அ.தி.மு.க. பொதுக்குழு வழக்கில் இருந்து நீதிபதி ஜெயச்சந்திரன் விலகியிருப்பது அரசியல் வட்டாரத்தில் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கிறது.
அதிமுகவில் ஒற்றைத் தலைமை வேண்டும் என பிரச்சினைகள் எழுந்த சூழலில் அதிமுகவின் பொதுக்குழு கூட்டப்பட்டு அதில் எடப்பாடி பழனிசாமி பொதுச்செயலாளராக அறிவிக்கப்பட்டிருந்தார். இதனை ஓபிஎஸ் தரப்பு கடுமையாக எதிர்த்து வந்தது. தற்போது வரை அதிமுக ஒன்றிணைய வேண்டும் என ஓபிஎஸ் தரப்பு வலியுறுத்தி வருகிறது. தேர்தல் ஆணையத்தில் புகார், நீதிமன்றத்தில் வழக்கு என சட்டப் போராட்டங்களை ஓபிஎஸ் தரப்பு மேற்கொண்டது.
பொதுக்குழுவை எதிர்த்தும், அதிமுகவின் பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி அறிவிக்கப்பட்டதை எதிர்த்தும் உயர்நீதிமன்றத்தில் ஓபிஎஸ், வைத்திலிங்கம், மனோஜ் பாண்டியன் நீதிமன்றத்தில் உரிமையியல் வழக்கு தாக்கல் செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வந்தது. 2022 ஆண்டு தொடரப்பட்ட இந்த வழக்கில் உயர்நீதிமன்ற நீதிபதி ஜெ.ஜெயச்சந்திரன் ஏற்கனவே உத்தரவு பிறப்பித்திருந்தார்.
இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தபோது, ‘ஏற்கனவே இந்த வழக்கில் தான் உத்தரவுகளை பிறப்பித்துள்ளதால், இந்த வழக்கில் இருந்து விலகுகிறேன்’ என அறிவித்திருக்கிறார்!
மேலும் இந்த வழக்கை வேறு நீதிபதி முன்பு பட்டியலிடும் வகையில் தலைமை நீதிபதிக்கு கடிதம் எழுதுவதாகவும் அறிவித்தார்.