‘‘2026ல் கூட்டணி ஆட்சியில் பா.ம.க., இடம்பெறும்’’ என பா.ம.க., தலைவர் அன்புமணி சூசகமாக தெரிவித்தார். இதன் பின்னணியில் 2026ல் அ.தி.மு.க. கூட்டணியில் பா.ம.க., த.வெ.க., தே.முதி.க. உள்ளிட்ட கட்சிகள் இடம் பெறுவது உறுதியாக இருக்கிறது என்கிறார்கள்.

ராணிப்பேட்டையில் நிருபர்கள் சந்திப்பில், அன்புமணி ராமதாஸ் பேசும்போது, ‘‘ நான் தொடர்ந்து சொல்லி வருகிறேன். தமிழகத்தில் 2026ம் ஆண்டு கூட்டணி ஆட்சி நடக்கும். கூட்டணியில் பா.ம.க., இருக்கும். கூட்டணி ஆட்சி என்பது கூட்டணியில் இருப்பவர்கள் ஆட்சியில் பங்கு பெறுவார்கள். அனைத்து கட்சிகளும் அடங்கிய கூட்டணி அமையும்’’ என்றார்.

தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் தலைவர் விஜய்யுடன் கூட்டணி செல்வீர்களா என்ற கேள்விக்கு, ‘‘இன்னும் ஒரு வருடங்களுக்கும் மேல் இருக்கிறது. தேர்தல் நேரத்தில் கூட்டணி குறித்து முடிவு செய்வோம்’’ என அன்புமணி பதில் அளித்தார்.

கோவையில் முதல்வர் ஸ்டாலின் மக்கள் பணி செய்ய செந்தில் பாலாஜி கம்பேக் கொடுத்துள்ளார். பல தடைகளை அவர் கடந்து வந்துள்ளார் என பேசியது குறித்து நிருபர்கள் கேள்வி எழுப்பினர்.

இதற்கு, ‘‘இதே முதல்வர் தான் கடந்த ஆறு ஆண்டுகளுக்கு முன்பு அவர் தியாகி அல்ல ஒரு குற்றவாளி என கூறினார். இப்பொழுது ஜாமினில் வெளிய உள்ள செந்தில் பாலாஜிக்கு முதல்வர் ஏன் இவ்வளவு பாராட்டு கொடுக்கிறார் என தெரியவில்லை’’ என அன்புமணி பதில் அளித்தார்.

2026ல் அ.தி.மு.க. ஆட்சி அமைய ‘எந்த தியாகத்தையும் செய்யத் தயார்?’ என எடப்பாடி பழனிசாமி கூறியிருந்தார். அது கூட்டணியில் இடம் பெறும் கட்சிகளுக்கும் ஆட்சியில் பங்குகொடுப்பதுதான். அதே சமயம், சமீபத்தில் முதல் அரசியல் மாநாடு நடத்திய விஜய், ‘தி.மு.க.வும், பா.ஜ.க.வும்தான் எதிரி’ என ஓபனாக அறிவித்தார்.

கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் பா.ஜ.க.வுடன் கூட்டணி வைத்தது பா.ம.க.! அப்போதே, டாக்டர் ராமதாசுக்கு இதில் உடன்பாடு இல்லை. கூட்டணி குறித்து அறிவிக்கும் சில நொடிகளுக்கு முன்புகூட சந்தேகத்தை எழுப்பினார் டாக்டர் ராமதாஸ். உடனடியாக எல்.முருகன், அண்ணாமலை, உள்ளிட்டோர் தனி அறையில் பேசிய பிறகு கூட்டணி குறித்து அறிவித்தனர்.

மத்தியில்¢ பா.ஜ.க. அசுர பலத்தில் இருந்தபோது பா.ம.க. கூட்டணி வைத்தது. தமிழகத்தில் சிறிய கட்சிகளும் கூட்டணி வைத்தன. ஆனால், மத்தியில் முன்பிருந்த அசுர பலம் தற்போது கிடையாது. தவிர, தி.மு.க. கூட்டணியில் வி.சி.க. இருக்கும் வரை பா.ம.க. அங்கு செல்ல துளிகூட வாய்ப்பில்லை.

எனவே, தமிழகத்தில் 2026 சட்டமன்றத் தேர்தலில் அ.தி.மு.க., த.வெ.க., பா.ம.க., தே.மு.தி.க. ஆகிய கட்சிகளில் ஒருமித்த கருத்துடன் கூட்டணி அமைக்கும் என அரசியல் வல்லுநர்கள் தெரிவித்திருக்கிறார்கள்.

காரணம், தேர்தலுக்கு இன்னும் ஒருவருடத்திற்கு மேல் இருக்கும் நிலையில், தி.மு.க. தற்போதே 200 தொகுதிகளை குறிவைத்து அதற்கான வியூகங்களை வகுத்துள்ள நிலையில், அ.தி.மு.க.விலும் மறைமுகமாக கூட்டணி பேச்சுவார்த்தைகள் தொடங்கிவிட்டதாகவும், தேர்தல் தேதி அறிவிப்பதற்கு முன்பே கூட்டணிக் கட்சிகளின் தொகுதி பங்கீடும் அறிவிக்கப்படும் என்கிறார்கள்.

காரணம், கடந்த தேர்தல்களில் வேட்புமனுவை தாக்கல் செய்யும் நாள் வரை கூட்டணிப் பேச்சு வார்த்தையை தவிர்க்கும் முடிவில் அ.தி.மு.க. உறுதியாக இருக்கிறது என்கிறார்கள்.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal