தெலுங்கர்கள் பற்றி அவதூறாக பேசியதாக நடிகை கஸ்தூரி மீது சென்னை எழும்பூர் போலீசார் 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இதுதொடர்பான விசாரணைக்கு ஆஜராகக்கோரி கஸ்தூரிக்கு போலீசார் சம்மன் வழங்க சென்றபோது முன்னதாகவே அவர் தனது வீட்டை பூட்டிவிட்டு தலைமறைவாகி உள்ளார். செல்போனும் ஸ்விட்ச் ஆஃப் செய்யப்பட்டுள்ளதால் நடிகை கஸ்தூரியை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

நடிகை கஸ்தூரி ஆளும் திமுக மற்றும் திராவிட சித்தாந்தம் பேசுபவர்களை சமூக வலைதளங்களில் கடுமையாக விமர்சனம் செய்து வருகிறார்.

சில நாட்களுக்கு முன்பு சென்னையில் இந்து மக்கள் கட்சி சார்பில் பிராமணர்களுக்கான ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில் நடிகை கஸ்தூரி கலந்து கொண்டார். அப்போது அவர் தெலுங்கு பேசும் மக்களை கடுமையாக விமர்சனம் செய்தார்.

நடிகை கஸ்தூரியின் இந்த கருத்து பெரும் சர்ச்சையை கிளப்பியது. அதாவது கஸ்தூரி, ‘‘300 ஆண்டுகளுக்கு முன்பு வந்த ஒரு ராஜாவுக்கு அந்தப்புர மகளிருக்கு சேவை செய்ய வந்தவர்களை, தெலுங்கு பேசியவர்களை எல்லாம் தமிழர்கள் இனம் என்று சொல்லும்போது.. எப்போதோ வந்த பிராமணர்களை தமிழர்கள் இல்லை என்று சொல்வதற்கு இங்கு யார் இருக்கிறார்கள்? அதனால்தான் இங்கு தமிழர்கள் முன்னேற்ற கழகம் என்று யாரும் வைக்க முடியவில்லை’’ என்ற கருத்தை பேசினார்.

நடிகை கஸ்தூரியின் இந்த கருத்துக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது. தெலுங்கர்களை கஸ்தூரி இழிவுப்படுத்தியதாக சர்ச்சை கிளம்பியது. இதையடுத்து மறுநாளே பத்திரிகையாளர்களை சந்தித்த நடிகை கஸ்தூரி மன்னிப்பும் கோரினார். இருப்பினும் கூட நடிகை கஸ்தூரிக்கு எதிராக தமிழகத்தின் பல்வேறு போலீஸ் நிலையங்களில் புகார்கள் வழங்கப்பட்டது. அகில இந்திய தெலுங்கு சம்மேளன அமைப்பு சார்பில், சென்னை எழும்பூர் காவல் நிலையத்தில் நடிகை கஸ்தூரி மீது புகார் அளிக்கப்பட்டு இருந்தது. இந்த புகாரையடுத்து நடிகை கஸ்தூரி மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இருபிரிவினர் இடையே கலகத்தை தூண்டுதல் உள்பட 4 பிரிவுகளில் கஸ்தூரி மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

இந்த வழக்கில் நடிகை கஸ்தூரியை விசாரணைக்கு அழைக்க முடிவு செய்துள்ளனர். இதையடுத்து சம்மன் வழங்க சென்னை போயஸ் கார்டனில் உள்ள அவரது வீட்டுக்கு எழும்பூர் போலீசார் சென்றனர். அப்போது அவரது வீடு பூட்டுப்போட்டு பூட்டப்பட்டு இருந்தது. நடிகை கஸ்தூரி வீட்டில் இல்லை. இதையடுத்து அவரது செல்போன் எண்ணை போலீசார் தொடர்பு கொண்டனர். அப்போது செல்போன் ஸ்விட்ச் ஆஃப் செய்யப்பட்டு இருந்தது. இதையடுத்து போலீசார் சம்மனை வீட்டு சுவற்றில் ஒட்டினர்.

மேலும் நடிகை கஸ்தூரி போலீசாரின் நடவடிக்கைக்கு பயந்து தலைமைறவாகி உள்ளதாக தெரிவிக்கப்பட்டது. இதனால் தலைமறைவாக உள்ள நடிகை கஸ்தூரியை எழும்பூர் போலீசார் தீவிரமாக தேட தொடங்கி உள்ளனர்.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal