”தி.மு.க., கூட்டணியில் இருக்கும் கட்சிகள் எல்லாம், கொள்கை இல்லாத கட்சிகள்,” என்று அ.தி.மு.க., பொதுச்செயலாளர் இ.பி.எஸ்., கூறினார்.

சென்னையில் நிருபர்கள் சந்திப்பில், அ.தி.மு.க., பொதுச்செயலாளர் இ.பி.எஸ்., கூறியதாவது: ஒவ்வொரு கட்சிக்கும் ஒரு கொள்கை இருக்கிறது. அந்த கொள்கை அடிப்படையில் தான் அவர்கள் செயல்படுவார்கள். அந்த கட்சி தலைவர்கள் சொல்வது சரியா, தவறா என்று தீர்மானிக்க நமக்கு அதிகாரம் கிடையாது. முதல் மாநாடு நடத்தி இருக்கிறார். விஜய் தனது கருத்தை கூறியிருப்பது அவரது சுதந்திரம்.

கொள்கையே இல்லாத கட்சி தி.மு.க., கூட்டணியில் அங்கம் வகிக்கும் கட்சிகள் தான். தி.மு.க., மற்றும் கூட்டணியில் அங்கம் வகிக்கும் கட்சி எல்லாம் ஒரே கொள்கை கொண்ட கட்சியா? அப்படி இருந்தால் ஒரே கட்சியாக இருந்து இருக்கலாம். தனி தனி கட்சி தேவையில்லையே.

அ.தி.மு.க.,வை பொறுத்தவரைக்கும் கூட்டணி என்பது வேறு. கொள்கை என்பது வேறு. எங்களுடைய கொள்கையின் படிதான் செயல்படுவோம். கூட்டணி என்பது தேர்தல் நேரத்தில் அமைக்கப்படுவது ஆகும். திருப்பி திருப்பி சொல்கிறேன். கூட்டணி என்பது தேர்தல் நேரத்தில், சூழ்நிலைக்கு தகுந்த படி அமைப்பது ஆகும்.

தேர்தலுக்கு இன்னும் ஒன்றரை ஆண்டுகள் உள்ளன. கொள்கை என்பது நிலையானது. நிலையான கொள்கை கொண்ட கட்சி அ.தி.மு.க., எங்களது கொள்கையில் இருந்து மாறமாட்டோம். எங்களது தலைவர்கள் வழிகாட்டுதல் படி தான் செயல்பட்டு கொண்டு இருக்கிறோம். தி.மு.க., மற்றும் பா.ஜ.,வுக்கு இடையே மறைமுக உறவு இருக்கிறது.

அ.தி.மு.க., ஓட்டுக்களை விஜய் மட்டுமல்ல, யாரும் ஈர்க்க முடியாது. எம்.ஜி.ஆர்., பெயரை சொன்னால் தான் கட்சி நடத்த முடியும் என்ற நிலை இருக்கிறது. இதனால் எல்லாரும் எம்.ஜி.ஆர்., பெயரை சொல்லி கொண்டு இருக்கிறார்கள்.

ஒவ்வொரு கட்சிக்கும் ஒரு கொள்கை இருக்கிறது. அந்த அடிப்படையில் கட்சி தலைவர்கள் செயல்படுவார்கள். அந்த கட்சி தலைவர்கள் சொல்வது சரியா? தவறா? என்பது குறித்து தீர்மானிப்பதற்கு நமக்கு அதிகாரம் கிடையாது. ஒவ்வொரு அரசியல் கட்சி தலைவர்களுக்கும் ஒரு பார்வை இருக்கிறது. எத்தனை ஆண்டு காலம் நாங்கள் ஆட்சியில் இருந்தோம் என்று தெரியும்.

நாங்கள் கடைபிடித்த அதே கொள்கையை தொடர்ந்து கடைப்பிடிப்போம். ஒரு அரசியல் தலைவர் எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு உதாரணமாக வாழ்ந்து காட்டியவர் எம்.ஜி.ஆர்., மக்களுக்கு எதிரான தி.மு.க.,வின் செயலுக்கு அ.தி.மு.க., தான் எதிர்ப்பு குரல் கொடுத்தது. 41 மாதம் தி.மு.க., ஆட்சியில் மக்களுக்கு ஏற்பட்ட இன்னல்கள், துயரங்கள், வேதனைகள், விலைவாசி உயர்வு, சட்டம் ஒழுங்கு பிரச்னை உள்ளிட்டவற்றிக்கு நடவடிக்கை எடுக்க கோரி தொடர்ந்து வலியுறுத்தினோம். தி.மு.க.,வை வீழ்த்த போராடி கொண்டு இருக்கிறோம். சில நேரம் வெற்றி பெற்று இருக்கிறோம். சில சமயத்தில் வாய்ப்பை இழந்து போய் இருக்கிறோம். இவ்வாறு இ.பி.எஸ்., கூறினார்.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal