இன்று மாலையில் நடக்கும் த.வெ.க. மாநாட்டிற்கு லட்சக்கணக்கில் குவியும் தொண்டர்களைப் பார்க்கும் போது, எம்.ஜி.ஆருக்குப் பின் திரையுலகில் இருந்து வரும் விஜய் சாதிப்பார்! வரலாற்றை மாற்றும் ‘வடக்கு’ என்கிறார்கள் அரசியல் நிபுணர்கள்!
தமிழ் திரையுலகின் உச்ச நட்சத்திர நடிகர் விஜய். இவருக்கு கோடிக்கணக்கான ரசிகர்கள் உள்ள நிலையில் இவர் கடந்த பிப்ரவரி மாதம் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியைத் தொடங்கினார். கட்சியைத் தொடங்கிய விஜய் தன்னுடைய கொள்கைகள், தமிழக வெற்றிக் கழகத்தின் நிலைப்பாடு குறித்து எதுவும் சொல்லாமல் இருந்தார்.
இந்த நிலையில், த.வெ.க.வின் முதல் அரசியல் மாநாடு இன்று விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் நடக்கிறது. ஒட்டுமொத்த தமிழ்நாட்டு மக்களும் நடிகர் விஜய் இந்த மாநாட்டில் என்ன பேசப்போகிறார்? என்ற எதிர்பார்ப்புடன் உள்ளனர்.
தமிழக அரசியல் களத்தைப் பொறுத்தவரை நல்ல நேரம், ராசி, அதிர்ஷ்டம் ஆகியவற்றை பார்ப்பது பெரும்பாலான கட்சிகள் வழக்கமாக வைத்துள்ளனர். அந்த வகையில் தமிழ்நாட்டில் அரசியல் கட்சி தொடங்குபவர்கள் யாராக இருந்தாலும் தங்களது முதல் அரசியல் மாநாட்டை தென் தமிழகத்திலோ அல்லது தமிழ்நாட்டின் மையப்பகுதியிலோ நடத்துவதுதான் வழக்கம் ஆகும். அதாவது, தென் தமிழகத்தின் தலைநகராக கருதப்படும் மதுரையிலோ அல்லது தமிழ்நாட்டின் மையப்பகுதியான திருச்சியிலோ நடத்துவதுதான் வழக்கமான ஒன்றாகும்.
தி.மு.க.வில் இருந்து எம்.ஜி.ஆர். நீக்கப்பட்டபோது அவர் புதிய கட்சி தொடங்க வேண்டும் என்று முதன்முதலில் பேரணி நடத்தியவர்கள் திருச்சி ரசிகர்கள். அதன்பின்பு. அ.தி.மு.க.வைத் தொடங்கிய பிறகு எம்.ஜி.ஆர். அ.தி.மு.க.வின் முதல் மாநாட்டையும், பொதுக்குழுவையும் திருச்சியில் நடத்தினார். 1972ம் ஆண்டு அ.தி.மு.க.வின் முதல் மாநாடு திருச்சியில் நடைபெற்றது. திருச்சியில் கட்சி மாநாட்டை முதன்முறையாக நடத்திய பிறகு எம்.ஜி.ஆரின் அரசியல் வெற்றியானது நாடு அறிந்தது ஆகும்.
எம்.ஜி.ஆரின் வழியில் திருச்சியில் முதல் அரசியல் மாநாட்டை நடத்தினால் அரசியல் பயணம் வெற்றிகரமாக அமையும் என்பது தலைவர்களின் நம்பிக்கை ஆகும்.திருச்சியைப் போலவே மதுரையும் அரசியல் கட்சி தொடங்குவதற்கான முக்கிய இடமாகவே திகழ்கிறது. அதற்கு காரணமும் எம்.ஜி.ஆராகவே உள்ளார். தமிழ் திரையுலகில் நடிகராக இருந்து முதலமைச்சரான ஒரே நடிகர் என்ற பெருமைக்குரிய எம்.ஜி.ஆர். முதன்முதலில் தனது ரசிகர் மன்றத்தை தொடங்கியது மதுரையிலே ஆகும்.
எம்.ஜி.ஆர். தி.மு.க.வில் இருந்து நீக்கப்பட்டு அ.தி.மு.க.வை தொடங்கும் முன்பு மதுரையில் உள்ள மேங்காட்டுப் பொட்டல் என்ற இடத்தில் தன்னுடைய ரசிகர்கள் மத்தியில் மாபெரும் கூட்டத்தை நடத்தினார். 1980 சட்டசபைத் தேர்தலில் மதுரை மேற்கில் போட்டியிட்டு அபார வெற்றியும் பெற்றார் எம்.ஜி.ஆர்.
எம்.ஜி.ஆரின் நடிப்பு, அரசியல் வெற்றி என்பது இறுதிவரை வீழ்த்தப்படாத ஒன்றாகவே இருந்தது. இதன் காரணமாகவே, கருப்பு எம்.ஜி.ஆர். என்று ரசிகர்ளால் கொண்டாடப்பட்ட கேப்டன் விஜயகாந்தும் தனது அரசியல் கட்சியான தே.மு.தி.க.வை மதுரையில் 2005ம் ஆண்டு தொடங்கினார். கட்சி தொடங்கிய 6வது ஆண்டிலே தி.மு.க.வை பின்னுக்குத் தள்ளி கருணாநிதி இருக்கும்போதே எதிர்க்கட்சி அந்தஸ்தை பெற்று எதிர்க்கட்சித் தலைவர் ஆனார் விஜயகாந்த்.
உலகநாயகன் என்று மக்களால் கொண்டாடப்படும் நடிகர் கமல்ஹாசன் தனது மக்கள் நீதிமய்யம் கட்சியையும் மதுரை மண்ணிலே தொடங்கினார். அவர் தற்போது தி.மு.க. கூட்டணியில் உள்ளார்.
இதுவரை தமிழக அரசியலில் திரையுலகில் இருந்து வந்து ஆதிக்கம் செலுத்திய எம்.ஜி.ஆர்., விஜயகாந்த் இருவருமே தங்களது அரசியல் பயணத்தை திருச்சி மற்றும் மதுரையிலே தொடங்கியதால் இந்த இரு நகரங்களும் அரசியல்வாதிகளைப் பொறுத்தவரை ஒரு புதிய தொடக்கத்திற்கு ஏற்ற நகரமாகவே கருதப்படுகிறது. இதனால், விஜய்யும் தனது முதல் அரசியல் மாநாட்டை தமிழ்நாட்டின் மையப்பகுதியாக இருக்கும் திருச்சியிலோ அல்லது மதுரையிலோ நடத்துவார் என்றே எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால், யாரும் எதிர்பாரக்காத வகையில் புதிய அத்தியாயமாக விஜய் முதன்முறையாக வட தமிழகத்தில் தன்னுடைய அரசியல் மாநாட்டை நடத்துகிறார். விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் உள்ள வி சாலையில் தனது மாநாட்டைத் தொடங்குகிறார். விஜய்யின் இந்த அரசியல் பயணம் வெற்றி பெற்றால் இனி தமிழ்நாட்டில் உருவாகும் புதிய கட்சிகளின் தொடக்கம் வட தமிழகத்தில் இருந்து ஆரம்பமாகும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.
தமிழ்த் திரையுலகில் எம்.ஜி.ஆருக்குப் பின் அரசியல் கட்சித் தொடங்கிய சிவாஜி, டி.ராஜேந்திரன், சரத்குமார், கமல்ஹாசன் யாரும் ஜெயிக்கவில்லை. விஜயகாந்த் மட்டும் எதிர்க்கட்சித் தலைவர் அந்தஸ்தைப் பெற்றார். ஆனால், நடிகர் விஜய் மீதும் தமிழகத்தின் எதிர்காலமாக கருதக்கூடிய இளைஞர்கள் வைத்திருக்கும் நம்பிக்கை எம்.ஜி.ஆருக்குப் பின் திரைத்துறையில் இருந்து வரும் விஜய் ஒரு மாற்று சக்தியாக, எம்.ஜி.ஆர். இடத்தைப் பிடிப்பார் என்கிறார்கள். அதே போல், புதிதாக அரசியல் கட்சித் தொடங்கியவர்கள் யாரும் வடக்கில் முதல் அரசியல் மாநாடு நடத்தவில்லை. அந்த வரலாற்றையும் விஜய் மாற்றிக் காட்டுவார் என்கிறார்கள் அரசியல் நிபுணர்கள்!