‘திருமணம் ஆகாத இளைஞர்களுக்கு திருமணம் செய்து வைப்பேன்’ என சரத் பவார் கட்சி வேட்பாளர் ராஜேசாகேப் தேஷ்முக் தேர்தல் வாக்குறுதி அளித்துள்ளார்.

மஹாராஷ்டிரா சட்டசபை தேர்தல் ஒரே கட்டமாக, வரும் நவ.,20ம் தேதி நடக்கிறது. தேர்தலில் பா.ஜ.க, தலைமையில் ஒரு கூட்டணியும், காங்கிரஸ் – சரத் பவார் கட்சி தலைமையில் ஒரு கூட்டணியும் போட்டியிடுகின்றன. அனைத்து கட்சி வேட்பாளரும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அந்தவகையில், பீட் மாவட்டத்தில் உள்ள பார்லி தொகுதியில் போட்டியிடும் சரத் பவார் கட்சி வேட்பாளர் ராஜேசாகேப் தேஷ்முக் தேர்தல் வாக்குறுதி ஒன்று அளித்து அனைவரவது கவனத்தையும் ஈர்த்துள்ளார்.

சத்ரபதி சாம்பாஜிநகர் பகுதியில் தேர்தல் பிரசாரத்தில், ராஜேசாகேப் தேஷ்முக் பேசியதாவது: நான் எம்.எல்.ஏ., ஆகினால், திருமணம் ஆகாத இளைஞர்களுக்கு திருமணம் செய்து வைப்பேன். இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புகளை உருவாக்குவோம். மணப்பெண் தேடும் இளைஞர்களிடம் வேலை அல்லது தொழில் இருக்கிறதா? என மக்கள் கேட்கிறார்கள்.

முந்தைய ஆட்சியாளர்கள் ஒரு தொழிலையும் கொண்டு வரவில்லை. எனவே உள்ளூர் இளைஞர்களுக்கு வேலை இல்லாமல் திருமணம் நடப்பது கடினமாக உள்ளது. அவர்களது பிரச்னைக்கு நான் தீர்வு காண்பேன் இவ்வாறு அவர் பேசினார். அவரது வாக்குறுதி மஹாராஷ்டிரா அரசியலில் பெரும் பரபரப்பை கிளப்பியுள்ளது.

நாட்டில் ஆட்சியைப் பிடிக்கவும், வெற்றி பெறவும் என்னவெல்லாம் வாக்குறுதிகள் அளிக்க வேண்டி இருக்கிறது. கொடுமை…கொடுமை…!

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal