அதிமுக கள ஆய்வுக் குழு தாக்கல் செய்ய உள்ள ஆய்வு அறிக்கை வெளிப்படை தன்மையுடன் இருக்க வேண்டும் என்று அக்கட்சியின் பொதுச் செயலாளர் பழனிசாமி அறிவுறுத்தியுள்ளார்
அதிமுக கிளை, வார்டு, வட்டக் கழகங்கள் மற்றும் சார்பு அமைப்புகளின் பணிகள், செயல்பாடுகள் குறித்து நேரடியாக கள ஆய்வு செய்ய `கள ஆய்வுக் குழு’ ஒன்றை கட்சியின் பொதுச்செயலாளர் பழனிசாமி கடந்த வாரம் நியமித்தார்.
அதன்படி, கட்சியின் பல்வேறு நிலைகளில் உள்ள கட்டமைப்புகளின் பணிகளை மேம்படுத்துவது குறித்தான கருத்துகளைப் பெற்றிடவும், புதுப்பிக்கப்பட்ட கட்சி உறுப்பினர் உரிமைச் சீட்டுகள் முழுமையாக கட்சி உறுப்பினர்கள் அனைவரிடமும் சென்றடைந்ததா என்பதை மாவட்ட வாரிய சென்று கள ஆய்வு செய்து, அதன் விவரங்களை அறிக்கையாக டிச.7ம் தேதிக்குள் அளிக்கவும் `கள ஆய்வுக் குழு’வுக்கு பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.
இக்குழுவில் முன்னாள் அமைச்சர்களான கட்சியின் துணைப் பொதுச்செயலாளர்கள் கே.பி.முனுசாமி, நத்தம் விஸ்வநாதன், பொருளாளர் திண்டுக்கல் சீனிவாசன், தலைமை நிலைய செயலாளர் எஸ்.பி.வேலுமணி, அமைப்பு செயலாளர்கள் பி.தங்கமணி, டி.ஜெயக்குமார், சி.வி.சண்முகம், செ.செம்மலை, அ.அருணாசலம், மகளிரணி செயலாளர் பா.வளர்மதி ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். இக்குழு உடனான ஆலோசனை கூட்டம், சென்னை ராயப்பேட்டையில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்தில் இன்று நடைபெற்றது.
பழனிசாமி தலைமையில் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் அவர் கூறியதாவது: ‘‘கள ஆய்வின் போது, மாவட்ட செயலாளர்களின் செயல்பாடு, கட்சி நிர்வாகிகளின் செயல்பாடு, தொகுதி வெற்றி நிலவரம், பொதுமக்கள் மற்றும் தொண்டர்களின் அதிருப்திக்கு உள்ளான நிர்வாகிகள், அதற்கான காரணம் உள்ளிட்டவை குறித்து விரிவாக விசாரித்து அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்.
அந்த அறிக்கை உண்மை தன்மையுடனும், வெளிப்படை தன்மையுடனும் இருக்க வேண்டும். மாவட்ட செயலாளர்கள் செயல்பாடு திருப்தி அளிக்கவில்லை என்றாலும் அதனை பாரபட்சமின்றி அறிக்கையில் குறிப்பிட வேண்டும். கள ஆய்வு குழு அளிக்கும் அறிக்கை மீது கட்சி உறுதியாக நடவடிக்கை எடுக்கும்’’இவ்வாறு பழனிசாமி கூறினார்.
இந்த ஆலோசனைக் கூட்டத்தில், எஸ்.பி.வேலுமணி தவிர்த்து குழுவில் உள்ள அனைவரும் இடம்பெற்று இருந்தனர்.