பெண் பத்திரிக்கையாளருக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக மேற்கு வங்கம் மார்க்சிஸ்ட் மூத்த தலைவர் தன்மோய் பட்டாச்சார்யா மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

மேற்கு வங்கத்தின் வடக்கு டம் டம் தொகுதி முன்னாள் எம்.எல்.ஏ.,வும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவருமான தன்மோய் பட்டாச்சார்யாவை, அவரது வீட்டுக்கே சென்று இன்டர்வ்யூ செய்த பிரபல பெண் பத்திரிக்கையாளர் ஒருவர் சமூகவலைதளத்தில் பகீர் குற்றச்சாட்டை வைத்திருந்தார்.

அதாவது, இன்டர்வ்யூ செய்யச் சென்ற தன்னிடம் தன்மோய் பட்டாச்சார்யா தவறான முறையில் நடந்து கொண்டதாக குற்றம்சாட்டியிருந்தார். இது தொடர்பாக மார்க்சிஸ்ட் கட்சியினர் பேசாதது ஏன் என்றும் கேள்வி எழுப்பியிருந்தார். ஆனால், பெண் பத்திரிக்கையாளரின் இந்தக் குற்றச்சாட்டுக்கு பட்டாச்சார்யா மறுப்பு தெரிவித்திருந்தார்.

அதேவேளையில், இந்தக் குற்றச்சாட்டை தொடர்ந்து பட்டாச்சார்யாவை சஸ்பெண்ட் செய்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தலைமை, இது தொடர்பாக விசாரணை நடந்து வருவதாகவும், விசாரணை குழு அளிக்கும் அறிக்கையின் அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்துள்ளது.

‘இந்தக் குற்றச்சாட்டை கவனத்தில் எடுத்துள்ளோம். இதுபோன்ற செயல்களுக்கு கட்சி துணைபோகாது. பட்டாச்சார்யா இன்டர்வ்யூக்களை அவரது வீட்டில் ஏற்பாடு செய்வது ஏன்?’ என்று மார்க்சிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் சலீம் கேள்வி எழுப்பியுள்ளார்.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal