த.வெ.க. மாநாட்டை அ.தி.மு.க. வரவேற்றிருப்பது, 2026ல் கூட்டணி அமைக்கும் வாய்ப்பு இருக்கிறதா என அரசியல் பார்வையாளர்கள் அலசி வருகிறார்கள்!

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கந்த்தின் கொள்கைகள் வரவேற்கத்தக்கவை; தமிழக வெற்றிக் கழகத்தால் அண்ணா திமுகவுக்கு எள்முனையளவும் பாதிப்பும் இல்லை; திமுகவுக்குதான் பாதிப்பு ஏற்படும் என அதிமுக மூத்த தலைவர்களில் ஒருவரும் முன்னாள் அமைச்சருமான ஆர்பி உதயகுமார் தெரிவித்துள்ளார். மேலும் தமிழக வெற்றிக் கழக மாநாட்டில் எம்ஜிஆரை சுட்டிக் காட்டி நடிகர் விஜய் பேசியிருப்பதும் வரவேற்கத்தக்கது என்றார் ஆர்பி உதயகுமார்.

மதுரையில் இன்று ஆர்பி உதயகுமார் செய்தியாளர்களிடம் கூறியதாவது: ‘‘பசும்பொன் முத்துராமலிங்க தேவர் நினைவிடத்துக்கு வரும் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு 2,000 தொண்டர் படையினர் சீருடையுடன் வரவேற்பு அளிக்க உள்ளனர். இதற்கான பயிற்சி முகாம் நடத்தப்படுகிறது.

விக்கிரவாண்டியில் நடிகர் விஜய் நடத்திய தமிழக வெற்றிக் கழகத்தின் சிறந்த துவக்கம். கிராண்ட் ஓபனிங்.. பிறந்த குழந்தைக்கு பெயர் சூட்டு விழா நடத்தி இருக்கிறார். இளைஞர்கள் தன்னெழுச்சியாக மாநாட்டில் பங்கேற்றுள்ளனர். 10 நாட்களுக்கு முன்னர் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு இல்லை; திமுக வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை என அதிமுக உண்ணாவிரதத்தில் இளைஞர்கள் பங்கேற்றனர். ஆகையால் இளைய சமுதாயம் திமுகவுக்கு எதிராக இருக்கிறது. ஜனநாயகத்தை குழிதோண்டிப் புதைத்துவிட்டு மன்னராட்சிக்கு மகுடம் சூட்டுவதை உதயநிதிக்கு மகுடம் சூட்டுவதை ஏற்கவில்லை என்பதை எடுத்துக்காட்டும் விதமாகவே இளைஞர்கள் அதிமுக உண்ணாவிரதத்தில் பங்கேற்றனர். தற்போது நடிகர் விஜய் மாநாடும் இந்த செய்தியையே சொல்கிறது.

திமுக மிருகபலத்துடன் இருப்பதால் அனுபவம், தகுதி, உழைப்பும் இல்லாமல் வாரிசு அரசியலாக உதயநிதி முன்னிறுத்தப்படுகிறார். இதனை எல்லாம் எதிர்த்துதான் இளைய சமுதாயம், விஜய் மாநாட்டில் தன்னெழுச்சியாக பங்கேற்றுள்ளனர். பிறப்பொக்கும் எல்லாம் உயிர்க்கும் என்பதுதான் அண்ணா திமுகவின் கோட்பாடு. இதனை எம்ஜிஆர்தான் முதன் முதலாக தமிழ்நாட்டு மக்களுக்கு தனி இயக்கம் தொடங்கி தெரிவித்தார். எம்ஜிஆரை நடிகர் விஜய் தன் மாநாட்டில் சுட்ட்டிக்காட்டி பேசியதை வரவேற்கிறேன்’’ இவ்வாறு ஆர்பி உதயகுமார் தெரிவித்தார்.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal