அரசு நிகழ்ச்சியில் துணை முதல்வர் உதயநிதி தி.மு.க., சின்னத்துடன் டி-ஷர்ட் அணிந்ததற்கு எதிரான வழக்கை விசாரித்த சென்னை ஐகோர்ட் நீதிபதிகள், ‘‘அரசு ஊழியர்களுக்கு விதிக்கப்பட்ட ஆடைக் கட்டுப்பாடு குறித்த அரசாணை அரசியல் சட்ட பதவி வகிப்போருக்கும் பொருந்துமா’’ என தமிழக அரசு ஒரு வாரத்தில் பதிலளிக்க வேண்டும்’ என உத்தரவிட்டனர்.
துணை முதல்வர், அமைச்சர் உதயநிதி எந்த நிகழ்ச்சிகளில் பங்கேற்றாலும், எங்கு சென்றாலும் டி-ஷர்ட் அணிந்து செல்வதை பார்க்கலாம். அவர் சட்டை அணிந்து வரவேண்டும் என்று அ.தி.மு.க., ஏற்கனவே வலியுறுத்தி வருகிறது. உதயநிதியை சட்டை அணிந்து வரவும், அரசு நிகழ்ச்சிகளில் முறைப்படியான ஆடை குறியீட்டை பின்பற்றக் கோரியும் சென்னை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டு உள்ளது.
சென்னையை சேர்ந்த வக்கீல் சத்யகுமார் என்பவர் இந்த மனுவை தாக்கல் செய்தார். 2019 ஜூன் 1ம் தேதியிட்ட அரசு உத்தரவு எண்.62ன்படி அனைத்து அரசு ஊழியர்களும் நேர்த்தியான, சுத்தமான, முறைப்படியான உடைகளை உடுத்த வேண்டும் என்பதை உதயநிதி பின்பற்றாமல் உள்ளர் என்று மனுவில் அவர் குறிப்பிட்டு இருந்தார். இந்த வழக்கு இன்று(அக்.,29) சென்னை ஐகோர்ட்டில் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள் கூறியதாவது:
- டிஷர்ட் கே ஷூவல் உடையா? அரசியல் சட்ட பதவி வகிப்போருக்கு ஆடை கட்டுப்பாடு உள்ளதா?
- அரசு ஊழியர்களுக்கு விதிக்கப்பட்ட ஆடைக் கட்டுப்பாடு குறித்த அரசாணை அரசியல் சட்ட பதவி வகிப்போருக்கும் பொருந்துமா ? என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.
‘அரசு ஊழியர்களுக்கு விதிக்கப்பட்ட ஆடைக் கட்டுப்பாடு குறித்த அரசாணை அரசியல் சட்ட பதவி வகிப்போருக்கும் பொருந்துமா என தமிழக அரசு ஒரு வாரத்தில் பதிலளிக்க வேண்டும்’ என நீதிபதிகள் உத்தரவிட்டனர்.