“சென்னை மருத்துவர் மீதான தாக்குதலைக் கண்டித்து அரசு மருத்துவர்கள் சங்கம் அறிவித்துள்ள வேலைநிறுத்தப் போராட்டம் குறித்து, தமிழக முதல்வரின் அறிவுறுத்தலின் பேரில், மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் அனைத்து அரசு மருத்துவர்கள் சங்கத்தினருடன் இன்று மாலை பேச்சுவார்த்தையில் ஈடபடவுள்ளதாக,” துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் கூறியுள்ளார்.

சென்னை கிண்டியில் உள்ள கலைஞர் நூற்றாண்டு அரசு மருத்துவமனைக்கு இன்று வழக்கம்போல் நோயாளிகள் சிகிச்சைக்காக வந்திருந்தனர். இம்மருத்துவமனையின் புற்றுநோய் பிரிவின் சிறப்பு மருத்துவர் பாலாஜி. மருத்துவமனைக்கு வந்தவர் மருத்துவர் பாலாஜியிடம் தகராறில் ஈடுபட்டுள்ளார். பின்னர், அந்த நபர் தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் மருத்துவர் பாலாஜியை குத்தியுள்ளனர். இந்த தாக்குதலில் படுகாயமடைந்த மருத்துவர் பாலாஜி தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சையளிக்கப்படுகிறது.

இதனிடையே, சம்பவம் நடந்த மருத்துவமனையில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் நேரில் ஆய்வு செய்தார். பின்னர் மருத்துவமனை வளாகத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது: “தாக்குதலில் காயமடைந்த மருத்துவர் பாலாஜி ஜெகநாதன் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்ட மருத்துவக் கண்காணிப்பில் நலமுடன் இருக்கிறார். இன்னும் சில மணி நேரங்களில் அவருக்கு நினைவுக்குத் திரும்பிவிடுவார். இச்சம்பவம் தொடர்பாக முழுமையான விசாரணை மேற்கொள்ளப்படும். மருத்துவர் மீது தாக்குதல் நடத்திய இளைஞரை காவல்துறையினர் உடனடியாக கைது செய்துள்ளனர்.

இந்த சம்பவம் வன்மையாக கண்டிக்கத்தக்க ஒரு செயல். எனவே, இத்தகைய செயலில் ஈடுபட்டுள்ள அந்த இளைஞர் மீது கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும். தமிழகத்தில் உள்ள அனைத்து மருத்துவர்கள் மீது அக்கறை கொண்டுள்ளது இந்த அரசு. மருத்துவர்களுக்கு தேவையான பாதுகாப்பினை உறுதியாக வழங்க வேண்டும் என்பதில் தமிழக முதல்வர் உறுதியாக இருக்கிறார். எனவே சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும்.

இந்த தாக்குதலில் மருத்துவரின் தலைப்பகுதியில் 4 இடங்களிலும், இடது கழுத்துப்பகுதி, தோள்பட்டை, காதுமடலில் காயம் ஏற்பட்டுள்ளது. இவை அனைத்துக்கும் உரிய சிகிச்சை அளிக்கப்பட்டிருக்கிறது. மருத்துவர்கள் கண்காணிப்பில் சிகிச்சை அளிக்கப்படுகிறது. பாதிக்கப்பட்ட குடும்பத்தினரைச் சந்தித்து ஆறுதல் கூறியிருக்கிறோம், என்றார்.

அப்போது அரசு மருத்துவர்கள் வேலைநிறுத்தப் போராட்ட அறிவிப்பு குறித்த கேள்விக்கு பதிலளித்த அவர், தமிழக முதல்வரின் அறிவுறுத்தலின் பேரில், மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் அனைத்து அரசு மருத்துவர்கள் சங்கத்தினருடன் இன்று மாலை ஒரு கூட்டத்தை நடத்தவுள்ளார். மேலும், தாக்குதல் நடத்திய இளைஞர் விக்னேஷ் இந்த மருத்துவமனைக்கு தனது தாயாரை அழைத்துக்கொண்டு 6 மாதங்களாக சிகிச்சைக்கு வந்திருக்கிறார். அதனால் யாருக்கு அவர் மீது எந்த சந்தேகமும் ஏற்படவில்லை. இனிவரும் காலங்களில் இதுபோன்ற சம்பவங்கள் நிகழாத வகையில் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal