியில் தூத்துக்குடி எம்.பி., கனிமொழி கலந்துகொள்ளாமல் புறக்கணித்திருப்பது குறிப்பிடத்தக்கது.