விழுப்புரம் அருகே நேற்று முன்தினம் நடைபெற்ற தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாட்டில் பேசிய அக்கட்சித் தலைவர் விஜய், 2026 தேர்தலில் வெற்றி பெற்றால் கூட்டணி கட்சிகளுக்கு ஆட்சியில் பங்கு அளிக்கப்படும் என்று அறிவித்தார். இதுகுறித்து அரசியல் கட்சியினர் தாங்கள் தெரிவித்து வருகின்றனர்.
சட்டப்பேரவை தலைவர் மு.அப்பாவு:
புஸ்ஸி ஆனந்த் பற்றி அதிக விஷயங்கள் வருகின்றன. அவர், புதுச்சேரியில் உள்ள பாஜக தலைவருடனும், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவுடனும் நெருக்கமாக இருப்பதாக தகவல்கள் வருகின்றன. ஏற்கெனவே, பாஜகவில் இருந்து ரஜினியை அரசியலுக்கு கொண்டுவர முயற்சித்தனர். அவர்வரவில்லை. அவருக்கு பதிலாக விஜய்யை ஏற்பாடு செய்திருப்பார்களோ என்ற சந்தேகம் ஏற்படுகிறது.
முன்னாள் ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன்:
மாநாட்டில் சுதந்திர போராட்ட வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தியது, பேசும் முன் தாய், தந்தையை வணங்கியது, அடையாளத்தை உறுதிப்படுத்தியது, பதநீரை மாநில பானமாக அறிவிப்பதாக கூறியது, தாக்குதல் அரசியல் இல்லாமல் ஆரோக்கிய அரசியலை முன்னெடுப்பேன் என்பது எல்லாம் பாராட்டுக்குரியது. அதிலும் அரசியல் எதிரி என்று திமுகவை விஜய் அடையாளப்படுத்தியது வரவேற்கத்தக்கது.
அதேநேரம் பாஜகவை மறைமுகமாக தாக்கியதாக சொல்வதில் எனக்கு உடன்பாடு இல்லை. மக்களை பிளவுபடுத்தவில்லை என்ற அவரது கொள்கைதான் பிரதமர் மோடியின் அனைத்து திட்டங்களிலும் உள்ளது. ஆளுநர்களை நீக்க வேண்டும் என்ற கருத்தில் எனக்கு உடன்பாடு இல்லை. அதிகாரப் பகிர்வு என்ற ஒரு ஆரோக்கியமான அரசியலை முன்னெடுக்கும் விஜய், மக்களுக்கான சேவையை முன்னெடுத்து செல்லட்டும்.
விசிக தலைவர் திருமாவளவன்:
முதல் அடி மாநாடு. அடுத்த அடி ஆட்சிப் பீடம் என்பதாக அவரது விழைவு அதீத வேட்கையையும், அசுர வேகத்தையும் கொண்டதாகவுள்ளது. அது புராணக் கதைகளில் வரும் வாமன அவதாரத்தால் மட்டுமே முடியும். கூட்டணியில் இணைய வருவோருக்கு ஆட்சியதிகாரத்தில் பங்கு என்கிற ஒரு புதிய நிலைபாட்டை தமிழக அரசியல் களத்தில் முதன் முதலாக முன்மொழிந்துள்ளார்.
ஆனால், யுத்த களத்தில் உரிய நேரத்தில் உரிய இலக்கில் வீசியதாக தெரியவில்லை. அதுஅவர் எதிர்பார்க்கும் விளைவை ஏற்படுத்துமா எனத் தெரியவில்லை. ஆக்கப்பூர்வமான, புதுமையான நிலைப்பாடுகளோ செயல்திட்டங்களோ அவற்றுக்கான புரட்சிகர முன்மொழிவுகளோ ஏதுமில்லை.
அமைச்சர் எஸ்.ரகுபதி:
கூட்டணி கட்சிக்கு ஆட்சியில் பங்கு அளிக்கப்படும் என்று பேசியுள்ள விஜய், முதலில் தேர்தலை சந்திக்க வேண்டும். வாக்குகளை பெற வேண்டும். பெரும்பான்மை பெற்று ஆட்சிக்கு வரவேண்டும். அதன் பிறகுதான் ஆட்சியில் பங்கு குறித்து பேச வேண்டும். திமுக கூட்டணியிலிருந்து எந்தக் கட்சியும் பிரிந்து செல்லாது.
இதுவரை கட்சிகளில் ஏ-டீம், பி-டீம் பார்த்து இருக்கிறோம். நடிகர் விஜயின் கட்சி பாஜகவின் சி-டீம். அதேபோல, அதிமுகவில் உள்ள தொண்டர்களை தனது கட்சிக்கு இழுக்க வேண்டும். பாஜகவுக்கு வலுவூட்ட வேண்டும் என்பதற்காகத்தான் அதிமுகவைப் பற்றி விஜய் குறிப்பிடாமல் இருந்திருக்கலாம்.
காங். மாநிலத் தலைவர் செல்வப்பெருந்தகை:
விஜயின் கொள்கைகள், கோட்பாடுகள் ஆட்சிக்கு எதிரான மனநிலையில் இருப்பவர்களின் வாக்குகள் எதிரணியினருக்கு போகாமல் மடைமாற்றம் செய்யத்தான் பயன்படும். எதிர்ப்பு வாக்குகள் விஜய்க்கு போகலாம். இது குறித்து இப்போது ஆருடம் சொல்ல முடியாது. மத்திய, மாநில அளவில் அதிகாரத்தை பார்த்தவர்கள்தான் நாங்கள். அதனால் எங்களுக்கு அதிகாரத்தின் மீது நாட்டம் கிடையாது. அதிகாரம் எங்களுக்கு புதிது கிடையாது. மக்கள் தீர்மானித்தால் தமிழகத்திலும் கூட்டணி ஆட்சி சாத்தியம். ஆட்சி, அதிகாரத்தில் பகிர்வு குறித்து தேசிய தலைமைதான் முடிவு செய்யும்.