‘த.வெ.க. தலைவர் விஜய் செயல்பாட்டில் தெளிவில்லை’ என பா.ஜ-.க. ஒருங்கிணைப்புக் குழு தலைவர் எச்.ராஜா குற்றஞ்சாட்டியிருக்கிறார்.

திருவள்ளூர் மாவட்டம், திருத்தணியில் தமிழக பா.ஜ.க, ஒருங்கிணைப்புக்குழு தலைவர் ஹெச்.ராஜா அளித்த பேட்டியில்,

‘‘தமிழகத்தில், 10,000 பள்ளி ஆசிரியர்கள் போலியாக இருப்பது மட்டுமல்ல; தமிழகம் முழுதும் 1,500 அரசு பள்ளிகளில், ஒன்றாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்கள் எண்ணிக்கை, ஒற்றை இலக்கமாக உள்ளது. இந்த பள்ளிகள் மூடப்படும் அபாய நிலையில் உள்ளன.

தமிழகத்தில் விளையாட்டு பல்கலைக் கழகம் ஏற்படுத்த வேண்டும் என, கடந்த 2001ல், நான் எம்.எல்.ஏ.,வாக இருந்தபோது, சட்டசபையில் என் முதல் பேச்சில், காரைக்குடியில் விளையாட்டு துறைக்கு பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் என கோரிக்கை வைத்தேன். அப்போதைய முதல்வர் ஜெயலலிதா அதை ஏற்றுக் கொண்டார். ஆனால், துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் ஸ்ரீபெரும்புதூரில் விளையாட்டு பல்கலைக்கழகம் ஏற்படுத்தப்படும் என, தற்போது கூறியுள்ளார்.

பதினெட்டு வயது நிரம்பியவர்கள் யாராக இருந்தாலும் வாக்காளராகலாம்; அரசியல் கட்சியும் துவங்கலாம். அந்த வகையில், நடிகர் விஜய் கட்சி துவக்கியுள்ளார். அவரது சிந்தனையிலும், செயல்பாட்டிலும் தெளிவு இல்லை.

கடந்த 35 ஆண்டுகளாக பா.ஜ.,வில் இருக்கிறேன். ஒரு நாளும் கூட்டணி குறித்து பேசியது கிடையாது. தலைமை என்ன முடிவெடுக்கிறதோ, அது தான் இறுதி முடிவு. ஆனால், முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், என்ன பேசுகிறார் என அவருக்கே தெரியவில்லை.

போகிற போக்கில், ‘எனக்கு அ.தி.மு.க.,வுடன் கூட்டணி இல்லை; ஒட்டும் இல்லை, உறவும் இல்லை’ என பேசிவிடுவாரோ என்று பயமாக இருக்கிறது. ஜெயக்குமார் பேச்சு அப்படியொரு அபத்தம்’’ இவ்வாறு அவர் கூறினார்.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal