உட்கட்சி தேர்தலை நடத்திட அதிமுக பொதுச் செயலாளரான எடப்பாடி பழனிசாமி முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சரிவர பணியாற்றாத மாவட்டச் செயலாளர்கள் மற்றும் ஒன்றியச் செயலாளர்களுக்கு எடப்பாடி பழனிசாமி கல்தா கொடுக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியிருக்கிறது.
அதிமுகவில் ஒருங்கிணைப்பாளர் & – இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகள் இருந்த போது கடந்த முறை தேர்தல் நடத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் தற்போதைக்கு உள்ளாட்சி தேர்தல் நடக்க வாய்ப்பில்லை என்கின்றனர் ஆளும் தரப்பில் இருந்து!
மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தின்படி இந்தியாவில் உள்ள அனைத்து அங்கீகரிக்கப்பட்ட கட்சிகளிலும் குறிப்பிட்ட ஆண்டுகளுக்கு ஒரு முறை உட்கட்சி தேர்தல் நடத்தப்பட வேண்டும்.
அதன்படி, அதிமுக எடப்பாடி பழனிசாமி, ஓ பன்னீர்செல்வம் ஒருங்கிணைப்பாளர்களாக இருந்தபோது உட்கட்சி தேர்தல் நடந்தாலும் முறையாக நடக்கவில்லை என கட்சியினர் தெரிவித்தனர். அதன்பின், ஓபிஎஸ் – கட்சியிலிருந்து நீக்கப்பட்டார். பின்னர் பல்வேறு விவகாரங்களுக்கு பிறகு அதிமுக பொதுச் செயலாளராக தேர்தெடுக்கப்பட்டார். இந்நிலையில் தற்போது உறுப்பினர் அட்டை வரை இபிஎஸ் கையெழுத்துடன் தான் வழங்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் விரைவில் ஊரக உள்ளாட்சி தேர்தலுக்கான அறிவிப்புகள் வரலாம். எனவே, அப்போது கட்சி ஒன்றாக இருந்தபோது வென்றவர்கள் தான் தற்போதும் உள்ளனர். சிலர் ஓபிஎஸ் ஆதவாளர்களாக மாறியுள்ளனர். பலர் பிற கட்சிகளுக்கும் மாறியுள்ளனர். எனவே, அதிமுகவில் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி, கிளைக் கழகம் உள்ளிட்ட நிர்வாகிகள் உட்கட்சி தேர்தலை விரைவில் நடத்திட அதிமுக தலைமை முடிவெடுத்துள்ளது. அதற்காக கட்சியின் பொதுச்செயலர் முக்கிய நிர்வாகிகளுடன் ஆலோசனை மேற்கொண்டு அதற்கான அறிவிப்பையும் வெளியிடவுள்ளார்.
இது குறித்து அ.தி.மு.க. மூத்த நிர்வாகிகள் சிலரிடம் பேசிய போது, ‘‘கடந்த 2019ல் ஊரக உள்ளாட்சி அமைப்புகளான கிராம ஊராட்சி, ஊராட்சி ஒன்றியம், மாவட்ட ஊராட்சிகளுக்கு தேர்தல் நடந்தது. அப்போது தமிழகத்தில் அ.தி.மு.க., ஆட்சிதான் நடந்தது. எனவே, 2026 தேர்தலுக்கு முன்னோட்டமாக ஊரக உள்ளாட்சி தேர்தல் முதலே வெற்றி முகமாக மாற வேண்டும். அதற்காக கட்சித் தலைமை பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. பொதுச்செயலராக எடப்பாடி பழனிச்சாமி பொறுப்பேற்ற பின் பெரிதாக உட்கட்சி தேர்தல் ஏதும் நடக்கவில்லை. தேர்தலை நடத்தி நம்பிக்கையான ஆட்களை நியமித்து வெற்றி பெருவது என முடிவெடுக்கப்பட்டுள்ளது.
நகராட்சி, மாநராட்சிக்கும் சேர்த்தே தேர்தல் வரலாம் என்று ஒரு பேச்சும் அடிபடுகிறது. எனவே, உட்கட்சி தேர்தலை தற்போது விரைந்து நடத்தி முடித்து 2026 எதிர்வரும் அனைத்து தேர்தலுக்கும் ஆயத்தமாக கட்சி தயாராகி வருகிறது” என்றனர்.
இந்நிலையில் தற்போதைக்கு உள்ளாட்சி தேர்தல் நடக்க வாய்ப்பில்லை என்கின்றனர் தமிழக அரசு வட்டாரத்தினர். கடந்த 2019 ஆம் ஆண்டில் 27 மாவட்டங்களுக்கு ஊரக உள்ளாட்சித் தேர்தல் நடைபெற்றது. வார்டு வரையறை பிரச்சினை, எல்லை தீர்மானம் உள்ளிட்ட காரணமாக ஒன்பது மாவட்டங்களில் தாமதமாக அதாவது 21 மாதங்கள் கழித்து தேர்தல் நடத்தப்பட்டது.
27 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சித் தேர்தல் 2019 ஆம் ஆண்டில் நடைபெற்ற நிலையில், மற்ற ஒன்பது மாவட்டங்களுக்கு 2021ஆம் ஆண்டு நடைபெற்றது. இந்த நிலையில் 27 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சித் தேர்தலில் வெற்றி பெற்று பதவி ஏற்ற தலைவர், வார்டு கவுன்சிலர், ஒன்றிய கவுன்சிலர் உள்ளிட்டவர்களின் பதவிக்காலம் இன்னும் சில நாட்களில் நிறைவடைகிறது.
ஆனால் ஊரக உள்ளாட்சி தேர்தல் பணிகளை தொடங்குவதில் பல்வேறு சிக்கல்கள் இருப்பதாகவும் தேர்தல் நடைபெறுவதே தள்ளிப் போகலாம் என அதிகாரிகள் மட்டத்தில் பேசப்படுகிறது. அதாவது தற்போது சில மாவட்டங்களில் கிராமங்களை நகராட்சி மற்றும் மாநகராட்சிகளுடன் இணைப்பதற்காக நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அதுமட்டுமல்லாமல் தேர்தலை நடத்துவதில் அரசியல் ரீதியாகவும் சில சிக்கல் இருப்பதாக திமுக தலைமை கருதுகிறது. எனவே தற்போதைக்கு உள்ளாட்சி தேர்தல் நடத்த வாய்ப்பில்லை எனவே கூறுகின்றனர்.
அ.தி.மு.க.வில் நடக்கும் உட்கட்சித் தேர்தல் குறித்து எடப்பாடி பழனிசாமிக்கு நெருக்கமான வட்டாரத்தில் சிலரிடம் பேசினோம். ‘‘சார், வரவிருக்கின்ற உட்கட்சித் தேர்தலில் கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் சரியாக பணியாற்றாத மா.செ.க்கள் மற்றும் ஒ.செ.க்களின் பதவிகளை பறிக்க எடப்பாடி முடிவு செய்திருக்கிறார். அதே சமயம் தனக்கும், கட்சிக்கும் விசுவாசமானவர்களுக்கு பதவியை வழங்க இருக்கிறார் எடப்பாடி பழனிசாமி’’ என்றனர்.